Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

விக்கினேஸ்வரன் ராஜினாமாவும் - மறுப்பும்

வடமாகாண சபையில் ஆட்சிக்காலம் வரை சந்திரசிறி தான் ஆளுநர் என்பதும், மாகாண சபை மூலம் அதிகாரத்தை அனுபவிக்க முடியாத துயரத்தில் கூட்டமைப்பு மூழ்கி இருக்கின்றது. இதற்குள் முதலமைச்சர் ராஜினாமா என்ற தகவலால் பதைபதைத்துப் போய் அதை மறுத்து அறிக்கை விடுமளவுக்கு விக்கினேஸ்வரனின் அதிகார துயரம் மலையளவானது.

இனவாதத்துக்கு தலைமை தாங்கும் ஐனாதிபதியிடம் பதவி பிரகடனம் செய்தால் தான் அதிகாரத்தைப் பெறமுடியும் என்று நம்பி கையாண்ட ராஜதந்திரம் முதல் பேச்சுவார்த்தைகள் அனைத்தும், முகத்தில் கரியை பூசவைத்திருக்கின்றது. சந்திரசிறிக்கு பதில் நாங்கள் ஆள வேண்டும் என்றதைத் தாண்டி, வேறு எதையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க மாகாண சபையிடம் எதுவுமில்லை. சந்திரசிறிக்கு பதில் விக்கினேஸ்வரன் என்பதைத்தாண்டி, கூட்டமைப்பு கோரும் அதிகார மாற்றம் எதையும் தராது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற தேர்தல் "ஜனநாயக" அடையாளத்தைக் கொண்டு அதிகாரத்தைக் கோருவதற்கு அப்பால், மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்க இதனால் முடியாது. மக்களின் ஜனநாயகத்துக்காக எதையும் இவர்கள் செய்வதில்லை. மக்களுக்கான ஜனநாயகம் என்பது, மக்களுடன் இணைந்து வாழ்வதும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதும் தான். இதை செய்யாதவர்கள், தேர்தல் மூலம் அதிகாரத்தை மட்டும் கோருவதானது, தங்களை தாங்கள் ஏமாற்றிக்கொண்டு மக்களை முட்டாளாக்குவதாகும்.

தங்களை ஒத்த இனவாதத் தலைவரான ஜனாதிபதியிடமும், ஆளும் வர்க்கத்திடமும் கூடி அதிகாரத்தை கோரத் தயாராக உள்ள கூட்டமைப்பு, இனவாதம் கடந்து சிங்கள மக்களிடம் கொண்டு செல்லவும் கோரவும் தயாராக இல்லை என்ற உண்மையையும் இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.