Tue05262020

Last updateSun, 19 Apr 2020 8am

நாடு பொது பல சேனவின் இனவெறிக் களுஞ்சியமாகியுள்ளது.

மகிந்தா இனவெறிக்கு குழலூதும் கண்ணனாகியுள்ளார்!

ஜாதிக பல சேனா எனும் அமைப்பு நேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் காடையர்கள் போல் புகுந்த பொது பல சேனா அமைப்பினர் ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்து நிறுத்தியதோடு, வந்திருந்த ஒரு சில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர்.

காலை 10.30 மணிக்கு ஊடகவியலாளர் மாநாட்டிற்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம் பெறும் மண்டபத்திற்கு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மௌலவிகளும் வட்டரெக்கே விஜித தேரர் தலைமையிலும் ஹோட்டலில் கீழ் தளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன் போதே பொது பல சேனாவின் விதாரன வெனியே நந்த தேரர் உட்பட சிலர் அவ்விடத்திற்கு வந்து காடையர்கள் போல் பௌத்த குருமாரை பயன்படுத்தி ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதற்கு பதிலளித்த மௌலவியொருவர் இதனை ஜாதிக பல சேனா என்ற எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எனவே நீங்கள் அழைப்பில்லாமல் இங்கு வந்திருக்கிறீர்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். பின்னர் இவ்விடத்திற்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரியொருவரும் இக்கருத்தையே தெரிவித்தார்.

இதன் போது ஓர் றவுடிபோல் ஆவேசமாக பேசிய நந்த தேரர் பிக்குமார் நடத்தும் கூட்டத்தில் வேறு பிக்குமார் கலந்து கொள்வதை எவராலும் தடுக்க முடியாது என்றார். அத்துடன் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு காவியுடை தரித்தவர்களை பயன்படுத்த வேண்டாம். இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல. காவியுடை போட்டுக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர். அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள்.

முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாம் மௌனமாக இருக்க மாட்டோம் என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வந்திருந்த பௌத்த குருமாரிடம் பௌத்த மதம் தொடர்பாக கேள்விகளை கேட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர் நடத்த வந்திருந்த வட்டரெக்கே விஜித தேரர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர் தெரிவித்தார்.

பின்னர் வட்டரெக்கே விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார்.

"நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.

மக்கள் நலன் சார்ந்ததோர் நேர்மையான பௌத்த துறவியொருவரை இம்சித்து விரட்டியடிக்கும் அளவிற்கு, நாடு பொதுபலசேனாவின் இனவெறிக் களஞ்சியமாகியுள்ளது. இக்களஞ்சியக் காடையர் கூட்டத்தை நடமாட விட்டு அவர்கள் எம் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்…. என் இனிய பிள்ளைக் கனியமுதுகளே! இனவாதச் செல்வக் களஞ்சியங்களே!, நீங்கள் முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்க ஓடி-ஆடித் திரிந்து வருவதைக் காண்கையிலே என் மேனி சிலிர்குதடி எனும் குழலூதும் கண்ணன் ஆகியுள்ளார்கள் மகிந்த-கோகத்தபாயர்கள்.

முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாம் மௌனமாக இருக்க மாட்டோம் என பொதுபல சேனாக்காள் இன்பக் கதைகள் சொல்கையில் நீதி-உட்பட்ட அனைத்து முஸ்லிம் மந்திரிகளும், அவர்கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்தானெ மகிந்த புல்லாங்குழலை ஒத்தூதி வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில் இவர்களும் முஸ்லிம் சமூகத்தின் சார்பான மகிந்த தலையாட்டிப் பொம்மைகள் அன்றோ!... தம் தேவைக்கென மக்களிடம் செல்கையில் உம் கண்ணில் நீர் வடிந்தால் எம் நெஞ்சில் உதிரங் கொட்டுதடீ என்பார்கள். என்று தணியும் இம்மகிந்த அடிமைகளின் கொத்தடிமை மோகம்.??...