Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவின் வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீதான கைது தொடர்கின்றது. (படங்கள்)

நேற்று (2014-05-16) காலை 10:30 மணியளவில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதன் பின்னர் நான்கு மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தினை முடித்து கோட்டை பஸ் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த மாணவர்களில் மாணவர் ஒருவரை பொய்யான பிடியாணை காட்டி கைது செய்ய முற்பட்ட கொம்பனித்தெரு பொலீசாரிற்கு எதிராக குரலெழுப்பிய மாணவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதோடு அவ்விடத்தில் இருந்த மாணவர்கள் மீது பலமான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கிடைத்த தகவல்களின் படி நள்ளிரவில் மேலும் இரு மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசால் தேடப்படுகின்ற சந்தேக நபர் ஒருவருக்கு பாதுகாப்பளித்ததாக பொய்க் குற்றம் சுமத்தி பல மாணவர் தலைவர்களை மகிந்தாவின் அரச படையினர் கைது செய்துள்ளனர். மேலும் பல மாணவர்களை கைது செய்யும் முகமாக தேடுதல் வேட்டைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவர்கள் பாதுகாப்பளித்த சந்தேக நபர் யார் என சட்டத்தரணிகள் பொலீசாரிடம் கேட்ட போது அது குறித்த விபரங்களை வழங்க முடியாது என பொலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உண்மை இதுவல்ல. மகிந்த ராஜபக்ஸவின் வாசஸ்தலத்தின் முன்னாள் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்களே போலி குற்றச்சாட்டில் இங்கே குறிவைத்து கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.