Mon04152024

Last updateSun, 19 Apr 2020 8am

வெறிகொண்ட தீவிரவாதத்தால் அழிவுறும் மக்கள்

இன்றைய உலகமயமாதலில் உலகின் மக்கள் ஏதாவதொரு தேசியப் பிரச்சினைக்குள் சிக்காமல் இல்லை. நம் நாட்டு மக்களும் வெறி கொண்ட சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் தீவிர வாதத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். இதை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கடந்த ஒருவார கால இன வெறிக் கோரத் தாண்டவத்தின் அகோரத்திற்கு ஊடாக கண்டுகொண்டோம். இந் நிகழ்வுகள்..,

எம் நாட்டில் மட்டுமல்ல மத்திய கிழக்கு - ஆசியாவின் பல நாடுகளிலும் காண முடியும். இந்நாடுகளிலும் வெறிகொண்ட தீவிரவாதம் தம் சொந்த நாட்டு மக்களையும் கொன்று குவிக்கின்றது. சிரியாவில் கடந்த 11 அண்டுகளாக அமெரிக்காவாலும் அதன் கூட்டாளி நாடுகளாலும் அனுப்பப்பட்ட சிறு சிறு குழுக்கள் இன்று மாபெரும் தீவிரவாத - ராணுவமாக பர்ணமித்துள்ளது. இவ் ராணுவ அமைப்பு கடந்த 11 ஆண்டுகளின் உள்நாட்டுச் சண்டையில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது.

இதேபோல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றென போற்றப்பட்ட ஈராக்கில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொண்ட கொலை வெறிப் போர்த்தொடுப்பால் அந்நாடும் தீவிரவாதிகளின் கொலைக்களமாகியுள்ளது. ஈராக்கில் சதாம் படுகொலை செய்யப்பட்டபின் சியா பிரிவு ஆட்சியாளர்களிடம் அரசு ஒப்படைக்கப்பட்டது. 2011இல் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் இருந்து வெளியேறிய போது, தற்போது ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சன்னிப் பிரிவு தீவிரவாதிகள் சியா பிரிவு அரசிற்கு எதிராக போராடி வருகின்றார்கள். இவர்களுக்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவும் உண்டு.

கடந்த 11 ஆண்டுகளில் மேற்படி இரு பிரிவுகளுக்கும் (சியா அரசுப் பிரிவு - சன்னி தீவிரவாத அமைப்பு) இடையில் நடைபெற்ற சண்டையில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஈராக் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஈராக்கின் அரசும் அதை எதிர்த்துப் போராடி முன்னேறி வரும் தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவின் கைக் கூலிகள் ஆவர் என்பதாகும்.