Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாட்டிறைச்சியின் பேரால் முஸ்லிம்கள் மீதான வலம்புரியின் விஷமத்தனம்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்று ஒரு வழக்கு இருக்கிறது. இன்றைய (11.11.2014) வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் அந்த வழக்கிற்குச் சரியான உதாரணமாக  இருக்கிறது. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்கள் இரண்டுவிதமானவர்கள் ஒருவகையினர் அறியாமையால் அதைச் செய்பவர்கள். மற்றவகையினர் விஷக்கருத்துக்களைப் பரப்புவதற்காகச் செய்பவர்கள். வலம்புரியின் இன்றைய ஆசிரியர் தலையங்கம் இந்த இருவகையினதாகவும் இருக்கிறது.

ஆசிரியர் தலையங்கத்தின் முற்பகுதி விளக்கமற்ற கதையைச்சொல்ல,  இரண்டாம் பகுதி இந்துக்கள் மட்டுமே வாழ்கின்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க முஸ்லிம் மாட்டிறைச்சிக் கடைகளை மூடி உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது. இதற்காக 'ஹெல உறுமய'வின் தலைவர் ஓமல் பி சோபித தேரர் ''முஸ்லிம் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது '' என்று வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி வலியுறுத்துகிறது. தொடர்ந்து நஞ்சை விதைக்கும் அவ்வாசிரியர் தலையங்கத்தை அவ்வாறே தருகிறோம்.

''சோபித தேரர் விடுத்த கோரிக்கை மிகவும் முக்கியமானது. முஸ்லிம் மக்கள் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்பதற்கு அப்பால், வடமாகாணத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாக மூடிவிடுவதற்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் எனக் கேட்பது பொருத்தமானதாகும். வடபகுதியில் மாட்டிறைச்சிக் கடைகள் இயங்குவது சைவமக்களை அவமானப்படுத்தும் செயலாகும். பசுவைத்தாயாகப் போற்றுகின்ற சைவ மக்கள் வாழும் வடபகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது. எனவே வடபுலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை முழுமையாகத் தடைசெயவதற்குப் பிற சமயங்களும் உதவ வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் உதவுவது கட்டாயம். 

முஸ்லிம் மக்கள் பன்றியை வெறுப்பவர்கள். அவர்கள் வாழுகின்ற பிரதேசத்தில் பன்றி இறைச்சிக் கடையை எந்தச் சமயத்தவர்கள் வைத்திருந்தாலும் அது அநீதியானது. எனவே இதுபோல, சைவ மக்கள் பெருமளவில் வாழ்கின்ற வடபுலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை யார் வைத்திருந்தாலும் அது ஏற்புடையதன்று. ஆகவே வடபுலத்தில் மாட்டிறைச்சிறைச்சிக் கடைகளை முற்றாகத் தடைசெய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

ஹெல உறுமயவின் தலைவர் சோபித தேரர் பல பிழைகள் விட்டிருந்தாலும் முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும் எனக் கேட்டிருப்பது மிகச் சரியான விடையாகும்.''

சோபித தேரரதோ அல்லது அவர் சார்ந்த ஹெலஉறுமயவினதோ அரசியலும் கொள்கைகளும் வெளிப்படையானவை. அவர் அவ்வாறுதான் குறிப்பிடுவார். அவர் அவ்வாறு குறிப்பிடாவிட்டால்த்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும்.

ஆனால் நடுவுநிலை தவாறா நன்னெறி காக்கும் நாளிதழ் என்று கொட்டை எழுத்துக்களில் போட்டுகொள்ளும் தமிழ் பத்திரிகை, அதிலும் சிறுபான்மையான தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடபகுதியைச் சேர்ந்த பிராந்தியப் பத்திரிகை சக சிறுபான்மை இனத்தின் மீது குரோதம் கொண்டு சோபித தேரரின் கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாகக் கருத்து வெளியிடுவது அபாயமானது மட்டுமல்ல இனங்களின் நல்லுறவுக்கு எதிராக நஞ்சை விதைக்கும் செயலும் கூட. அதிலும் ஆசிரியர் தலையங்கத்தில் அதை வலியுறுத்துவது அதன்  உச்சம்.

ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் என்பது அப்பத்திரிகையின் கொள்கைகளுக்குச் சார்பான கருத்தை வெளியிடுவது. அப்பத்திரிகையின் இதயம் போன்றது. அதனாலேயே பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்கங்கள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் இனங்களின் நல்லிணக்கத்தைக் குலைக்கும் கருத்துக்களை வெளியிடுவது ஊடக அறத்திற்கும் பத்திரிகையின் சமூகப் பொறுப்புக்கும் எதிரானது.

தமிழரின் உணவாக மாட்டிறைச்சியின் வரலாறு பலநூற்றாண்டுகள் கொண்டது. அதிலும் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான மாட்டிறைச்சிக் கடைகள் முஸ்லிம்கள் அல்லாதவர்களாலேயே நடத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியை உண்பவர்களில் பெரும்பான்மையானவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களே. முஸ்லிம்களால் நடாத்தப்படும் கடைகளிலும் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் முஸ்லிம் அல்லாதவர்களே.

வடபகுதியில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருந்த காலப்பகுதிகளிற் கூட யாழ்ப்பாணத்திலும் வடபகுதிகளிலும் மாட்டிறைச்சிக் கடைகள் இப்போது போலவே இயங்கின. எக்காலத்திலும் அவை தடைசெய்யப்பட வில்லை. அவ்வாறு இருக்கையில் மாட்டிறைச்சிக் கடைகளை முஸ்லிம்களே பெரும்பான்மையாக நடத்துகின்றனர் என்கிற மாதிரி முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டி ஆசிரியர் தலையங்கம் எழுதியிருப்பது முஸ்லிம்களுக்கு எதிரான விஷத்தை விதைப்பதல்லாமல் வேறென்ன?

அதிலும் பன்றி இறைச்சியை ஒப்பிட்டுக்காட்டி இவ்விடயத்தை எழுதியிருப்பது முஸ்லிம்களைத் திட்டமிட்டுப் புண்படுத்துவது மட்டுமல்லாமல் கண்டிக்கத்தக்கதும் ஆகும். 

இலங்கையில் மாட்டிறைச்சி சாப்பிடாத இனத்தவரோ மதத்தவரோ இல்லை. மாட்டிறைச்சிக் கொத்துக்கடைகள் இல்லாத ஊர்களே இல்லை என்றளவுக்கு மாட்டிறைச்சி உணவு இலங்கையில் வெகுசனமயப்பட்டுள்ளது. யாழப்பாணத்தின் கிறிஸ்தவ சமயத்தினரிடையே மாட்டிறைச்சி உணவு மிகவும் வழமையானது. கிறிஸ்தவத்தை யாழ்பாணத்திற்கு அறிமுகம் செய்த ஐரோப்பியரின் வழமைகளைப் பின்பற்றி மாட்டிறைச்சி கிறிஸ்தவர்களின் உணவில் இடம் பிடித்திருக்கலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாட்டிறைச்சியைச் சமைப்பதை வழமையாகக் கொண்டவர்களாகவே பெரும்பான்மையான யாழ்நகர்பகுதிக் கிறிஸ்தவர்கள் உள்ளார்கள். நத்தாரிலும் புத்தாண்டுக் கொண்டாண்டங்களிலும் திருமணம் உட்பட்ட ஏனைய கொண்டாட்டங்களிலும் கிறிஸ்தவர்களின் விருந்தில் கட்டாயம் மாட்டிறைச்சி இருக்கும். அவ்வாறு இருக்கையில் மாட்டிறைச்சியை முற்றாகத் தடைசெய்யக் கோருவது மாட்டிறைச்சியை விரும்பி உண்ணும் கிறிஸ்தவர்களையும் அவமதிக்கும் செயலாகும். கிறிஸ்தவர்கள் போலவே யாழ்ப்பாணத்தின் சைவராக உள்ள அரைப்பகுதியாக உள்ள மக்களின் உணவில் மாட்டிறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. மாட்டிறைச்சியை முற்றாகத் தடைசெய்யக் கோருவதனூடாக யாழ்ப்பாணத்தில் அவர்களையும் அவமதிக்கிறது வலம்புரி.

சைவ வேளாள யாழ்ப்பாணத்தை உருவாக்குவதே வலம்புரியின் நடுவுநிலை காக்கும் நன்னெறியாக அமைகிறது. பாலியல் வறட்சியால் பெண்குழந்தைகள் வரை மூதாட்டிகள் வரை பலவந்தமாகப் பாலியல் வன்புணர்வுகளும் சித்திரைவைதகளும் இடம்பெறுவதும் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதுவும் சைவ வேளாள யாழ்ப்பாணத்திற்கு அவமானமில்லை. இக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவது குறித்து ஆசிரியர் தலையங்களில் எழுதுவது நடுவுநிலை தவறாத நன்னெறிக்குள் வருவதில்லை. கோஷ்டி மோதல்களாலும் ரவுடியிசத்தாலும் சமூகத்தில் மனிதர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவது சைவ வேளாள யாழ்ப்பாணத்திற்கு அவமானமாக இல்லை. இனச் சிறுபான்மையினரும் மதச்சிறுபான்மையினரும் அடித்தட்டு மக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுவது சைவ வேளாள யாழ்ப்பாணத்திற்கு அவமானமாகிறது.

பத்திரிகைளில் வரும் இனவாத, மதவாத, சாதிவாத கருத்துக்களை எதிர்ப்பதுவும் கண்டனம் செய்வதும் சமூகம் பற்றிய அக்கறை கொண்டவர்களின் கடமையாகும். அந்த வகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிரான, யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்களையும் யாழப்பாண மக்கள்தொகையில் அரைப்பங்கினரான மக்களையும் அவமதிப்புக்குள்ளாக்கும் வலம்புரிப் பத்திரிக்கைக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதுவும் தன்கருத்துக்களுக்காக வலம்புரிப் பத்திரிக்கையைப் பகிரங்க மன்னிப்பு கோர வற்புறுத்துவதும் இனிவரும் காலங்களில் இவ்வாறான விஷசமத்தனங்கள் இடம்பெறாமல் இருக்க ஊடகங்களை நிர்ப்பந்திப்பதுவும் எமது கடமையாகும்.

-எஸ். சத்தியதேவன்