Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வலி வடக்கு : வெகுஜனப் போராட்டங்களைத் தவிர வேறு மார்க்கமில்லை

வலி வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவப் பிடிக்குள் இருந்து வரும் மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்படுவது இராணுவத்தின் நிரந்தர இருப்பையும் விஸ்தரிப்பையும் நோக்காகக் கொண்டதாகும்.

1990ல் வலிவடக்கில் இருந்து துரத்தப்பட்ட மக்களில் இன்னும் தமது சொந்த நிலங்களுக்கு மீளக்குடியமர செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ள சுமார் 3இலட்சம் மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது வீடுகளில் ஒருபகுதியே தற்போது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுத்து இவ்வீடுகள் அழிக்கப்பட்டு வருவதை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இக்கொடுரச் செயலை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குரிய ஒரேவழி மக்கள் அணிதிரண்டு வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதுதான். இதனை முன்னெடுப்பதற்கு முன்வந்திருக்கும் வலிவடக்கு மீள்குடியேற்ற குழுவின் நடவடிக்கைகளுக்கு எமது கட்சி முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றது.

கடந்த 23 வருடங்களாக வலிவடக்கில் இரானுவ நடவடிக்கைகளாலும் யுத்தத்தினாலும் தமது நிலங்கள் வீடுகள் தொழில் இடங்களில் இருந்து துரத்தப்பட்ட விவசாயிகள்,தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் தொழில் செய்வோர் இன்றுவரை முழுமையாக தமது சொந்த வாழ்விடங்களுக்கு மீளச் செல்ல முடியவில்லை. வலிவடக்கில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 7500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3இலட்சம் பேர் 30அகதி முகாம்களிலும் பலஊர்கள், கிராமங்களிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் துன்ப துயரங்கள் மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து நாலரை வருடங்கள் சென்ற பின்னும் தமது சொந்த நிலங்களுக்கு செல்விடாது தடுக்கப்படுவது அந்நிய இராணுவ ஆக்கிரமிப்பு போன்றதாகும்.

இதனை வெறுமனே தேர்தல்களில் மக்கள் புள்ளடி இடுவதால் மட்டும் எதிர்த்து நிற்கமுடியாது அதற்கு அப்பால் மக்கள் தமது பலத்தை ஒருங்கிணைத்து வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதை தவிர வேறு மார்க்கம் கிடையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

கா. செல்வம் கதிர்காமநாதன்

வடபிராந்தியச்செயலாளர்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி