Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஞானசார தேரர் போல் வெறிகொண்டு விரட்டிய ஆறுமுகன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக்கூட்டம் பண்டாரவளையில் நடைபெற்ற போது, ஆறுமுகன் தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். அந்த மேடையில் ஊடகவியலாளர் சிலர் தமது கடமைகளை செய்து கொண்டிருந்தார்கள். ஆறுமுகன் மேடைக்கு வந்தவுடனேயே வெறிகொண்ட யானைபோல் கடமையில் இருந்த ஊடகவியலாளரை தூக்கித் தள்ளி விட்டார்.

வெறிகொண்ட ஆறுமுக அமைச்சரின் இந்த இழிசெயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று. மலையக சமூகத்திற்குள்ளளேயே தோற்றம் பெற்ற தந்தை தொண்டமான் முதல் மைந்தன்வரை எப்படி அதியுயர் சொத்துடமை வர்க்க வாரிசானார்கள். வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலையக மக்கள் தம் உழைப்பால் கொடுத்த பிச்சைப் பணச் சந்தாவால்தான் வெறிகொண்ட அதிகாரத் திமிர் அரசியல்வாதிகளாக வலம் வருகின்றார்கள்.

இப்படி மலையக மக்களிடம் பிச்சை எடுத்து வாழும் தண்டப் பேர்வழிகள் உழைக்கும் தொழிலாளர் தினத்தில் மதிக்கப்பட வேண்டிய ஊடகவியலாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன் தாக்க முற்பட்டது போதை வெறியின் பாற்றபட்டதா? அல்லது அதிகார வெறியின் பாற்பட்டதா?

பொது மேடையிலேயே இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றால் உதவி என்று அலுவலகத்துச் செல்லும் சாதாரண தொழிலாளியை எவ்வாறு நடத்துவார்? மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர் சுயநினைவோடுதான் மேடைக்கு வந்தாரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்பொருமுறை மாகாண சபை தேர்தல் காலத்தில் பிரசாரத்திற்காக அமைச்சர் முத்து சிவலிங்கம் வருகை தந்திருந்தபோது, சாதாரண தொழிலாளி ஒருவரைப் பார்த்து "உன்னை வெள்ளை வேனில் தூக்குவேன்" என்று அதட்டும் தொனியில் எச்சரித்தார் எனவும் சொல்லப்படுகின்றது.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் மகிந்தர் ஐயாவிற்கு மாத்திரமல்ல, அவரின் சகல சகாக்களுக்கும் சாதாரண புளக்கத்தில் விடப்பட்டுள்ளது. பொதுபல சேனாக்காவிகள் முதல் ஆறுமுகத் துரைகளுக்குள்ளாலும் இன-மத அதிகார வெறியாக வியாபித்துள்ளது. போதையும் அதிகாரமும் அரசியலில் ஒன்று கலந்திட்ட எம்நாடு…பாருக்குள்ளே ஓர் நல்நாடு.