Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை அரசின் திடுக்கிடும் துப்பறியும் சினிமா- "றிவோல்வர் விபூசிகா": விமர்சனம்

நேற்று முன்தினம் இலங்கை அரசு கிளிநொச்சியில் மிகச் சிரமப்பட்டு துப்பறியும் படம் ஒன்றை எடுத்துள்ளது. அதன் திரைக்கதை இப்படிப் போகின்றது.

கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரி- 13 வயதே நிரம்பிய அவரது மகள் விபசிகா இருவரும் கைது. சந்தேகநபர் ஒருவரைத் தேடிச் சென்ற சமயம் அவர் ஜெயகுமாரியின் வீட்டில் இருந்து பொலிஸாரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்று விட்டார்.

இச்சினிமாவில் தாயாருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம: "சம்பவம் இடம்பெற்ற அன்று பி.ப 3.30 மணியளவில், எனது பிள்ளைக்கு உணவூட்டிக் கொண்டிருந்தேன். அப்போது உயரமான ஒருவர் கறுப்பு நிற ஜக்கெட்டுடன் வீட்டுச் சுவருக்கு மேலாக ஏறிப் பாய்ந்து உள்ளே வந்தார். உடனேயே நான் எனது மகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக் கேற்றுக்கு வெளியில் வந்தேன். அப்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வாகனத்துடன் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் எனது பெயரைச் சொல்லாமல் எனது பெயர் போன்ற வேறு ஒரு பெயர் சொல்லி அவரின் வீடு இதுவா என்று கேட்டனர். அதற்கு நான் பதில் சொல்வதற்கிடையில், எனது பெயரைச் சொல்லி அவரது வீடு இதுவா என்று கேட்க, குறித்த பெயருக்கு உரியவர் நான் தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். உட னேயே வாகனத்துக்கு அருகில் எங்களை இருத்தி விட்டு அவர்கள் வீட்டினுள் சென்றனர்.

அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது. அதன் பின்னர் பெருமளவான பொலிஸாரும், இராணுவத்தினரும் வந்து எங்களை விசாரித்தனர். மதிலேறிக் குதித்து வந்த நபரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது - என்றார். அதேபோன்று மகளும் மதில் ஏறிக் குறித்த நபரைத் தனக்குத் தெரியாதென்று பதில் நீதிவான் முன்பாகத் தெரிவித்தார். ஜெயகுமாரிக்கு எதிராகப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்துள்ள "பி' அறிக்கையில் குறித்த வீட்டில் வெடி பொருள்களை இனங்காணும் கருவி, துண்டுபிரசுரங்கள் காணப்பட்டன என்றும் அங்கேயே துப்பாக்கிச்சூடு நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்".

கிளிநொச்சிப் பொலீசாரால் எடுக்கப்படும் இப்படத்திற்கு "றிவோல்வர் விபூசிகா" எனப் பெயரிடப்படவுள்ளது. தணிக்கை சபைக்கு அனுப்பப்பட்டு, நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

றிவோல்வர் விபூசிகாவின் இறுதிக்கட்டம்:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமியையும், தாயாரையும் கைது செய்யவில்லை…. பொலீசார் மறுப்பு

சிறுமி உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நடவடிக்கையின் பின் நீதிமன்றினூடாக அவர்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வசனகர்த்தாவான பொலிஸ் அத்தியட்சகரின் வசனமான "கைது செய்யப்படவில்லை,.. பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது" என்பதில் எது சரியெனும் விவாதம் மகிந்தாவிற்கும் கோத்தபாயவிற்கும் இடையில் ஏற்பட்டு, முடிவுறாமல் கடைசியில் மேர்வின் சில்லவா, விமல் வீரவன்ச, பொதுபல சேனாவிற்கும் அனுப்பப்பட்டு, அதிலும் திருப்பதி இல்லாமல், நவநீதம்பிள்ளையின் மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. சிலவேளை திருத்தத்திற்காக ஜெனீவாவிற்கும் செல்லலாம்.

இத்துப்பறியும் படத்தை சர்வதேச தரம் வாய்ந்ததாக எடுப்பதில் மகிந்த-கோத்பாய திணைக்களங்கள் மிகக் கவனம் செலுத்தி வருகின்றன. காரணம் சனல்-4 உட்பட்ட, உலகப் பிரசித்தமான பல சனல்களில் வெளியிடும் நோக்கில் இருந்தேயாகும். குறைந்த செலவில் ஓர் பொலிஸ்-ராணுவ திணைக்களத்தையும், ஓர் தாயையும்-மகளையும் வைத்து வஞ்சக அரசியல் செய்யும் உத்தியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் தேசிய-சர்வதேச ரீதியில் பெருவோட்டம் ஓடும்?... ஆனால் ஓடாது.

-அகிலன்