Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்!

அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.

தென்னிலங்கை ஊடகங்கள் மாணவர்கள் அலரி மாளிகையின் பாதுகாப்பு வட்டத்தை மீறிப் போராட்டம் நடாத்திய நிகழ்வை பாதுகாப்புச் செயலாளரின் கௌரவப் பிரச்சனையாகக் காட்ட முயன்றாலும், அது மட்டும் தான் மஹிந்த- ஆதிக்க வர்கத்தின் பிரச்சனை என்பது உண்மையல்ல.

கடந்த சில வருடங்களாக எகிப்து தொடக்கம் உக்கிரேன் வரை ஆட்சித் தலைமைகள் அகற்றப்படுவதற்கான போராட்டங்கள், ஆயுதமற்ற கிளர்ச்சிகளாகவே ஆரம்பிக்கப்பட்டன. அப்படியானதொரு நிலைமை இலங்கையிலும் வரக் கூடாதென்ற கவலை சிலவருடங்களாகவே பாதுகாப்புத் தலைமைக்கும், மஹிந்த அரசுக்கும் இருந்து வருகிறது: இந்தப் பயத்தின் காரணமாகவே தான்,

* தென்னிலங்கை மக்கள் சக்திகளுடன் வடக்கு மக்கள் சக்திகள் இணைந்து ஓர் கிளர்ச்சியைத் தூண்டுவார்கள் என்ற பயத்தில் சில வருடங்களுக்கு முன் குகன் மற்றும் லலித் தோழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போக வைக்கப்பட்டார்கள்.

* குப்பை மேட்டுக்கு எதிரான போராட்டம், டீசல் விலையுயர்வுக்கு எதிரான மீனவர் போராட்டம், சுத்தமான குடிநீர் மற்றும் சூழல் பாதுகாப்புக்கான வெலிவேரிய மக்கள் போராட்டம், சுதந்திர வர்த்தக வலையத் தொழிலாளர்களில் போராட்டம் போன்ற தெற்கில் எழுந்த பாரிய மக்கள் போராட்டங்களை இராணுவத்தைக் கொண்டு கொலைகள் மற்றும் வன்முறைகள் மூலம் மஹிந்த அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.

* வடக்குக் கிழக்கு பல்கலைக்கழகங்களை மூடுவது, மாணவர் தலைவர்களை கைது செய்து "புனர்வாழ்வுக்கு" அனுப்புவது, விரிவுரையாளர்களை மிரட்டுவது தொடக்கம் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான உரிமை மறுத்தல் போன்ற கொடுங்கோண்மைகள் மஹிந்த குடும்ப ஆட்சியால் கைக்கொள்ளப்படுகிறன.

இன்னிலையில் தான் கடந்த இரு வருடங்களாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் மாணவர் போராட்டங்கள் இலங்கையில் ஆதிக்க சக்திகளைக் கலக்கம் கொள்ள வைத்துள்ளது. குறிப்பாக 160 நாட்களையும் தாண்டி நடைபெறும் மாணவர்களில் சத்தியாக்கிரகப் போராட்டமும், இதன் தொடர்ச்சியாக அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெற்ற மாணவர் போராட்டமும் மஹிந்த அரசுக்கும் அதன் பாதுகாப்பு செயலாளருக்கும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போராட்டங்கள் பற்றி எதுவித கருத்துகளையும் பகிரங்கமாகக் கூறாமல் அமைதி காத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முதன் முறையாகத் தனது கருத்தைக் கூறியுள்ளார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் 12.05.2014 அன்று நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் "கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சுதந்திரமாக மே தினக் கூட்டங்களை நடத்திய தரப்பினர், நாட்டில் சுதந்திரம் இல்லை என்று சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்கின்றனர். நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமில்லை எனத் தெரிவிக்கும் தரப்பினர் அலரி மாளிகைக்கு முன்னால் சுதந்திரம் எங்கே எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர். கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு அடி வாங்கியவர்களும், அடித்தவர்களும் அவற்றை மறந்து விட்டனர்"என்றார்.

மஹிந்தாவின் மேற்படி உரையில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தாலும் மக்கள் போராட்டங்களுக்கு அவர் பயப்படும் நிலை காணப்படுகிறதென்பது தெள்ளத் தெளிவு.

இதன் தொடர்ச்சியாக போலீஸ் மா அதிபரின் பேச்சாளர் பல்கலைக்கழக நிர்வாகங்களிடமிருந்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை கோரியுள்ளதாகவும், மாணவர்களை இந்த வெகுஜன கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்ற கட்டாயப்படுத்திய மாணவர்களை மட்டுமே கைது செய்ய உள்ளதாகவும் 13.05.2014 அன்று நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். மேலும் பொலிஸ்சார் ஊடக நிறுவனங்களிடமிருந்து வீடியோ பதிவுகளை கோரியுள்ளதாகவும், பொலிசார் போராடும் மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வெளிநாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு இலங்கையில் போராடும் சக்திகளை இழுத்து விழுத்தும் பிரச்சாரங்களை சில இடதுசாரி வேடம் போட்ட இனவாதிகளும், லும்பன் குழுக்களும் முன்னெடுகின்றனர். இவர்கள் புலிகளின் புலம்பெயர் எச்சசொச்சங்களைப் போன்று இனவாதத்தை தூண்டி விட்டுத் தமிழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிள்ளைகளை மறுபடியும் ஆயுதமேந்த வைக்கும் முயற்சிகளையே செய்கின்றனர். அதனாலேயே இன்று ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இரகசிய பயணங்களை மேற்கொள்வதுடன், புலிகள் இயக்கம் போன்ற ஒன்றை இம்முறை மார்க்ஸ்சிச- திட்டத்துடன் உருவாக்கப்போவதாகக் கூறுகின்றனர். மறு பக்கத்தில் சிலர் மஹிந்த அரசை தேர்தல் மூலம் இல்லதொழிப்பதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் பிறக்கும் எனக் கூறுகின்றனர். இவர்களின் சதி அரசியலை ஒடுக்கப்படும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இரத்த ஆறு மறுபடியும் இலங்கையின் வடகடலிலோ அல்லது மகாவலி கங்கையிலோ கலக்கும் நிலை ஏற்படும்.

இன்று மாணவர் போராட்டங்கள் ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கான போராட்டப்பாதையை திறந்து விடும் கடைமையை முன்னெடுதுச் செல்கின்றன. இப்போரட்டங்களுக்கு வலுச்சேற்பதுடன்; இன, மத, சமூகப் பொருளாதார ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் சக்திகள் தமது போராட்டங்களையும் - முதற்படியாக மக்கள் கிளர்ச்சியை முன்னெடுக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.