Mon08032020

Last updateSun, 19 Apr 2020 8am

தேசியம் கொலை செய்யும்!

அய்ரோப்பாவில் நிலபிரபுத்துவ பொருளாதார முறையின் கீழ் அரசுகள் இருந்தன. நாடு, தேசம் என்ற ஒன்று அந்த பொருளாதார முறையின் கீழ் இருக்கவில்லை. அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தன. மக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் விவசாய பண்ணைகளில் அடிமைகளாக இருந்தனர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்தனர். நிலப்பிரபுக்களிற்கு சொந்தமான வீடுகளில் வசித்தனர். கத்தோலிக்க திருச்சபை, பால சிங்கமும் பசுவின் கன்றும் பக்கம் பக்கம் நின்று நீர் பருகும் காலம் வரும். அதுவரை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுபேச்சின்றி மற்றக்கன்னத்தை காட்டுங்கள் என்று நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளிற்கு, பொருளாதார சுரண்டல்களிற்கு பணிந்து போகச் சொல்லி மூளைச்சலவை செய்தது.

பொதுமக்களின் குரல்கள் எந்தவொரு சபையிலும் கேட்கப்பட்டதில்லை. நிலப்பிரபுக்கள் பரம்பரையினருக்கு மட்டுமே அரசியல் அதிகாரம் இருந்தது. இந்த இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில் கூட பிரித்தானிய மேற்சபை (Upper House), பிரபுக்களின் சபை (House of Lords) என்றே அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் நிலப்பிரபுகளின் பரம்பரையினராகவே இன்றும் கூட இருக்கிறார்கள். உழைக்கும் மக்களிற்கு கல்வி எட்டாக்கனியாக இருந்தது. ஏனெனில் அதற்கான வசதியோ பணமோ அவர்களிடம் என்றைக்கும் இருந்ததில்லை. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று குடும்பமாக வேலை செய்தால் தான் அவர்களால் அரைகுறையாக உண்ண முடியும். எனவே கல்வி கற்க வேண்டும் என்பதை அவர்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

தொழிற்புரட்சியால் உந்தப்பட்ட முதலாளித்துவம் எழுச்சி பெற்ற புதிய வர்க்கமாக உருவாகியது. சிறு பட்டறைகளில் கைவினைஞர்களால் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட பொருட்களிற்கு மாறாக முதலாளித்துவ வர்க்கம் தொழிற்சாலைகளில் பெருமளவிலான பொருட்களை உற்பத்தி செய்து குவித்தது. ஆகவே அதற்கு விரிந்த பரந்த சந்தை தேவைப்பட்டது. ஒன்றுடன் ஒன்று போர் செய்து கொண்டிருந்த அரசுகளின் இடத்தில் அது தேசியத்தை கோரியது. அரசுகள் ஒன்று சேர்ந்து நாடாக, தேசமாக உருவாகின. ஆம், தேசியம் முதலாளித்துவத்தின் கோரிக்கை. முதலாளிகளின் நலன்களிற்கான கோரிக்கை.

நிலப்பிரபுத்துவத்தின் அரசியல் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய அதிகார வர்க்கமான முதலாளிகளிற்கு துணை தேவைப்பட்டது. எனவே பாராளுமன்றங்களில் சர்வசன வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளிற்கு தொழில்நுட்ப அறிவு தேவையாக இருந்தது. அதன் காரணமாக கல்வி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. இவ்வாறு முதலாளிகள் தமது தேவைக்காக, இலாபத்திற்காக, அரசியல் அதிகாரத்திற்காகவே தேசியம், சர்வசன வாக்குரிமை, பெர்துக்கல்வி என்பவற்றை முன்வைத்தார்கள்.

கைகளை உயர்த்தி குரல்வளை புடைத்தெழும்ப ஜேர்மனிய தேசியம் பேசிய கிட்லர் சென்று சேர்ந்த இடம் நாசிசம். ஜெர்மனியத்தேசியம் முதலில் யூத மக்களை, ருமேனியாவின் நாடோடி ஜிப்சி இன மக்களை எதிரிகள் என்றது. பின்பு போலந்துக்காரர்கள், சேர்வியத் மக்கள், தன் ஜேர்மனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒல்லாந்து மொழி பேசும நெதர்லாந்து மக்கள் என்று மில்லியன் கணக்கான மக்களை அது கொன்றது. உலக மகா யுத்தம் ஒன்றின் தொடக்கப்புள்ளியாக அது அமைந்தது. இத்தாலியத் தேசியம் முசொலினியின் பாசிசக் கட்சியால் பாசிசமாக வளர்த்தெடுக்கப்பட்டது. தேசியம் தன் இனத்தின் கோரிக்கையாக எழுந்து பின் தேசிய வெறியாகி வளர்ச்சிப்பேர்க்கில் தவிர்க்க முடியாதபடி பாசிசமாக மாறுகிறது.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு? போன்ற ஆண்ட தமிழினப் பெருமை, மோட்டுச் சிங்களவன், தொப்பி பிரட்டி முஸ்லீம், கள்ளத்தோணி இந்தியர்கள் என்று மற்றைய மக்களை இழிவு செய்தல் என்று இலங்கைத் தமிழ்தேசியம் தொடக்கத்தில் இருந்தே பாசிசத்தின் கூறுகளுடன் வளரத் தொடங்கியது. இலங்கையின் பொதுமக்கள் மத்தியில் தமிழ்மக்களினது பிரச்சனைகளை கொண்டு செல்லாத தமிழ்மக்களினது உயர்வர்க்கத் தலைமைகள், இலங்கையின் வறிய, ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனைகளிற்காக சேர்ந்து போராடுவதன் மூலம் ஏழைமக்களின் நம்பிக்கையை, ஆதரவை தமிழ்மக்களிற்காக பெறலாம் என்பதில் அக்கறையற்ற தமிழ்தலைமைகள் சிங்கள உயர்மட்ட தலைவர்களுடன் சேர்வதற்கு என்றுமே தயங்கியதில்லை.

ஆறுமுகநாவலர், பொன்.இராமநாதன், பொன்.அருணாசலம் காலத்திய தமிழ்தேசியம் உயர்சாதி வேளாள தமிழ்தேசியம். வேளாள தமிழர்கள் மட்டுமே அதற்கு உரித்தானவர்கள். தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களும், மலையக தமிழ்மக்களும் அத்தமிழ் தேசியத்திற்கு தகுதி பெறாதவர்களாக அத்தலைவர்களால் கணிக்கப்பட்டனர். டி.எஸ் சேனநாயக்காவினால் மலையக தோட்டத் தொழிலாளர்களினது குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஜி.ஜி பொன்னம்பலம் சேனநாயக்காவிற்கு ஆதரவாக மலையக தமிழர்களிற்கு எதிராக நின்றது தமிழ் தேசியத்திற்குள் மலையகத் தமிழர்களிற்கு இடமில்லை என்பதற்கு வரலாற்று சாட்சியம்.

இலங்கையிலேயே அறிவு கூடிய மாவட்டம் என்று சொல்லிக் கெர்ண்டு தம் சொந்த தமிழ் மக்களை, சைவ மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில், தேனீர் கடைகளில் அனுமதிக்காது காட்டுமிராண்டிகளாக, அறிவிலிகளாக சாதித்திமிர் பேசியது யாழ்ப்பாண சைவத்தமிழ் தேசியம். அறுபதுகளில் கம்யுனிஸ்ட்டுக் கட்சியினதும், சிறுபான்மை தமிழர் மகாசபையினதும் சாதியொழிப்பு போராட்டங்களை கிண்டலடித்து தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசியதும், மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிற்குள் வழிபடும் உரிமை வேண்டி போராடிய தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை சுந்தரலிங்கம் தடுத்ததும் தமிழ் தேசியம் வேளாளரிற்கு மட்டுமே உரித்தானது என்பதும் உதாரணங்கள். தமிழ் பேசினாலும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள், தமிழ் தேசியத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதாகவே அக்காலகட்டத்து தமிழ் தேசிய சாதிவெறி இருந்தது.

இலங்கைத் தமிழ் மக்களிற்காக தனிநாடு என்று தமிழ்த்தேசியம் பேசிய ஈழவிடுதலை இயக்கங்களின் தமிழ்த்தேசியம் தனது இயக்கம் சேர்ந்தவர்கள், தனது ஆதரவாளர்கள் மட்டுமே தமிழ்த்தேசியர்கள் என்று வரையறுத்தது. ஈழத்திற்காக போராடினாலும் மற்றவர்கள் எதிரிகள் ஆனார்கள். உட்கொலைகள். மற்றைய இயக்கத்தினரை கொல்லுதல். தமிழ்மொழி பேசினாலும் இஸ்லாமியர் என்பதால் கொல்லுதல். அப்பாவிச் சிங்கள மக்களைக் கொல்லுதல் என்று தேசியம் பாசிசமாக மாறியதை வரலாறு மறுபடியும் எடுத்து காட்டியது.

இலங்கை மக்களின் வறுமைக்கு ஊழலில் மூழ்கிப் போயிருக்கும் இந்த மக்கள் விரோத அரசுகளால் என்றைக்குமே வழி சொல்ல முடியாது. இலங்கை சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளிற்கு மேலாக அரச அதிகாரத்தை தமது கையில் வைத்திருக்கும் இந்த சிங்களப் பேரினவாதிகள் நாட்டையும், மக்களின் உழைப்பையும் கொள்ளையடித்துக் கொண்டு வறுமைக்குக் காரணம் தமிழ் இன பயங்கரவாதம், முஸ்லீம் மத பயங்கரவாதம், இந்திய விஸ்தரிப்பு வாதம் என்று பொய்களை அடுக்குகிறார்கள்.

எழுபதுகளில் சிறிமாவோ பண்டாராநாயக்காவின் சுதந்திரக்கட்சி அரசும், தொண்ணூறுகளில் பிரேமதாசாவின் அய்க்கிய தேசியக் கட்சி அரசும் இலட்சக்கணக்கான சிங்கள மக்களையே கொன்றன. ஒடுக்குபவர்கள் தனது இனம் என்பதற்காக கொல்லாமல் விடுவதில்லை. இந்திய முதலாளிகளிற்கு சொந்தமான தொழிற்சாலை கழிவுகளால் தண்ணீர் விசமாவதை எதிர்த்து போராடிய வெலிவேரிய சிங்கள மக்களை ராஜபக்ச அரசு கொல்வதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை. ஏனெனில் முதலாளிகளும், ஆட்சியாளர்களும் எந்த இனமாயிருந்தாலும், எந்த மதமாயிருந்தாலும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.

மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு இல்லாத இந்த அரசு தெற்கு, மேற்கு மாகாணசபைகளில் வெல்லுவதற்காக மறுபடி தமிழ்ப்பயங்கரவாதம் என்ற நாடகத்தை துப்பாக்கிச்சூடுகளுடன் நடத்தியுள்ளது. கணவனையும், பிள்ளைகளையும் இழந்த ஒரு ஏழைத்தாயையும் அத்தாயின் மிஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு பெண் குழந்தையையும் சிறையில் தள்ளி அவர்கள் பயங்கரவாதிகளிற்கு இடம் கொடுத்தார்கள் என்று கதை சொல்கிறது. இலங்கையின் பேரினவாத அரசுகள் இனவாதத்தை வைத்து மக்களை பிரிக்கும் போது இலங்கை அரசிற்கு எதிராக போராடுபவர்கள் இன ஒற்றுமையை முன் வைத்து போராடுவதன் மூலமே இலங்கை அரசின் சதிகளை உடைத்து வெற்றி காண முடியும்.{jcomments on}