Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ். நூலக எரிப்பும், சுஜாதாவின் பார்ப்பன வெறியும்!

இந்த நாட்களில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அடியாட்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு கும்பலால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையின் ஏட்டுச்சுவடி, ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகள், பேராசிரியர் ஜசாக் தம்பையாவின் நூல்கள் போன்ற 97000 நூல்கள் தீயில் எரிந்து போயின. நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பிதா. டேவிட் மரணமடைந்தார். நூலகத்தினை எரித்த நெருப்பு அடங்கிய போதும் தமிழ்மக்களின் மனதில் எழுந்த கோபம் ஒரு போதும் அணைந்துவிடவில்லை.

யாழ்ப்பாண நூலக எரிப்பை வைத்து சுஜாதா "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்னும் ஒரு கதை எழுதினார். நூலகத்தை பொலிஸ்காரர்கள் எரித்தார்கள் என்று கதையில் சொல்கிறார். அதாவது ஜே.ஆர் ஜெயவர்த்தனா, காமினி திசைநாயக்கா, சிரில் மத்தியு போன்ற எரிக்கச் சொன்னவர்களை மிகக்கவனமாக தவிர்த்து விட்டு உத்தரவிற்கு கீழ்ப்படிந்து எரித்த பொலிஸ்காரர்களை குற்றவாளி ஆக்குகிறார். இது தான் அவர்களது வழக்கமான தந்திரம். இந்தியாவின் ஊழலைப் பற்றி சொல்லும் போது இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி தொடக்கம் மந்திரி, பிரதானிகள் வாங்கும் ஊழலைப் பற்றி சொல்லாமல் அய்ந்திற்கும், பத்திற்கும் கையேந்துபவர்களின் ஊழல்களை விலாவாரியாக எழுதுவார்கள். அதிகாரவர்க்கத்தை பகைத்து பிரச்சனைப்படாத அதேநேரம் ஊழலை பதிவு செய்த தார்மீகக்கடமை முடித்த திருப்தியோடு பத்திரிகை அலுவலகத்திற்கு கதையை அனுப்புவார்கள்.

சுஜாதாவின் "ஒரு இலட்சம் புத்தகங்கள்" கதையில் யாழ்ப்பாண நூலக எரிப்பு பிரதான விடயமல்ல. அதை வைத்து அவர் தனது தமிழ் வெறுப்பை, தமிழர் வெறுப்பை, திராவிட இயக்க எதிர்ப்பை எடுத்து விடுகிறார். கதையில் டாக்டர் நல்லுசாமி என்றொரு பாத்திரம் வருகிறது. அவர் பிராமணர் அல்ல. ஆகவே அவர் கெட்டவர். பாரதி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி பெறுவதற்காக துடிப்பவர். அதோடு விடவில்லை சுஜாதா அவரை. "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்த போது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது". வரவேற்பறைப் பெண்ணைப் பார்த்தவுடன் சலனப்படும் கெட்டபழக்கமும் தமிழரான நல்லசாமிக்கு இருக்கிறது. கர்ப்பக்கிரகத்திற்குள்ளே வைத்து காமம் தீர்த்துக் கொண்ட அய்யர்கள், அய்யங்கார்கள் இவர்களின் கதைகளில் ஒருநாளும் வர மாட்டார்கள்.

கதையிலே டாக்டர் நல்லுசாமி இலங்கை போயிருந்த போது தங்கியிருந்த வீட்டுக்காரனான செல்வரத்தினம் என்னும் இலங்கைத் தமிழர் வருகிறார். இனக்கலவரத்தில் தப்பி தமிழகம் வந்திருக்கும் அவர், மாநாட்டில் டாக்டர் நல்லுசாமியை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து கோபப்படும் செல்வரத்தினம் மாநாட்டு மலரை எரித்து தன் எதிர்ப்பைக் காட்டப் போவதாக சொல்கிறார். தனக்கு துணைவேந்தர் பதவி தரவிருக்கும் மந்திரி மாநாட்டிற்கு வரும் போது இவன் மலரை எரித்தால் எல்லாம் பாழாகிவிடும் என்பதால் டாக்டர் நல்லுசாமி தன் மனைவிக்கு சொல்லி செல்வரத்தினத்தை பொலிசில் பிடித்து கொடுக்கிறார். தமிழ்நாட்டு தமிழன், ஈழத்தமிழனிற்கு செய்த துரோகத்தை பொறுக்காத சுஜாதா அதை பொன்னெழுத்துக்களால் பொறித்து விட்டார்.

இது தான் அவர்களின் நோக்கம் இலங்கைத் தமிழரும், இந்தியத் தமிழரும் ஒன்று சேரக் கூடாது. சுஜாதா எழுதிய மாதிரியான தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிற்கு தமிழர்கள் மட்டுமே கெட்டவர்கள். திராவிட இயக்கத்தை, தனித்தமிழ் இயக்கத்தை கிண்டலடித்து எழுதுவார்கள். ஆனால் காந்தியம் புனிதமானது, சமஸ்கிருதம் தேவபாசை. காந்தியவாதிகள் கொள்கைகளிற்காக உயிரையே விடுவார்கள். கருணாநிதியின் தவறுகளிற்கு, ஊழல்களிற்கு இவர்களது பேனா பொங்கியெழுந்து மை கக்கும். ஆனால் ஜெயலலிதாவின் மலை போன்ற ஊழல்கள் இவர்களின் கண்களிற்கு தெரியாது.

ஜெயலலிதா தஞ்சை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது சிவத்தம்பி, சுவீடன் நாட்டு உப்சலா பல்கலைக்கழக பேராசிரியர் பீற்றர் சல்க் போன்றவர்களை விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பிய போது இவர்களின் பேனாக்கள் பூணூலிற்குள் பதுங்கி விட்டன. முள்ளிவாய்க்காலில் இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து தமிழ்மக்களை படுகொலை செய்தபோது இந்த பார்ப்பன, இந்துத்துவ படைப்பாளித்திலகங்கள் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு சத்தம் போடாமல் இருந்தார்கள்.

இன்றைக்கு நரேந்திர மோடி குஜராத்தில் செய்த சாதனைகளைப் பார்த்துத்தான் மக்கள் இந்தியப் பிரதமராக்கி இருக்கிறார்கள் என்று பீற்றிக் கொள்கிறார்கள். வருங்கால தேசியத்தலைவர் கனவில் இருக்கும் கிளிநொச்சி சிறிதரன் "சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர்" என்று பஜனை பாடுகிறார். குஜராத்தின் சாதனைகள் என்ன என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அப்படி சாதனைகளிற்கு மோடி தான் பொறுப்பென்றால், மோடி முதலமைச்சராக இருந்த போது நடந்த இரண்டாயிரம் முஸ்லீம்களின் கொலைக்கு யார் பொறுப்பு. முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? சுஜாதா, ஜெயமோகன் போன்ற வலதுசாரி எழுத்தாளர்கள் தெருவில் இறங்கி கலவரம் செய்தவர்களையே இதற்கு பொறுப்பாளிகள் ஆக்குவார்கள்.