Sat05302020

Last updateSun, 19 Apr 2020 8am

"பாபப்பட்ட இனத்திற்கு" வழங்கும் பிராயச்சித்தங்கள்!

தமிழர் பிரதேசங்களுக்கு பாலம் கட்டி றோட்டுப் போட்டாலும், பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தாலும், யாழ்தேவியை காங்கேசன்துறை வரை ஓட வைத்தாலும், அது எம்நாட்டடின் பகுதி ஒன்றிற்கு அரசு செய்யும் சாதாரண நடவடிக்கையல்ல. பாபப்பட்டதோர் இனத்திற்கு செய்யும் பிராயச்சித்த இரட்சக நடவடிக்கைகளாகவே அரச தரப்பால் காட்டப்படுகின்றது.

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை "யாழ்.பல்கலைக்கழகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மக்களுக்கு தந்த விலை மதிப்பற்ற சொத்து" எனத் தெரிவித்துள்ளார்.

இதில் கலந்து கொண்ட உயர் கல்வி அமைச்சர் "கொடூர யுத்த முடிவிற்கும், தற்போதுள்ள சமாதான சூழலுக்காகவும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர் உடமைகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த வகையில் "எனது நண்பரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பத்திற்கு மேற்பட்ட தடவைகள் கொலை முயற்சிகளிலிருந்து உயிர் பிழைத்துள்ளார்."

ஆகவே சாகாவரம் பெற்றுள்ள அவரது ஆசிர்வாதத்துடனும், பேராதரவுடனும் ஜனநாயகத்தை இந்நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனராம்.

உண்மையில் நடைபெற்றது டக்ளஸ் புகழ் மகிழ்வு விழாவுடன் கூடிய இரட்சகப் பேறுபெற்ற பரிகார நிகழ்வு ஒன்றுதான். ஒருவராலும் பெற்றுக்கொடுக்க முடியாத ஒன்றை தெய்வீகத்தன்மை கொண்ட தேவதூதர் ஒருவரின் அருளாகவே அரச தரப்பால் காட்டப்படுகின்றது.

வடபிரதேசத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டதோர் மாகாணசபையும் உள்ளது. அதற்கு ஏனைய மாகாணங்களுக்கு உள்ள எந்த வேலைமுறைகள் நடைமுறைகள், செயற்பாடுகள் எதுவுமே இல்லை. திட்டமிட்ட முறையில் ஆளுனரும், அரச தரப்புமே இதன் முழுமுதற் கடவுளாவார்கள்.

இதை கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் சிறப்பாகத் தெரிவித்துள்ளார்.

"ஆளுநரை வெளியேற்ற வேண்டும். காணி பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வடமாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில் ஆளுநர் ஒருவரை தெரிவுசெய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன். வடமாகாண சபை கூறும் காணி பொலிஸ் அதிகாரங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி வழங்கினாலும், மாவட்ட ஆட்சிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பட்டுள்ளார்.""

இதைவிட முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் அதன் இன்னோரன்ன நடவடிக்கைகளுக்கும் இவ்வரசே பெரும் பொறுப்பாளியும் குற்றவாளியுமென ஓர் நியாயத்துரந்தராக பதில் அளிக்கின்றார்.

"நாங்களே செய்து கொண்ட பிழைதான் ஜெனீவா!"

"அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன். அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை. இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது. சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்."

மகிந்த குடும்பமும் அதன் அரச தரப்பும் தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலுக்கு ஊடாக தோற்கடிக்கப்பட்ட - வல்லமையற்ற சமுதாயமாக ஆக்கிவிட்டு, மறபுறத்தில் அபிவிருத்தி எனும் பெயரில் அவர்களின் தேவதூத, இரட்சகர்களாக வலம் வருபவர்களுக்கு "இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது. சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல" எனும் பெரும்பொருள் கொண்ட பேட்டி மாபெரும் செருப்படிதான். மார்ச் மாத ஜெனீவா தீர்மானத்திற்கு கோட்டை விகாராதிபதி இலங்கையிலேயே முன்தீர்ப்பு வழங்கிவிட்டார்

-அகிலன்