Sat05302020

Last updateSun, 19 Apr 2020 8am

இவ்வார நிகழ்வுகளின் சாரம்!

சர்வதேச விசாரணை குறித்து என்னை பேசவிடவில்லை: அனந்தி எழிலன்

ஜெனீவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் முன்வைக்காத நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான என்னையும் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அனந்தி கூறியுள்ளார்.

கூட்டமைப்பு இதற்கொரு ஆணைக்குழு வைத்து ஜெனீவாவில் விசாரணையை ஆரம்பித்திருக்கலாமே? மெத்தப் படித்தவர்கள் பேசுமிடங்களில் இவவுக்கு என்ன வேலையென சம்பந்தன், சுமந்திரனின் கணிப்பு. இல்லை புலிகளின் உறவுகளும் பேசலாமென்பது ஸ்ரீதரன் எம்.பி. போன்றவர்களின் நிலைப்பாடு. இதனால் வந்த வினையாற்றல்தான் வடமாகாணசபைத் தீர்மானம். இதில் அனந்திக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை.

ஜெனீவாவை வென்றவர்களின் ஓலங்கள்!

குற்றச்சாட்டுகளைக் கேட்டுக்கேட்டு புளித்து விட்டதாம்!

ஜெனிவாவில் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஒன்றும் எமக்குப் புதியதல்ல.

“இந்த தீர்மானம் குறித்தோ அதன் வாக்கெடுப்பின் முடிவு குறித்தோ கவலைப்படவில்லை…. ------- ஜனாதிhதி

அமெரிக்காவின் தீர்மானம்! தமிழ் கூட்டமைப்புக்கு பெரும் ஏமாற்றம்! சபையில் அஷ்வர் எம்.பி. கிண்டல்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர்

நல்லிணக்க முயற்சிகளை கெடுக்கின்றீர்கள் – நவிபிள்ளையிடம் நேரடியாக பீரிஸ்!

இவர்கள் அமெரிக்கப் பார்வையுடன் கூடிய குருசந்திர யோகத்தில் இருந்து எக்காளம் இடுகின்றார்கள். சாதாரண தமிழ்-சிங்கள மக்களுக்கெல்லாம் சூரிய புத்தியுடன் கூடிய வெகுஜனப் குருசேத்திரப் போரின் பார்வை வருமிடத்து, இவர்களுக்கெல்லாம் எமகண்டத்துடன், கூடிய (கூண்டோடு) கைலாயம்தான். மக்கள் தீர்ப்பே (மின்சாரக் கதிரையுடன் கூடியதும், கடாபிக்கு வந்ததுமான) மகேசன் தீர்ப்பாகும்.

அதிக வாக்குகளைப் பெற்றாலும் தமிழர்களுக்கு எதுவித பலனையும் பெற்றுத்தர இயலாதவர்கள் கூட்டமைப்பினர்! டக்ளஸின் ஈ.பி.டி.பி.

உண்மைதான். தமிழர் பிரதேசங்களில் தங்களின் அரசு செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளை, நீங்கள் "மகிந்த நற்கருணை வரப்பிரசாதமாகக்" காட்டி செய்தாலும் கூட, மக்கள் அவர்களுக்கு (இவர்கள் மக்களுக்கானவர்கள் அல்லர் என்பதறிந்தும்) அமோக வாக்களிக்கும் அரசியல் சூட்சுமத்தை நீங்கள் அறிவீர்களா? அபிவிருத்திக்கு அப்பால் உங்கள் அடக்குமுறை அரசியலும், அதற்கு தீர்வில்லா திரிபுகளுடன் கூடிய கபட நாடகங்களும்தான், அவர்களுக்கான அதிக வாக்குகளாகின்றது.

வட கிழக்கு மக்களின் புன்சிரிப்பை சகிக்காத மேற்கத்தேய நாடுகள் சதி: பசில் ராஜபக்ஷ!

வட-கிழக்கு மக்கள் இவர்களின் கோமாளித்தன அரசியலைப் பார்த்து சிரிக்கும் "நக்கல் சிரிப்பு" இவர்களுக்கு புன்சிரிப்பாகத் தெரிகின்றது. என்செய்வது பாபப்பட்டதுகளின் கறும அரசியல் கணிப்பை!

மேர்வின் சில்வாவிற்கு வளர்ப்பு நாயும் கடிக்குதாம்!

"நான் வெளியில் இறங்கினால் வெளியில் இருக்கின்ற நாய்கள் என்னைப்பார்த்து குறைக்கின்றன. வீட்டுநாய் என்னை கடித்துவிட்டது என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா"

நன்றியுள்ள வீட்டு நாயுடன் உறவைப் பேண முடியாத மந்திரிக்கு பொதுமக்கள் உறவு அமைச்சர் பதவியாம்! மட்டியான ஜனாதிபதிக்கு, மடையரான மந்திரி!

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் சர்வதேச சமூகத்துக்கு இல்லை! – கொதிக்கிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன்.!

சர்வதேச சமூகம் மக்களின் அபிலாசைகளுக்கு ஆனதல்ல, தங்கள் அபிலாசைகளை மக்களுக்கு ஆனதாக காட்டும் "நீதியாதிக்க பாலபாட அரசியலை" இவர்கள் எப்போதான் படிக்கப் போகின்றார்கள். மக்களை நம்பாத உங்களுக்கு சர்வதேச சமூகம் சொர்க்கமாகத்தான் தெரியும்.

நான் பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் இருந்து இருந்தால், நல்லக்கண்ணு - வரதராஜனுக்கு இடையில் உட்காந்து இருப்பேன்.!!: கலைஞர் கருணா நிதி ........

கவலையை விடுங்கள் கலைஞரே! இப்போதும் என்ன கெட்டா போச்சு. நல்லக்கண்ணு-பாண்டிய-வரதராஜக் கம்யூனிஸ்ட்டுக்கள் இப்பவும் உங்களுக்கும்-செல்விக்கும் இடையில் கட்டுண்டுதானே இருக்கின்றார்கள். இதைவிட உங்களுக்கு வேறென்ன பொதுவுடமைப் பேறு வேண்டும்.

முரண்பாடுகளின் சர்வ வியாபகம்!

"உக்ரையினிலுள்ள துருப்புக்களை மீளப்பெறாவிடின் ஜி-8 கைத்தொழில் மயநாடுகளின் உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா நீக்கப்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கின்றது."

"எனினும் ஜி-8 நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடாக ரஷ்யா தொடர்ந்தும் செயற்படும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.!"

அமெரிக்கா தன் பொம்மை நாசிஸ்ட் அரசைக் காக்க எச்சரிக்கின்றது. ஜேர்மனி தன் இருப்பைக் (ரஸ்யப் பொருளாதார உதவி) தக்கவைக்க சலாம் போடுகின்றது. இவர்கள் எல்லாம் தங்கள் நலன்களைப் காப்பாற்றப் போராடுகின்றார்கள். ஆனால் வல்லாதிக்கங்களுக்குள் அகப்பட்ட மக்களை காப்பாற்ற யார் இருக்கின்றார்கள்?