Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவின் வாசஸ்த்தலத்தின் முன்னாள் போராட்டம் நடாத்திய மாணவ தலைவர்களிற்கு நீதிமன்ற அழைப்பாணை!

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வாசஸ்த்தலத்திற்கு முன்பாக கடந்த 07/05/2014 புதனகிழமை அன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதே காலப்பகுதியில் அகில உலக இளைஞர் மகாநாடு கொழும்பில் மகிந்த அரசால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை காரணம் காட்டி பொலீசாரால் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ஸ குடும்ப அரசால் முன்னெடுகப்பட்டுக் கொண்டிருக்கின்ற நவதாராளமயவாத பொருளாதாரக் கொள்ளையின் ஒரு அங்கமாக இலவசக் கல்வியனை இல்லாதாக்கும் உலக வங்கியின் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் நவதாராளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது. அதாவது இலவசக் கல்வியை இலங்கையின் அனைத்து மக்களிற்கும் உறுதி செய்வதே இந்த தொடர்ச்சியான போராட்டங்களின் நோக்கமாகும். கல்வி என்பது பணம் படைத்தவனுக்கே என்ற நிலையினை நோக்கி நவதாராளவாத கல்விக் கொள்கை உலக வங்கியால் இன்று உலகெங்கும் முன்தள்ளப்பட்டுகின்றது. பண வசதி அற்றவர்கள் நவீன அடிமைகளாக மாற வேண்டிய நிலையினை நோக்கிய அபாயத்தில் எமது எதிர்கால சந்ததி உள்ளது.

சுகாதார கல்விக்கான கற்கை ஆண்டினை ஒருவருடம் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜரட்டை மாணவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களை நிர்வாகம் விரிவுரைகளிற்கு செல்ல தடைவிதித்திருந்ததுடன் சில மாணவர்களை கற்கை நெறியிலிருந்து நீக்கியும் உள்ளது. இதனை எதிர்த்து கடந்த 150 நாட்களாக சுழற்சி முறையில் உண்ணவிரத போராட்டத்தினை மாணவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாணவர்களிற்கு நியாயம் கேட்டே மகிந்த வாசஸ்தலத்தின் முன்னால தடையினை மீறி போராட்ம் நடாத்தப்பட்டது.

போராட்டங்களிற்கும் ஊர்வலங்களிற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். நீதிமன்றம் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் கூடி நின்று எதிர்ப்பு தெரிவிக்க மட்டுமே அனுமதி அளித்திருந்தது.

அந்த அனுமதியினை பெற்றுக் கொண்ட மாணவர்கள் புகையிரத நிலையத்தில் ஒன்று கூடி, ஜனாதிபதியிடம் மாணவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு எதிராக குரல் எழுப்புவது என்ற முடிவில் ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தனர். மகிந்த ராஜபக்ஸ நியாயம் வழங்குவார் என அவர்கள் அங்கு செல்லவில்லை.

உலக வங்கியினதும் ஏகாதிபத்தியங்களினதும் நன்மைக்காக நவதாராளவாத கல்விக் கொள்கையினை மூர்க்கத்தனமாக முன்தள்ளும் மகிந்த அரசிடம் நியாயம் கிடையாது என்பது தெரிந்த விடயமே. இந்த முற்றுகை போராட்டத்தின் மூலம் மக்களிடமும், மாணவ சமூகத்திடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது அவர்களின் நோக்கமாக இருந்தது. அதில் பெருவெற்றியும் அடைந்துள்ளனர்.

ஆனால் மாணவர்கள் ஏன் போராடுகிறார்கள், அவர்களது கோரிக்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் அக்கறைப்படாமல், மாணவர் போராட்டத்தால் வீதி நெரிசல் என்று தலைப்பிட்டு ஊடகங்கள் தம் வக்கிரத்தை வழக்கம்போல வெளிப்படுத்தின.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 16 மாணவ தலைவர்களை நீதிமன்றத்தில் அஜாராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது ஆளும் மகிந்தா அரசின் அதிகார வர்க்கமும் அதற்கு சேவை செய்கின்ற நீதிமன்றமும் போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையில் அடைக்கவும் பல்கலைக்கழகங்களை விட்டு நீக்ககவும் கூடும்.

இந்த மாணவர்கள், இன-மத மொழி வேறுபாடுகளை கடந்து எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கல்வி உரிமைகளை உறுதி செய்வதற்க்காக தம்மை அர்ப்பணித்து போராடிக் கொண்டிருப்பவர்கள். எனவே இவர்கள் மீது மகிந்த பாசிச அரசு கட்டவிழ்த்து விடவுள்ள அடக்குமுறைகளிற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது எமது கடமையாகும.