Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தெவனகல மலைப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேறுமாறு பணிப்பு

மாவனல்ல தெவனகல மலைக்குன்றுக்கு அண்மையிலுள்ள ஹெமிமாதகம பகுதியில் வசிக்கும் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவித்துள்ளது தொடர்பாக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து விளக்கமளித்து வருவதாக கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

கேகாலை கச்சேரியில் இது தொடர்பாக கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்ட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மாவனல்ல தெவனகல மலைக்குன்றில் அமைந்துள்ள விகாரைக்கு கீழ் அந்த குன்றைச் சுற்றியுள்ள பகுதியில் 400 மீட்டர் பிரதேசத்தை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அகழ்வாராய்ச்சிக்காக பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்தே இந்த முஸ்லிம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

முஸ்லிம் கவுன்சில் இந்த விடயம் தொடர்பாக நேற்று பிரதியமைச்சர் பைசல் முஸ்தபாவையும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியையும் சந்தித்து விளக்கமளித்தன. இது விடயம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் கவுன்சில் கேகாலை மாவட்ட ஐ.தே.கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிமையும் சந்தித்து விளக்கமளித்துள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தெரிவிக்கின்றது.