Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலாயிருந்தோர் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சி தருமபுரத்தில் பாலேந்திரா ஜெயகுமாரியும் அவரது மகள் சிறுமி விபூசிக்காவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரால் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோவும் மத குருவான பிரணவீனும் அதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் செப்ரம்பர் மாதத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் காணாமல் போனார். அண்மையில் மாங்குளத்தில் அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதனை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு வடக்கில் தொடரும் மனித உரிமை மீறல்கள்களையும் அரசாங்கத்தின் இராணுவ முனைப்புடனான போரினவாத ஒடுக்குமுறையினையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை கைது செய்யப்பட்டோர் உடன் விடுவிக்கப்படுவதையும், காணாமல் போய் எலும்புக் கூடாகக்கப்பட்ட ஆசிரியர் நிரூபன் பற்றி உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் கட்சி வற்புறுத்துகின்றது.

இலங்கையில் கைதுகளும் தடுத்து வைப்புகளும் காணாமல் போதல்களும் எலும்புக்கூடாக்குதல்களும் புதிய விடயங்கள் அல்ல. அவை வடக்குக் கிழக்கில் மட்டுமன்றித் தெற்கிலும் தாராளமாக இடம்பெற்று வந்தவையாகும். அதன் தொடர்ச்சியே அண்மைய கிளிநொச்சி மாங்குளச் சம்பவங்களாக வெளிப்பட்டு நிற்கின்றது. அவற்றின் எதிரொலிகளே இன்று ஜெனிவாவிலும் உரத்துக் கேட்கின்றன. இத்தனைக்கு நடுவிலும் மகிந்த சிந்தனை அரசாங்கம் தனது பேரினவாத ஒடுக்குமுறை அகங்காரத்தைக் கைவிடத் தயாராக இல்லை. அதனாலேயே திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

தனது மகன் காணாமல் போனோர் பட்டியலில் இருந்துவருவதை எந்தவொரு தாயாலும் பொறுத்துக் கொள்ளவியலாது. அவ்வாறே ஒரு கணவனையோ சகோதரனையோ சகோதரியையோ இழந்து நிற்பவர்களால் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும்? அவ்வாறான பல ஆயிரக் கணக்கானோரில் ஒருவராகவே பாலேந்திரா ஜெயக்குமாரியும் அவரது மகளான சிறுமி விபூக்காவும் இருக்கின்றனர்.

தனது மகனுக்காகவும் சகோதரனுக்காகவும் நீதி நியாயம் கோரி வந்தமையை எவ்வகையிலும் தவறானது எனக் கொள்ள முடியாது. பல ஆயிரக்கணக்கான தாய்மார்களின் குரலாகச் செயற்பட்டமைக்காகப் பழிவாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும். எனவே கைது செய்யப்பட்டவர்கள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும் என்பதுடன் கடத்தப்பட்டு எச்சமாக மீட்கப்பட்ட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் என எமதுக் கட்சி வற்புறுத்துகின்றது.

18.03.2014

சி.கா. செந்திவேல்

பொதுச் செயலாளர்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி