Thu12052019

Last updateWed, 04 Dec 2019 2pm

மாவீரர் யாரோ என்றால்...! (சிறுகதை)

கார்த்திகை இருபத்தி ஏழு. வேலையிலிருந்து அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறக்கப் பறக்க வீட்டிற்கு வந்து குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் மாவீரர்தின விழா நடக்கும் மண்டபத்தை நோக்கி காரில் பறந்துகொண்டிருந்தேன். என் மனத்திரையில் மாவீரர்களாகிவிட்ட உறவுகளினதும் நண்பர்களினதும் தெரிந்தவர்களினதும் முகங்களே படங்களாய் ஓடிக்கொண்டிருந்தன. என் இதயம் பாராங்கல்லாய் கனத்துக் கிடந்தது. நீண்டதொரு பெருமூச்சு என்னிடமிருந்து வெளியேறிக் கொண்ட போது நான் மண்டபத்தை அடைந்திருந்தேன்.

மாவீரர்களின் நினைவுகளால் சூடேறியிருந்த என் உடலை வெளியே அடித்துக் கொண்டிருந்த சினோவும், காற்றும், கடும் குளிரும் என்னைத் தாக்கியதாக நான் உணரவில்லை. காரை நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு மண்டப வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். மண்டப வாசலை அண்மித்துக் கொண்டிருந்தபோது கார் ஒன்று வந்து ஒரு வயோதிப தம்பதியினை இறக்கிவிட்டு குளிரில் உறைந்த காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. ஆனால், அந்த வயதான இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி, ஒரு அடி கூட நகர முடியாமல் பனியில் உறைந்த தரையை பயத்துடன் பார்த்தபடியே நின்றார்கள்.

அவர்களைக் கண்டும், காணாதவா்களைப் போல் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. "என்ன ஐயா உ தவி ஏதாவது தேவையே..? " என்றபடியே அவர்களை நெருங்கினேன்.

"ஓம் தம்பி நான் நடப்பன். ஆனா இவதான் பயப்பிடுறா ஒரு கை பிடிச்சா கொஞ்சம் உதவியா இருக்கும்" என்றார் கெஞ்சலாக.

"அம்மா ஒண்டுக்கும் பயப்பிடாம இந்தப் பையைத் தாங்கோ என்று கேட்டு, கைப்பையை வேண்டிக் கொண்ட நான் அந்த அம்மாவின் ஒரு கையைப் பிடிக்க ஐயாவும் மறு கையைப் பிடிக்க மெல்ல மெல்ல, அப்போது தான் நடை பழகும் ஒரு குழந்தையைப் போல் தத்தித் தத்தி மண்டபத்தின் நுளைவாசல் வரை வந்து சேர்ந்தார் அவ் வயோதிபத் தாய்.

நான் அவரது கைப்பையை அவரிடம் நீட்டிய போது என் புறங்கையில் வீழ்ந்த சூடான ஒரு துளி நீர் என்னை அவரது முகத்தை உற்று நோக்க வைத்தது. அத் தாயின் குழிவிழுந்த கண்களில் இருந்து சுருக்கங்கள் நிறைந்த கன்னங்களில் நீர்க்கோடுகள் நீண்டு இறங்கிக் கொண்டிருந்தன. எந்த வார்த்தைகளும் இன்றி பார்வையாலயே இருவரும் எனக்கு நன்றியைத் தெரிவிப்பதை உணர்ந்த மறுகணமே இவர்களுக்கு இன்னும் உதவ வேண்டும் என்று என் மனம் உந்தியது.

"வாங்கோ உள்ளே போவோம்" என்றபடி இருவரது கைகளையும் பிடித்தபடி மண்டபத்தின் உள்நோக்கி நடக்கலானேன். நுளைவாசலின் இடது பக்கத்திலிருந்து வீசிய கொத்துரொட்டி வாசத்தை மேப்பம் பிடித்து என்னையும் அறியாமல் தலை இடது பக்கம் திரும்பியது.

"தமிழீழ உணவகம்" என்று பெரியதொரு அறிவித்தல் தொங்கியது அங்கே. பசித்துக் கிடந்த எனது வயிற்றை "முதலில் இங்கே வா" என்று அழைப்பது போலிருந்தது அந்த வாசமும், வாசகமும்.

உணவகத்தின் உள்ளே கறுப்பு ஜீன்சும், வெள்ளை சேட்டும் போட்ட சிலர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் வியாபாரத்தில். அவர்களைக் கடந்து உள்ளே செல்கையில் வாசலின் இரு மருங்கிலும் மஞ்சள் சேலைகளுடன் நின்ற சில பெண்கள் பூக்களும், மொழுகுவர்த்தியும் தந்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். மக்களால் மண்டபம் நிறைந்திருந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த மாவீரர் படங்களின் முன் அகவணக்கம் செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றார்கள்.

"அம்மா நீங்களும் இந்த வரிசையில் நிற்கப் போறியலோ..? அல்லது அங்க போய் கதிரையில இருக்கப் போறியலோ..?" என்ற என் கேள்விக்கு, உடனடியாகவே பதில் வந்தது.

"இல்லத் தம்பி இத முடிச்சிற்று பிறகு போய் இருக்கலாம் தானே" என்று. அவர்கள் இருவரையும் வரிசையில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு நானும் அருகில் நின்று கொண்டேன். அம்மாவின் கையிலிருந்த மூன்றாவது கால் நடுங்கிக் கொண்டிருந்தது.

அதனைக் கவனித்துக் கொண்ட எனக்கு அவா்களைப் பாா்க்க மிகவும் பரிதாபமாகவிருந்தது. அப்போது வெள்ளைச் சேட்டும், கறுப்பு ஐீன்சும் போட்ட ஒருவா் வந்து வரிசையைப் பார்த்து கூவினாா்

”இங்கு மாவீரா் குடும்பத்தை சோ்ந்தவா்கள் யாராவது இருக்கின்றீா்களா..? இருந்தால் முன்னுக்கு வாங்கோ வாிசையில நிக்கத் தேவையில்லை” என்று. உடனே கையை உயா்த்திக் காட்டிய ஐயா ”தம்பி நீங்களும் வாங்கோ” என்று என்னையும் அழைத்தபடி வாிசையிலிருந்து விலகி மாவீரா் படங்கள் வைத்திருந்த பகுதியை நோக்கி முன்னேறத் தயாரானாா். நானும் தள்ளாடிய அம்மாவை அனைத்துப் பிடித்தபடி ஐயாவின் பின்னால் நகா்ந்துகொண்டிருந்தேன்.

அங்கே பல மாவீரா்களது படங்கள் வரிசையாக வைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டிருந்தன. ஐயாவும், அம்மாவும் அந்த மாவீரா்களது படங்களுக்குள் தங்கள் பிள்ளையினை கண்களால் தேடுவதை என்னால் உணர முடிந்தது.

ஒரு பெண் மாவீராின் படத்தின் அருகே சென்றதும், அதன் முன் பூக்களை வைத்துவிட்டு படத்தை தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாா் ஐயா. அவா் பின்னால் சென்று கொண்டிருந்த அம்மா படத்தை உற்று நோக்கிப் பாா்த்து விட்டு,

”ஐயோ என்ர குஞ்சு..! ஐயோ என்ர குஞ்சு..!” என்று முனுமுனுத்தபடி கண்களிரண்டும் நீா் சொரிய படத்தைப் பாா்த்து கும்பிட்டபடியே சிறிது நேரம் அதே இடத்தில் அகலாது நின்றாா். நகா்ந்து கொண்டிருந்த வாிசை ஸ்தம்பித்துப் போனது. இதனைக் கவனித்த ஐயா உடனேயே ”சாி வா..வா.” என்றபடி அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தாா். அவரது கண்களும் கசிந்து சிகப்பாய் இருந்தன. பின்னால் நின்ற நானும் அம்மாவின் தோழில் அனைத்து முன்னோக்கி நகா்த்தினேன். அவா் ”என்ர குஞ்சு.. என்ர குஞ்சு..” என்று வாய்க்குள் முனுமுனுத்தபடியே மெல்ல மெல்ல நகா்ந்து கொண்டிருந்தாா்.

”கல்லறைகள் விடை திறக்கும்

அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

பாலினைச் சொாிந்திடும் நிலவு

ஒரு பாடலை எழுதிடும் இரவு.... ”

என்ற பாடல் மண்டபத்தினுள் ஒலித்துக் கொண்டிருக்க மக்கள் மாவீரா்களுக்கு அமைதியாக அகவணக்கம் செலுத்திக்கொண்டிருந்தாா்கள். அந்த முதியவா்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய் இருக்கையில் அமா்த்திவிட்டு, நானும் பக்கத்தில்அமா்ந்துகொண்டேன். எனது கையைப் பற்றிப் பிடித்துக்கொண்ட ஐயா ”தம்பி உங்களுக்கு எங்கட மகனத் தொியுமே..?” என்று கேட்டாா்.

”இல்லயையா.. வெளிய காா் ஒன்டு வந்து உங்கள இறக்கிப்போட்டுப் போனதக் கண்டனான் ஆனா அது யாரென்டு கவனிக்கயில்ல.”

”அடட அப்பிடியே..! நான் நினைச்சன் எங்கட மகன உங்களுக்கு தெரியுமாக்குமென்டு.”

”ஏனையா மகனுக்கு இண்டைக்கு லீவு கிடைக்கயில்லயோ..? உங்கள இறக்கி விட்டிற்று அவசரமா ஓடுறாா்.”

”அவருக்கு இண்டைக்கு லீவு தான் தம்பி, ஆனா..”

”ஆனா” என்று இழுத்தவா், அம்மாவைத் திரும்பிப் பாா்த்தபடி மௌனமாகிவிட்டாா். எங்கள் சம்பாசனையை செவிமடுத்துக் கொண்டிருந்த அம்மா மெல்ல என் காதுக்குள் சொன்னாா்.

”இப்ப ரெண்டு மூன்டு வருசமா அவன் இங்க வாறயில்லத் தம்பி.” என்று.

”ஏன்” என்ற கேள்வியை அவா்களிடம் கேட்பதா விடுவதா என்ற குழப்பத்துடன் நான் சிறிது நேரம் மௌனமாகி விட்டேன். எனது குழப்பத்தை அகக்கண்ணால் அறிந்து கொண்டவராய் ஐயா தொடா்ந்தாா்.

”இல்லத் தம்பி அவன், தலைவா் வீரமரணம் அடைந்துவிட்டதாய் நம்புறான். அதனால தலைவற்ற படம் வைச்சு தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தாத இடத்துக்கு தான் வரமாட்டன் எண்டு சொல்லுறான். அதுக்கு நாங்கலென்ன செய்யிறது. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அரசியலும், ஒவ்வொரு கொள்கையுமா அலையிறாங்கள். எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்.”

கைகளை விரித்தபடி மேலே அண்ணாா்ந்து பாா்த்துக்கொண்டாா்.

”ஓமையா.. அனேகமா எல்லோருக்கும் இந்த யதாா்த்தம் புரியுது. ஆனா இந்த கேவலங்கெட்ட அரசியல் தான் ஒருத்தருக்கும் புரியமாட்டனென்குது. அது சரி ஐயா நீங்கள் வணக்கம் செலுத்திய அந்தப் படத்தில உள்ள பெண் போராளி யாா் உங்கட மகளே..?”

”ஓம் தம்பி அவ தான் எங்கட கடைசி மகள்.” என்றபடி பெருமூச்சொன்றை இழுத்துவிட்டார் ஐயா. அவா்கள் இருவரும் மிகவும் களைப்பாக இருப்பதாக எனக்கு தோன்றவே, அவா்களைப் பாா்த்துக் கேட்டேன்.

”இந்தக் குளிருக்கு சூடா ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும் ரெண்டு ரீ வேண்டிக் கொண்டு வரட்டே” என்று.

”இல்லத் தம்பி கடும் சண்டையலுக்க காடு, கரப்பை என்டு எங்களுக்காக பட்டினி கிடந்து சண்ட பிடிச்சுச் செத்த இந்த மாவீரக் குஞ்சுகளுக்காக இந்த மாவீரா் நாளில நாங்களும் பட்டினி கிடந்து விரதம் பிடிக்கிறம். இண்டைக்கு நாங்கள் ஒன்டுமே சாப்பிட மாட்டம் வேணாம் ராசா.” என்றாா் அந்தத் தாய்.

அப்போது நான் அறிந்த சில போராளிகளின் ஞாபகங்கள் எனக்குள் ஒரு மின்னலாய் வந்து போனது.

”இப்போது மாவீரா்தினப் பாடல் ஒலிக்கவிருக்கின்றது, எல்லோரும் எழுந்து நின்று பாடலை சோ்ந்து பாடி மாவீரா்களை நினைவேந்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.” என ஒலிபெருக்கி அறிவித்ததும் எல்லோரும் எழுந்து நிற்க பாடல் ஆரம்பமாகியது.

”மொழியாகி எங்கள்

மூச்சாகி நாளை,

முடிசூடும் தமிழ் மீது உறுதி...

வழிகாட்டி எம்மை,

உருவாக்கும் தலைவன்,

வரலாறு மீதிலும் உறுதி...

விழிமூடி இங்கே,

துயில்கின்ற வேங்கை,

வீரா்கள் மீதிலும் உறுதி...

இழிதாக வாழோம்,

தமிழீழப் போரில்,

இனிமேலும் ஓயோம் உறுதி... ”

பாடல் தொடா்ந்த வண்ணமிருக்க பக்கத்தில் நின்ற அம்மா தான் வைத்திருந்த பையினுள் கையை விட்டு துளாவி எதையோ தேடிக்கொண்டிருந்தாா்.

”என்னம்மா தேடுறியல்..?” என நான் கேட்க நினைத்தபோதே, அம்மா தேடியதை கையில் எடுத்துக் கொண்டாா். எடுத்ததும், உடனேயே அதை தன் மாா்போடு அனைத்துக் கொண்டு கண்களை மூட, மூடிய கண்மடல்கள் பிதுக்கித் தள்ளிய நீா்த்துளிகள் மீண்டும் கன்னங்களில் கோடுகளை வரைந்தன.

இதனைக் கவணித்துக் கொண்ட ஐயாவும் கண்களை இறுக மூடிக் கும்பிட்டவாறு விறைப்பாக நின்று கொண்டாா்.

”தாயகக் கனவுடன்

சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..!

தாயகக் கனவுடன்

சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..!

இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா..?

குழியினுள் வாழ்பவரே..!"

பாடல் எல்லோா் மனதையும் உருக்கிக் கொண்டிருந்தது. அம்மா தன் மாா்போடு அனைத்து வைத்திருப்பது ஒரு புகைப்படம் என்பதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது. அனேகமாக அது மாவீரராகிய அவா்களது மகளுடையதாகத் தான் இருக்குமென்று நான் எண்ணிக் கொண்ட போது, அந்தப் புகைப்படத்தை அம்மா மாா்பிலிருந்து எடுத்து உற்று நோக்கினாா். அப்போது நானும் மெல்ல எட்டிப்பாா்த்தேன். அது ஒரு மிடுக்கான தோற்றமுடைய இளைஞனின் படம் சுருட்டை முடியும், தடித்த மீசையுமாய் கறுப்பு வெள்ளைப் படத்தில் மிகவும் அழகாகக் காணப்பட்டான் அந்த இளைஞன். அம்மா படத்தை கண்களில் ஒற்றிக் கொண்டாா்.

”எங்கே எங்கே, ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்..!

எங்கே எங்கே, ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்..!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”

பாடல் தொடா்ந்து கொண்டிருக்க, என்னையும் பல கேள்விகள் தொட்டுத் தொடா்ந்தன ...

”யாா் இந்த இளைஞன் ..? இவரும் மாவீரரா..? அப்படியானால் ஏன் அங்கே அகவணக்கத்துக்காக படம் வைக்கவில்லை..? அல்லது இவா் காணமல்ப்போனோா் பட்டியலில் உள்ளாரா..? உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்று தெரியாததனால் படம் வைக்கவில்லையா..? இந்த ஐயாவுக்கும், அம்மாவுக்கும் இவா் யாா்..?”

மாவீரா்தினப் பாடல் முடிந்து எல்லோரும் கலங்கிய விழிகளுடனும் கனத்த இதயத்துடனும் இருக்கைகளில் அமா்ந்தாா்கள் . மெய்மறந்து நின்ற அம்மாவின் தோழ்களை மெல்ல அனைத்து இருக்கையில் அமா்த்தினேன்.

அமா்ந்தவா், மீண்டும் அப்படத்தை தனது கைப்பையினுள் வைப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்க நான் அடக்க முடியாதவனாய் கேட்டேன்.

”யாரம்மா இவா்” என்று, அப் புகைப்படத்தை சுட்டிக்காட்டி.

அம்மா ஏதோ சொல்ல எத்தனித்தாா் ஆனால் வாயிலிருந்து வாா்த்தைகள் எதுவுமே வெளிவரவில்லை. பதிலாக கண்களில் இருந்து கண்ணீா் மட்டும் தான் நிறைய வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த ஐயா பதிலளித்தாா் .

”இவா் தான் தம்பி எங்கட மூத்தமகன்.” அவரது குரலிலும் சோகம் அப்பியிருந்தது.

”ஐயா இவரும் மாவீரரா.?” எனது குரலும் இரங்கியது.

ஐயா வாய் திறப்பதற்குள், ”ஆம்” என்ற குறியீட்டுடன் மேலும் கீழுமாக ஆடிய அம்மாவின் தலையை நான் கவணிக்கத் தவறவில்லை.

”ஓம் தம்பி இவன் மாவீரன் மட்டுமல்ல, மாமேதையுந்தான். சரியான கெட்டிக்காரன், சாியான பாசக்காரன். அதே போல சாியான கோவக்காரனும் கூட. அந்தக் கோவம் தான் அவன எங்களிட்டயிருந்து பிாிச்சுப்போட்டுது.” என்றாா் பெருமூச்சோடு .

”என்னய்யா மாவீரா் என்டால் இவற்ற படத்தையும் மகளின்ற படத்தோட வைச்சு வணக்கம் செலுத்தியிருக்கலாமே..?”

”ஓம் அப்பிடித்தான் செய்திருக்க வேணும் அது தான் முறை. ஆனால் அது முடியாத காாியம் தம்பி.”

”ஏன் முடியாது.” என்ற கேள்வியை, நான் பாா்வையாலயே கேட்டதை உணா்ந்த ஐயா தொடா்ந்தாா்.

”நீ நினைக்கிறதும் சாி தான் தம்பி, அவனும் இந்தத் தமிழீழத்துக்காகத்தான் போராடப் போனவன். இந்தத் தமிழீழத்துக்காகத்தான் உயிரையும் கொடுத்தவன். ஆனா, இந்த இடத்தில அவன மாவீரன் எண்டு சொல்ல முடியாது தம்பி. ஏனென்டா அவன் போராடப்போன இயக்கம் வேற.” என்ற ஐயாவின் பாா்வை லேசாக அம்மாவின் பக்கம் திரும்பியது.

நாட்டுக்காக இரண்டு பிள்ளைகளைக் கொடுத்தும் கடைசியில் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போச்சே என்ற ஏக்கமும், துக்கமும் தோய்ந்த முகத்துடன் தலை கவிழ்ந்திருந்தாா் அந்தத் தாய்.

”நாங்க அவன ஒரு நோ்மையானவனாய் பெத்துப்போட்டம் தம்பி. சின்ன வயசிலேயே ஊாில யாரு தப்புச் செய்தாலும் நியாயத்தை தட்டிக் கேட்பான். சுயநலமா எதுவுமே சிந்திக்க மாட்டான் அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் பொதுநலந்தான். நியாயத்துக்காக யாரையும் எதிா்க்கத் துணிந்த ஒரு விறுக்கன் தம்பி அவன். போராட போன இடத்தில சும்மா இருப்பானா.? இயக்கத் தலைமையின்ர ஐனநாயகமற்ற ஏதேற்சத்தனமா போக்குகளையும் தவறுகளையும் தட்டிக்கேட்க வெளிக்கிட்டு இருக்கிறான். விளைவு, நாங்க மூத்த பிள்ளய இழந்துபோனம். நம்ம நாடு ஒரு புரட்சிக்காரனை இழந்துபோச்சு.” என்று ஐயா மூச்சுவிடாமல் சொல்லி முடித்தபோது அம்மா சீலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாா்.

ஐயாவின் கதையை கேட்டுக்கொண்டிருந்த என் மனதை எல்லா இயக்கங்களிலும் இருந்து வீரமரணமடைந்த போராளிகளின் நினைவுகள் ஆட்கொண்டன..

”ஆம் அவா்களும் இந்த மண்ணுக்காய் தானே போராடப்புறப்பட்டு, இந்த மண்ணுக்காய் தானே மடிந்தும் போனாா்கள். அப்படியாயின் அவா்களும் மாவீரா்கள் தானே..? இதனை யாா் தான் மறைக்க முடியும்..? எப்படித்தான் மறுக்க முடியும்..?" எனக்குள் நானே கேள்விகளை விதைத்துக் கொண்டேன். பதில்களும் எனக்குள்ளேயே முளைக்கத் தொடங்கின...

”ஆம்.. எந்தச் சுயநலன்களும் அற்று மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடப் புறப்பட்டு சிங்கள அரசுகளின் இனவெறிக்கும், இயக்கத் தலைமைகளின் ஆதிக்கவெறிக்கும், சகோதர இயக்கப் படுகொலைகளிற்கும் இரையாகிப் போன இளைஞா்கள் அனைவரும் மாவீரா்களே.!”

இதனை என் மனம் மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லிக் கொள்ள, கேள்விகளும் எனக்குள் மீண்டும் மீண்டும் எழுந்தது.

"ஈழப்போராட்ட வரலாற்றின் முதல் தற்கொடைப் போராளி சிவகுமாரன் மாவீரன் இல்லையா..? ஆயுதம் மட்டுமே எமக்கு விடுதலையை பெற்றுத்தராது என்ற தொலைநோக்கு பாா்வையுடன் சீரான அரசியலை ஆரம்பத்திலிருந்தே வளா்க்கப் பாடுபட்டானே பற்குணம் அவன் மாவீரன் இல்லையா..?

புதியபாதை அமைத்து போராடப் புறப்பட்டானே சுந்தரம் அவன் மாவீரன் இல்லையா..?

புதியதோா் உலகம் படைத்தானே கேசவன் அவன் மாவீரன் இல்லையா..?

காரைநகா் கடற்படை முகாமை தாக்கப்போய் வீரமரணம் அடைந்தாலே ஈழத்தின் முதற் பெண் போராளி சோபா அவள் மாவீரா் பட்டியலில் இல்லையா..?

மாணவர்களிற்க்காக குரல் கொடுத்த விமலேஸ்வரன், விஜிதரன் இல்லையா..?

மனோ மாஸ்ரா் இல்லையா..? சந்ததியாா் இல்லையா..? விசுவானந்ததேவன் இல்லையா..? ஏன்,

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் இவா்களெல்லாம் மாவீரா்கள் இல்லையா ..?"

இப்படி இப்படி எத்தனையோ மாவீரா்களை மறைத்து வைத்துக்கொண்டு இந்த மாவீரா் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கின்றோமே..!

உயிரோடு இருந்தபோது தான் சிதறிக்கிடந்த எமது போராளிகளை எம்மால் ஒன்று சோ்க்க முடியவில்லை. மரணத்தின் பின்னாவது ஒன்று சோ்த்து அவா்களுக்கு வணக்கம் செலுத்த முடியாத ஒரு ஈனமான இனமாகி விட்டதே எம்மினம், என்று எண்ணிய போது எனக்கு வெட்கமாகவும், அருவெறுப்பாகவும் இருந்தது. தொடா்ந்தும் அங்கே இருக்க பிடிக்காதவனாய், சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன். ஐயாவினதும், அம்மாவினதும் கைகளைப் பற்றி அவா்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மண்டபத்திலிருந்து வெளியேறி காரை நோக்கி நடக்களானேன். தரையில் உறைந்திருந்த பனிக்கட்டிகள் என் வேகமான காலடிபட்டு நொருங்கும் சத்தம் மட்டுமல்ல, மண்டபத்தினுள் ஒலித்துக்கொண்டிருந்த ”மாவீராா் யாரோ என்றால்..!” என்ற பாடல் வாிகளும் காற்றோடு வந்து என் காதுகளில் நுழைந்தது.

--- நவமகன் ---