Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதே தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

"71ஏப்பிரல் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் வீரப்பிரதாபங்களை ஞாபகப்படுத்துவது மட்டுமே இந்த நினைவு கூரும் நிகழ்வுகளின் மையமான விடயமாக இருக்கக் கூடாது. கிளர்ச்சி வீரர்களின் வீரபிதாபங்கள் பேசப்படல் வேண்டும். அத்துடன் ஏன் இந்த வீரர்களின் போராட்டம் தோற்றுப்போனது? அதற்க்கான காரணங்கள் என்ன? இனி எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்து செல்வது? பற்றி சிந்திப்பதும், பேசுவதும் தான் இந்த நிகழ்வுகளின் வெற்றியாக இருக்க முடியும்.

71 ஏப்பிரல் கிளர்ச்சியானது பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வுக்காக முதலாளித்துவ அரசுக்கெதிரான போராட்டமாக இருந்த போதும், மக்களை அணிதிரட்டாது அவர்களிடமிருந்து அந்நியப்பட்ட இளைஞர்களால், சேகுவேரா பாணியில் நடைபெற்ற கிளர்ச்சியாகும். இது அன்றைய ஆட்சியாளர்களினால் இலகுவாக நசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் 87-89களில், 71 கிளர்ச்சியின் தோல்வி குறித்த எத்தகைய விமர்சனமும் இன்றி மறுபடியும் பழைய சேகுவாரா பாணியில், மக்களை அணிதிரட்டாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பாரிய தோல்வியினை அடைந்தது.

எனவே இந்த நாளில் நாம், இந்த கிளர்ச்சிகளின் தோல்விக்கான பிரதான காரணமான போராட்ட சித்தாந்தம் குறித்து சிந்திக்க வேண்டும். பரந்து பட்ட மக்களை போராட்டத்தில் இணைக்க கூடிய மாக்சிச-லெனினிய முன்னணி வீரர்களாக உருவாக்குவது குறித்து பேச வேண்டும். மக்கள் மீது ஆளும் முதலாளித்துவ அரசுகள் சுமத்துகின்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை, பொருளாதரா சுமைகளிற்கு எதிராக மக்களுக்கு போராடக் கற்றுக் கொடுப்பது பற்றி நாம் பேச வேண்டும். மக்களுடன் இணைந்து மக்கள் போராட்டத்தினை முன்னெடுப்பது குறித்து பேச வேண்டும். இதுதான் 71 ஏப்பிரல் கிளர்ச்சி வீரர்களின் தியாகங்களிற்கு நாம் செய்யக் கூடிய மரியாதையாக இருக்கும்"

என நேற்றைய தினம் (05/04/2014) லண்டனில் இடம்பெற்ற 71 ஏப்பிரல் கிளர்ச்சியாளர்களின் 43வது நினைவு கூரும் நிகழ்வில் சிறப்பு பேச்சாளரான தோழர் குமார் குணரடனம் அவர்கள் உரையாற்றியிருந்தார்.