Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசு எவ்வழியோ நீதியும் அவ்வழிதான்!

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேற்படி மனு விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். உயிரிழந்த நிமலரூபனின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் நீதிமன்றத்திடம் விளக்கினார்.

இதன்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார்.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள தலைமை நீதியரசர்; அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும்போது இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

தங்களுக்கான குற்றங்கள் எதுவென இன்றும் அறியாத சிறைக் கைதிகளின் ஆண்டாண்டுகால அவலவாழ்வு இலங்கை "ஜனநாயகத்தில" பயங்கரவாதமாகியுள்ளது.

எப்பாவங்களையும் அறியாத அப்பாவிக் கைதிகளை சிறைச்சாலைகளில் அடைத்து பயங்கரவாதிகள் ஆக்கி, அரசு-இயந்திரத்தின் காவல்களால் செய்யப்படும் படுகொலைகள் எல்லாம் "நோமலாம்-தவிர்க்க முடியாதாம்".

இக்காவல்கள் மகிந்த மனு-தர்மத்தில், ஜீவகாருண்ணியத்தின் பாற்பட்ட மனித உரிமைத் தேவதைகளாம். இத்தேவதைகளின் ஜனநாயகம் கொண்ட மனித அழிப்புகளுக்கெல்லாம் அமெரிக்க-ரஸ்யத்தின் ஜனநாயகமும் துணைக்கு அழைக்கப்படுகின்றது.

சமகால சமூக அமைப்பின் எதார்த்தத்தில் எவ்வர்க்கத்தின் கைகளில் அரசும் அரச இயந்திரமும் அதன் ஏவல் படைகளும் உள்ளதோ, அதுவே அவ்வர்க்கத்தின் மக்கள் மனுதர்மாகவும் அமையும்.

கசாப்புக் கடைக்காரர்களின் ஆட்சியில் ஜீவகாருண்ணியம் பற்றி பேசலாமோ?

-அகிலன்