Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மே தினம்.

சிக்காக்கோ நகரம்

மனிதக் குருதியில் குளித்து

உழைக்கும் வர்க்கத்தின் முகம் மலர

விழித்தெழுந்த மகத்தான நாளே மே தினம்!

 

நான்கு தோழர்களின்

மரண வாசலில் பிரசவமாகி

இன்று நாடெங்கும் வலம் வரும்

உழைப்பாளர் தினமே மே தினம்!

எட்டு மணி நேர வேலை வேண்டி

வானைக்கிழித்த தொழிலார்கள் குரல்களில்

முதலாளித்துவத்தின் குரல்வளை நசுக்கப்பட்டு

சோஷலிச வித்துக்கள் துளிர்விட்ட நாளே மே தினம்!

 

உழைப்பவன் கேட்பதெல்லாம்

வேலை, உண்ண உணவு, உடுக்க உடை

இருக்கப் படுக்க இருப்பிடம் இதைக்கேட்டு

விதியை மாற்றி வீதிக்கிறங்கி வந்ததே மே தினம்!

 

தூக்கு மேடையிலும் அந்தத் தோழர்கள்

துணிந்து பேசி கூறியதெல்லாம் எங்கள் மரணம்

இந்தத் தேசமெங்கும் தீப்பொறியை மூட்டும்

உழைப்பவன் கரங்கள் ஓங்கும் அதுவே மே தினம்!

 

மரம் கனிகளால் அறியப்படுவது போல

தொழிலாளர்களின் போர்க்குணம், தியாகத்தினால்

உண்மைத் தலைவர்களை அடையாளம் காட்டும்

நகல்களை விலக்கி நிஜங்களை தந்த மே தினம்!

 

அடிமை சாசனத்தின் வேர்களைப் பிடுங்கி

ஆதிக்கத்தை அடியோடு சாய்த்த தோழர்களின்

குருதியில் பிறந்து செம்பதாகை தாங்கி வீதியில்

விடுதலை கோஷங்களுடன் வலம் வந்த நாளே மே தினம்!

 

மட்டுப் படுத்தி எட்டு மணி நேர வேலைதந்த

அந்த பாசமிகு தோழர்களின் நினைவுகளோடு

வெல்லட்டும் சமவுடமை வாழ்க்கை!

பிறக்கட்டும் சமவுடமை சமுதாயம்!

 

*சந்துரு*