Fri08072020

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் தங்கவடிவேல் ஆசிரியர் அவர்களின் இறுதி நிகழ்வில், தோழர் இக்பால் அவர்களின் இரங்கல் உரை

அன்பான தோழர்களே, நண்பர்களே, பொதுமக்களே!

மறக்க முடியாத மாமனிதர் ஆசிரியர் தங்கவடிவேல் அவர்கள். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வதிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் ஆசிரியர் என்னும் மாமனிதர் தனது 83ஆவது வயதில் இயற்கை எய்தினார். வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டியது இயற்கை நியதியே. இந்த வகையில் இவரது மரணமும் தவிர்க்க முடியாதது.

மனிதன் பிறக்கின்றான் இறக்கின்றான். அந்த இடைக்காலத்தில் அவன் என்ன பணிகளை ஆற்றியுள்ளான் என்பதே அவன் பிறந்ததன் பயனாகும். பலர் பயனில்லாமலே தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ளுகின்றார்கள். அமரர் தங்கவடிவேல் மாஸ்ரரும் அவரைப் போல் சிலரும் மக்களுக்கத் தொண்டர்களாக, மக்களின் பிரச்சினைகளை வென்றெடுக்கும் போராளிகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தங்கவடிவேல் தனது இளமைக்காலத்தில் காலம் சென்ற பருத்தித்துறை எம்பி பொன்கந்தையா அவர்களின் பாதங்களிலே வளர்ந்து இலங்கை கம்யூனிசக்கட்சியின் மாக்சிய லெனிசியக் கொள்கைகளை கம்பர்மலையிலும் அண்டிய ஊர்களிலும் பரப்புவதில் தீவிரமாக செயற்பட்ட ஒருவர்.

இலங்கை கம்யூனிசக் கட்சியின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். சிறுபான்மை தமிழர் மகாசபையின் சாத்வீகச் செயற்பாடுகள் கோவில்களையோ, தேனீர்க் கடைகளையோ தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சமத்துவமாக திறந்து விட உதவி செய்யவில்லை. இந்த நிலையில் தோழர் சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கம்யூனிசக் கட்சியின் வருகையே புதிய பரிமாணங்களை ஏற்படுத்தியது.

பலாத்காரத்துக்கு எதிர் பலாத்காரம் என்ற பிரயோகத்தின் மூலம் பிரச்சினைகளக்குத் தீர்வு காண முடியும் என்ற கொள்கையை கட்சி தீர்மானித்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டு மகாசபையில் இருந்து தீண்டாமை வெகுஜன இயக்கத்தின் தோற்றுவித்தவர்களில் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில், வல்லிபுரம் ஆழ்வர் கோவில், மட்டுவில் பண்டித்தலைச்சி அம்மன் கோயில் போன்றவற்றை தாழ்த்தப்பட்ட மக்ளுக்காக திறக்க வேண்டும் என்றும் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி போன்ற இடங்களில் நடைபெற்ற தேனீர்கடைப் போராட்டங்களுக்கு தோழர்கள் கே. டானியல், எஸ் ரீ என் நாகரட்னம், கே எஸ் சுப்பிரமணியம், ஜு ஏ கந்தசாமி, மு.கார்திகேயன் போன்றவர்களுடன் இணைந்து தோளோடுதோள் நின்றவர் தங்கவடிவேல் ஆசிரியரவர்கள். அப்போராட்டங்கள் வெற்றி பெற இலங்கை கொமியூனிசக் கட்சியும் அதன் தலைவர் தோழர் சண்முகதாஸன் அவர்களும் உறுதுணையாக இருந்தார்கள்.

தோழர் சண்முகதாஸனின் அபிமானம் கொண்ட தோழர் தங்கவடிவேல் அந்த அணியிலிருந்து புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, சூறாவத்தை, சுண்ணாகம் போன்ற இடங்களில் நடைபெற்ற தேனீர் போத்தல் போராட்டங்களிலும் அந்த இடங்களில் நடந்த விவசாயிகளின் சம்பள உயர்வு போராட்டங்களை நடாத்திய மறைந்த தோழர் லோகேஸ்வரன், திருப்பதி, குணசிங்கம், முருகையன் போன்ற தோழர்களுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர் தோழர் தங்கவடிவேல்.

இவர் பாடசாலை ஆசிரியராகவும், புரட்சிகர எழுத்தாளர்களாகவும், புரட்சிகர கவிஞராகவும், விமாசகராகவும் புரட்சிகரத் தலைவராகவும் போராளியாகவும் தன் வாழ்நாளைக் கழித்திருக்கின்றார். அது மட்டுமல்லாது தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்களையும் தனது போராட்டப் பாதையில் ஒரு துணையாக அழைத்துச் சென்ற மதிப்புக்குரியவாரவார்.

அவரது நாமம் என்றும் வாழ்க.

இங்கனம்

எம்ஏசி இக்பால்

கம்யூனிச போராளி சார்பாக.