Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

தண்ணியில்லா இரணைமடுக் குளத்தை வடக்கே காவிச் செல்லப் போகின்றார்களாம்!

யாழ்ப்பாணத்தில் உள்ளதோர் சிறு கிராமத்தை எம்மக்கள் கிணறு காவிகள் என கிண்டலாக சொல்வதுண்டு. அதுபோல் தண்ணியில்லாத இரணைமடு குளத்தையும் வடக்கிற்கு காவிச்செல்லும் நிலைக்கு ("இரணைமடு குளக்காவிகள்") வந்துள்ளார்கள் வன்னியின் தமிழ்த்தேசியர்களும், இவர்களின் பாற்பட்ட அரசியல் இஞ்சினியர்களும்.

அண்மைக்காலங்களில் இரணைமடு குளநீரை யாழ் கொண்டுபோகும் திட்டம் பற்றிய வடமாகாண சபையின் மந்திரிகள் பிரதானிகள் உட்பட்ட ஏனைய எதிரும் புதிருமான தமிழ்தேசியர்களுக்கும், இஞ்சினியர்களுக்கும் இடையில் பயங்கரப் பட்டிமன்ற விவாதங்கள் நடைபெற்றதை யாவரும் அறிவீர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பொறியியலாளராகி, "குளக்காவலுக்கு" எதிரானவரான எம்.பி. ஸ்ரீதரனையும் எச்சரித்த சம்பவுமுண்டு.

அண்மையில் வன்னியின் விவசாயப் பிரதேசத்தைப் பார்த்து வந்த புலம்பெயர் நண்பர் ஒருவர் மனவேதனையுடன் பின்வருமாறு சொலகின்றார்: ஒருகாலத்தில் இரணைமடுக்குள நீர்ப்பாய்ச்சலால், கிளிநொச்சி மாவட்டம் பச்சைப் பசேலென விவசாயத்தின் தொட்டிலாக இருந்தது. சகல விவசாயப் பயிர்ச்செய்கையால் தாமும் உண்டு மற்றப் பிரதேசங்களுக்கும் உணவளித்த வன்னிப்பிரதேசம் வரண்ட பிரதேசமாகியுள்ளது. இன்று இரணைமடுக்குளம் விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றது. குடிநீர்ப் பிரச்சினை பெரும் பிரச்சினையாகியுள்ளது. பௌசர்களில் குடிநீர் வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இங்கு இலவசமாக வழங்கும் குடிநீர் பூநககரியில் லீற்றர் ஓரு ரூபாவிற்கு விற்பனையாகின்றது.

அன்று கொடிய யுத்தம் வன்னி மக்களின் உயிர் பொருள் ஆவி அத்தனையையும் காவு கொண்டதென்றால், இன்று இயற்கையின் வஞ்சனையால் பஞ்சம்-பசி-பட்டினி அம்மக்களைக் காவு கொள்கின்றது. இக்கொடிய நிகழ்வால் யாழ்நோக்கி செல்வோரும் உண்டு. அவ்வசதியில்லாத வாழையடி வாழையாக வாழ்ந்த மக்கள் என் செய்வர்?... எங்கு செல்வர்?... தம்மிடமுள்ள சிறுசிறு சேமிப்புக்களையும் பொருட்களையும் விற்று வாழ்கின்றார்கள். கணவனை இழந்து திக்கற்ற வாழ்வின் பாற்பட்டதுகள் வறுமையின் பாற்பட்டு, விற்பதற்கு எதுவுமின்றி தங்களையே விற்கும் அவலம் வன்னியின் கோரக் கொடுமையாகியுள்ளது.

இக்கொடுமைகளை அனுபவிக்கத்தான் வடமாகாண சபைக்கு ஏகப்பெரும்பான்மையாக தாரைவார்த்தோமா? என மக்கள் கொதிக்கின்றனராம்?....

ஆமாம் ஏகப் பெரும் வாக்குப் பெற்ற ஆண்ட பரம்பரைக்கு… ஆளப்படும் பரம்பரையின் அவல வாழ்வு எங்கேதான் புரியப்போகின்றது. அவர்கள் தம் நலனிற்காக ஊர்-உலகம் சுற்றுகின்றார்கள். இவர் எப்படி உங்கள் குக்கிராமங்களுக்கு வருவார்கள்.

புதினப் பத்திரிகையைப் பார்த்த பாடசாலைச் சிறுவன் ஒருவன் தாயிடம் மாலையுடன் செல்லும் இவர்கள் எல்லாம் யாரம்மா? எனக் கேட்டானாம்?.. இத் தறுதலைகள்தான் எம்மாகாணசபை எம்.பி. மந்திரிகள் என்றாளாம் தாயானவள். அப்போ அதிலிருக்கும் பெரிய குங்குமப் பொட்டுக்காரன்?... இவர்களும் இவர்களின் வழி வந்தவர்களும்தான் எம் குங்குமங்களை அழித்த பெரும் குங்குமப் (நெற்றி) பொட்டுக்காரர்கள் என்றாளாம்…. மண்ணை அள்ளித் திடடிய கணவனை இழந்த அத்தாயானவள்…. இப்படி இவ் ஏழைகள் அழும் கண்ணீரின் பெறுமானம் இரணைமடுக் குளத்தை காவ முற்படும் மூடர்களுக்கு விளங்குமா? எனக் கேட்டார் வன்னிக்கு சென்று வந்த நண்பர்?.