Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழகத்தில் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு ரத்தக் கொதிப்பு!

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸாரைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் "தமிழர் முன்னேற்றப் படையினர்" நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் உடன் பிறப்புகளுக்கோ, இரத்தத்தின் இரத்தங்களுக்கோ உயிராபத்தோ, சிறுகாயமோ ஏற்படவில்லை.

இதற்கிடையில் சென்னை ஓட்டேரி வேப்பேரி பகுதிகளில் ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரும் மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் இப்போ தேர்தல் சீசன். இச்சீசனில் தேர்தல் காற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு ஊடாக பலமாக வீசுகின்றது. அதுவும் அ.தி.மு.க என்கின்ற "அம்மாவின் திக்கன்னா-முக்கன்னா கழகத்திற்கு" சாதகமாக அடிக்கின்றது. கடைசியாக வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அம்மா தன்பக்கத்திற்கு இருந்த சட்டத்தின் சாதகத்தன்மையை பயன்படுத்தி, அதை மத்திய அரசிற்கு எதிரான காண்டீப அஸ்திரமாக்கி எல்லோரையும் விடுதலையாக்கு என ஏவிவிட்டார். அதுவும் மூன்று நாள் காலக்கெடுவென விதித்து ஏவினார்.

ஏவிய மாத்திரத்தில் மத்திய அரசோ உனக்கு 232-எனும் அஸ்திரம் இருக்கின்றதென்றால், பார் என்னிடம் 235-எனும் பாசுபதாத்திரம் இருக்கின்றது பாரென ஏவி அம்மாவின் சகல அம்புகளையும் திரும்பி அம்புறாத் தோணிக்கு செல்ல விடாமலே சுக்கு நூறாக்கியுள்ளது.

இருந்தாலும் அம்மர் தேர்தல் காற்று இன்னும் கூடுதலாக தனக்கு சாதகமாக வீசட்டும் எனும் எண்ணம் கொண்டு தமிழகத்தில் காங்கிரஸிற்கு எதிரான சகல தாக்குதல்களையும் கண்டும் காணாமல் இருக்கின்றா. இந்த உற்சாகத்தில் வை.கோ.-சீமான் போன்றவர்களின் தமிழர் முன்னேற்றப்படையின் "இரத்த்தின் இரத்தங்கள்" காங்கிரசிற்கு எதிராக வெளுத்து வாங்குதுகள்.

அத்தோடு அம்மாவின் அறிவற்ற பாமரத்தனம் கொண்ட அரசியல் கோசங்களுக்கு "பகுத்தறிவுப் பாமரத்தின் உடன்பிறப்புக்களான" சீமான்-வை.கோ. வகையறாக்களும் ஆமாப் போடுகின்றன. கச்சதீவை மீட்போம், இலங்கையில் ஈழத்திற்கு சர்வஐன வாக்கெடுத்து, ஈழத்தை மீட்போமென தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்ல அறிவற்று அம்மாவின் காலில் விழும் அறிவீன ஆத்மார்த்தங்களிலும் பார்க்க இதுகள் முந்திக் காலில் விழும் நிலையில் உள்ளன.

அம்மாவின் கடந்தகால கர்னகடுர ஈழ எதிர்ப்பு, பிரபாகர எதிர்ப்பு பற்றி அறியாத பாமரங்களா? இப்போ இந்த இரத்தக் கொதிப்பில் உள்ள இரத்தத்தின் இரத்தங்கள். போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என அன்று மகிந்தாவிற்காக சாட்சி சொன்ன தேவதைதான், இன்று மகிந்தாவிற்கு தூக்குத்தணடனை பெற்றுக் கொடுக்க சர்வ உலகிற்கும் போய்வரப் போகின்றாவாம்.

கடந்த மாதம் கருணை மனுவிற்கு ஊடாக சிறையில் இருந்து வரும் நளினி நோய்வாய்ப்பட்டுள்ள தன் தகப்பனை சென்று பார்ப்பதற்கு அருள் பாலிக்கும்படி இத் தெய்வத்தாயிடம் கருணை மனு போட்டபோது, நீதிமன்றில் பத்திரகாளியாட்டம் உருக்கொண்டு பிரதமரைக் கொன்ற பயங்கரவாதிக்கு கருணையா? வேண்டவே வேண்டாம் சிறைதான் நளியின் வீடெனக் கூறி கருணை மனுவையே மறுத்தவர், இன்று நளினியின் விடுதலைக்கு டில்லி வரை போய் போர்-ஆடப் போகின்றாராம்.. பொன்மனச் செல்வி. தேர்தல் என்று வந்தால் தமிழக அரசியல்வாதிகள்போல் அங்கிடுதத்திகள் உலகில் யாருமிலர்.

வை.கோ. எனும் பகுத்தறிவாளன் இம்முறை மோடியின் கூட்டாளி, இலங்கையில் ராஜபக்சபோல், குஜராத்தில் எத்தனை ஆயிரத்தை கொன்று குவித்த புண்ணியவான். இந்த இந்துத்துவ மோடி. பெரியாரின் பாhவையில் பாம்பைப் போல் அடிக்கப்பட வேண்டியதோர் ஜந்து. ஆனால் பெரியாரின் வாரிசான வை.கேர். ராஜபக்சாவிற்கு தூக்கும், மோடிக்கு பிரதமர் பதவியும் வேண்டும் என ஆண்டவனைப் பூசிக்குது.

ஆகவே தற்போது இரத்தக் கொதிப்பில் உள்ள உடன் பிறபபுக்களுக்கு தேர்தல் முடிய இக்கொதிப்பும் அடங்கிவிடும். தமிழக அரசியலின் பிறப்பிடம் சினிமாவாகும். இதன் சகல கர்த்தாக்களும் சகல கட்சிகளின் தலைவர்களாகவே உள்ளனர். எனவே இவர்களின் அரசியல் என்பது சந்தர்ப்பவாதத்துடன் கூடிய நடிப்பு அரசியலாகவே இருக்கும்.

அடக்கி ஓடுக்கலுக்கு உள்ளாகும் ஓர் சமூகத்திற்கு, அதே நிலையில் உள்ள அல்லது இல்லாத எச்சமூகமும் தார்மீகக் கடமையின் பாற்பட்டு, தன்னாலானவற்றை எவ்வித நோக்கமுமின்றி உதவுவது, போராடுவது சரியானதும் இன்றியமையாததுமாகும். இதை இன்றைய உலக ஓட்டத்தின் பாற்பட்ட பல நடவடிக்கைகளில் இருந்து அவதானிக்கமுடியும். ஆனால் தமிழக அரசியல் இதுவெதுவுமில்லாத வெறும் சினிமா நடிப்பு கொண்டது. படம் முடிய சினிமாக் கொட்டகையால் வெளியே வரும் உணர்வே தமிழக அரசியலின் சாராம்சம்.

--அகிலன் (28/02/2014)