Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏன் இது திட்டமிட்ட கொலை இல்லையா?

செஸ்சிங்டன் சரேயை சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரஜை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மகஸின் சிறை மலசலகூடத்திலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்படடார்.

புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறைத்தண்டனையை அனுபவிக்கும் போதே இம்மர்மக்கொலை நடைபெற்றுள்ளது. 2011ம் ஆண்டு வெலிக் கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த கோபிராஜ் அதன் பின்னர் மகஸின் சிறைச் சாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

கோபிராஜ் மாரடைப்பினாலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவரது உடலில் எந்த அடிகாயங்களும் இல்லை என்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காரர்கள் சொலகின்றார்கள.

"நீண்ட திட்டத்துடன் இதனைச் செய்துள்ளனர். எமக்கு இது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இதற்கு முன்னரும் இவரைக் கொலை செய்ய இரண்டு தடவைகள் முயற்சி செய்தனர். அது வெற்றியளிக்கவில்லை. இதன் பின்புலத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் எமக்குச் சந்தேகம் இருக்கிறது".! என கோபிதாஸின் சகோதரர்; சொல்கின்றார்.

"சம்பவம் அறிந்தவுடன் நான் அங்கு சென்றேன்.சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சின் மூலம் எனது சகோதரன் உயிரிழந்துள்ளதாக அறிந்து கொண்டேன். சுகயீனத்துக்கு மருந்தைக் கொண்டு போய்க் கொடுத்தாலும் அதிகாரிகள் அதனை எனது சகோதரனிடம் வழங்க மாட்டார்கள். அவ்வாறான ஓர் அரசே இந்த நாட்டில் உள்ளது என்றார்"… கோபிதாஸின் சகோதரர்

"இவரை விடுவிக்க தூதரகம் ஊடாக 7 வருடமாக முயற்சி செய்தேன். எனினும் இன்று எனது கணவரை இவர்கள் கொலை செய்துள்ளனர்" என்றார் கோபிதாஸின் மனைவி.

"தமது நாட்டுப் பிரஜை ஒருவரின் மரணம் தொடர்பில் தமக்குப் பதிவாகியுள்ளதாகவும் அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரிட்டன் தூதரகம் சொல்கின்றது."

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போலுள்ளது. பிரிட்டனின் நடவடிக்கைகள். சொற்ப காலத்திற்கு முன்பாக நடைபெற்ற அவர்களின் "விசுவாச மாநாட்டிற்கு" வந்த பிரிட்டனின் பிரதமர் தான் தமிழ் மக்களின் பிதாமகனாகவும், கருணை வள்ளலாகவும் நடித்துச் சென்றார். போகமுடியாத வீடுகள் குச்சுக் குடிசைகளுக்கு உள்ளும் மிகக் கஸ்டப்பட்டு குனிந்து வளைந்து சென்று வந்தார். எம்.ஜி.ஆர் போல் பல வயதானவர்களிடமும் சாப்பிட்டு நாடகமாடி நடித்துச் சென்றார்.

இப்போ ஜெனிவாவிற்கு வந்து மகிந்தாவை குற்றவாளிக் கூண்டிற்குள் ஏற்ற ஏதேதோ செய்வோம் என நீட்டி முடக்குகின்றார்கள். பொங்கி எழுகின்றார்கள். மகிந்தாவை குற்றவாளியாக்கமுன் சிறையில் இருந்த தன் குடியுரிமை பெற்ற பிரசைக்கு தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த ஓர் உயிரைக் காப்பாற்றி தன்னாட்டில் வாழ வைத்திருக்கலாம் அல்லவா?

கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாத இவ்வானரங்கள் எல்லாம். வானத்தில் ஏறி மின்சார நாற்காலியில் (மகிந்தாவை) அமர்த்தப் போகின்றார்களாம். போங்கடா மக்கள் விரோதிகளே!.. உங்களின் ஜனநாயகமும், மக்கள் நலனில் சவாரி செய்யும் ஏகாதிபத்தியப் புத்தியும்.