Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு!

இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகளை இணைப்பதற்குரிய மாபெரும் வேலைத் திட்டத்தை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். இராணுவத் தொண்டர் படைக்கு ஆள்களைத் திரட்டித் தருமாறு ஒவ்வொரு பிரதேச செயலாளர்களையும் கோரியுள்ள இராணுவத்தினர், கிராம சேவையாளர்கள் ஊடாகக் கிராமம் கிராமமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் தொண்டர் படையணிக்கு ஆள்களை இணைத்துக் கொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலை, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இரhணுவத்தினருக்கு நேற்று ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இரு மணி நேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் ரட்ணசிங்கம் கலந்து கொண்டு பிரதேச செயலாளர் களுக்கு இது குறித்து விளக்கமளித்தார்.

இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு இணைவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். ஒரு சில பிரதேச செயலாளர்கள் இவ்வாறான நடவடிக்கையைத் தம்மால் முன்னெடுக்க முடியாதென்று சுட்டிக்காட்டியபோதும் அரச அதிபர் அதனை முன்னெடுக்கலாம் என்று தெரிவித்ததுடன் கிராம சேவையாளர்கள் ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் செல்லும் இராணுவத்தினர் தொண்டர் படையணிக்கு ஆள்களைத் திரட்டித் தருமாறு கிராம சேவையாளர்களைக் கோரவுள்ளனர். அத்துடன் ஆள்களைத் திரட்டுவதற்காக இது தொடர்பான துண்டுப் பிரசுரமும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு இராணுவத்தினர் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கில் அந்நிய பல் தேசிய கம்பனிகளிற்க்காக தமிழ் மக்களது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பலாத்காரமாக பறித்தெடுத்துக் கெதாண்டிருக்கின்றது. திட்டமிட்ட இராணுவ குடியேற்றங்களையும், பௌத்த மத வழிபாட்டுத் தலங்களையும் தமிழ் மக்களின் தேசிய இன அடையாளத்தை இல்லாதாக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றது. மேலும் வடக்கு கிழக்கு மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலையில் வைத்துக் கொண்டு இராணுவ அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்குவதுடன், சிவில் நிhவாகத்தை சுயாதீனமாக இயங்கவிடாது ராணுவ அழுத்தங்கள் அச்சுறுத்தல்களை பிரயோகித்த வண்ணமுள்ளது.

இந்த அடக்கு முறைகள், அச்சுறுத்தல்கள், காணி பறிப்புக்கள்  போன்றவற்றிற்கு எதிராக மக்களின் கிளர்ச்சி ஏற்ப்படக்கூடாது. அப்படி ஏற்ப்பட்டால் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகளிற்கு பெரு நட்டம் ஏற்படும். மேலும் மீண்டும் ஒரு போராட்டம் அரச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஆரமபிக்கலாம். இத்தகைய எதிர்கால நிகழ்வுகளை அழிக்கும் நோக்கில் அரச இயந்திரம் முன்னோக்கிய திட்டமிடலுடன் பல நகர்வுகளை இப்போதே ஆரம்பித்து விட்டது.

அதில் ஒன்று தான் கட்டாயப்படுத்திய ராணுவ ஆட்சேர்ப்பு. இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டங்களை அடக்க தமிழ் ராணுவத்தையே பாவிக்க முடியும். அப்போது தமிழ்ர்கள் சிங்கள ராணுவம் தம்மை கொல்கின்றது என கூக்குரலிட முடியாது. மேலும் மக்களை ராணுவ மயமாக்குவதன் மூலம் அடக்கு முறைக்கு எதிராக போராட வேண்டிய மனோபாவத்தை இல்லாது ஆக்குவதும் இன்னொரு நோக்கமாகும். இன்று  CID, TID போன்ற அரச உளவு நிறுவனங்களிற்க்காக பல முன்னாள் புலிகள் விருப்பின்றி ஒரு இக்கட்டான சுழலிலும் வேலை செய்தே ஆக வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர்.

இந்த ராணுவ துணைப்படைக்கான ஆட்சேர்ப்பானது, எதிர்காலத்தில் அரச அடக்கு முறைக்கு எதிராக எழவுள்ள மக்கள் போராட்டங்களிற்கு பெரும் சவாலாகவே அமையும்.