Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழன் என்ற "உணர்வும்" "மனச்சாட்சியுமா" தேர்தல் முடிவைத் தீர்மானித்தது!?

தமிழன் என்ற "உணர்வும்", கடந்தகால தமிழனின் "மனச்சாட்சியும்" தான் தேர்தல் முடிவை தீர்மானித்ததாக கூறுகின்றவர்கள் அனைவரும், எதார்த்தம் சார்ந்த உண்மைகளை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். தமிழ் மக்களின் இன்றைய எதார்த்தம் தான் (சமூக வாழ்க்கை தான்) தேர்தல் முடிவைத் தீர்மானித்தது. இன்றைய எதார்த்தம் கடந்த "உணர்வும்", "மனச்சாட்சியும்" அல்ல.

இன்று இனவாதிகள் "உணர்வையும்", "மனச்சாட்சியையும்" முன்னிறுத்தி சமூகத்தை விளக்க, இனவாதத்துக்கு எதிரானவர்கள் எதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு இதை விளக்குகின்றனர். இரண்டு வெவ்வேறான நேர் எதிரான அரசியல் அடிப்படையில் இருந்து, தேர்தல் முடிவுகளை இன்று இரு வேறு விதமாக ஆராய்கின்றனர். நிச்சயமாக ஒன்று பொய்யாகவும் புரட்டாகவும், மக்களை ஏமாற்றுவதாகவும் காணப்படுகின்றது. தேர்தல் முடிவை, தமிழ் மக்களின் வெற்றியாகக் கூறுகின்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டு, "உணர்வையும்", "மனச்சாட்சியையும்" கொண்டு விளக்குவதாக காணப்படுகின்றது.

வடக்கு தேர்தல் முடிவு பற்றிய இன்றைய ஆய்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் அனைத்தையும் தமிழ் உணர்வாக, மனச்சாட்சியாக வரையறுத்துக் கொள்வது, பொய்யாகவும் புரட்டாகவும் கற்பனையாகவும் இருக்கின்றது.

தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையைச் சுற்றி அரசின் இனவொடுக்குமுறை இல்லாது இருந்தால், தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்து இருக்கும்;? தமிழ் "உணர்வும்", தமிழனின் கடந்தகால "மனச்சாட்சியும்" தீர்மானித்தது என்பது பொய் என்பதும், அப்படி ஒன்று தனித்து கிடையாது என்பதும் வெளிப்பட்டு இருக்கும். அதாவது இனவாதிகள் கூறுவது போல் இனவாதிகளுக்கு ஏற்ற தேர்தல் முடிவு கிடைத்து இருக்காது.

இனவொடுக்குமுறை இல்லாதிருக்குமாயின் வடக்கில், தமிழ் மக்களின் வாக்களிப்பு தங்கள் சமூக பொருளாதார வாழ்க்கை சார்ந்து வேறுபட்டு இருந்து இருக்கும். தேர்தல் முடிவுகளை சமூக வாழ்க்கை தான் தீர்மானிக்கின்றதே ஒழிய, தமிழ் உணர்வோ, மனச்சாட்சியோ அல்ல. அதே நேரம் பொய், புரட்டு, ஏமாற்று, அறியாமை, மோசடி, இலஞ்சம், ... என அனைத்தும் குறிப்பான முடிவின் மேல் செல்வாக்கு செலுத்துகின்றது.

உணர்வு தான் என்ற அடிப்படையில் இருந்து, இனவாதிகளின் அடுத்த புரட்டு வெளிவருகின்றது. தமிழன் வெல்ல வேண்டும் என்பதால், தமிழ் மக்கள் தமிழருக்கு வாக்களித்தனர் என்கின்றனர். மக்கள் இந்த அடிப்படையில் வாக்களிக்கவில்லை. மாறாக தங்களை ஒடுக்கும் அரசு தோற்க வேண்டும் என்ற அடிப்படையில், வாக்களிப்பு நடந்தது. காலம் காலமாக தம்மை மந்தையாக இந்த நிலைக்குள் தக்கவைத்திருக்கும் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்று கருதி, மக்கள் வாக்களிக்கவில்லை. அரசு தோற்கவேண்டும் என்ற அடிப்படையில், வேறு மாற்று இன்றி கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். இப்படி வாக்களித்ததால் மக்கள் தோற்றுப் போனார்கள். இதுதான் மற்றொரு எதார்த்தம்.

உண்மையில் மக்கள் அரசை தோற்கடித்ததன் மூலம் அரசு மட்டும் தோற்கவில்லை. மக்களும் தோற்றார்கள் என்பதே உண்மை. மற்றொரு வகையில் வேறு வழியின்றி கூட்டமைப்பை வெல்ல வைத்ததன் மூலமும், மக்கள் தோற்றார்கள். தோற்றவர்களிடம் - வென்றவர்களிடமும், இரு வேறுபட்ட முரணான இனவாத அரசியல் பிரிவினரிடமும் மக்கள் தோற்றார்கள்.

தோற்றதை இங்கு சூக்குமமாக்கி மூடிமறைக்க இனவாதிகள் முனைகின்றனர். அரசு வடக்கில் தேர்தல் முடிவைக் காட்டி அங்கு ஜனநாயகம் நிலவுவதாகவும், மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளதாக கூறி வருவதன் மூலம், மக்களைத் தோற்கடித்து இருக்கின்றனர். தேர்தல் வழிமுறை மூலம் வடக்கில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றவும், அதில் மக்களை நம்பிக்கை கொள்ளுமாறு மோசடி செய்தும் கூட மக்களைத் தோற்கடித்தனர். தேர்தல் முடிவுக்கு முரணாக வடக்கில் ஜனநாயகமும், சுதந்திரமும் கிடையாது என்பதும், மக்கள் தோற்றுப்போன அரசியல் எதார்த்தத்தையே மெய்ப்பிக்கின்றது.

கூட்டமைப்பு மக்களின் சுயநிர்ணய உரி;மையை மறுத்ததன் மூலம், வென்று மக்களை தோற்கடித்துள்ளனர். அதேநேரம் அன்னிய நலன் சார்ந்த அரசின் தாராளமயமாதல் அபிவிருத்தி திட்டத்தை தனதாக்கிக் கொண்டு, அதை முன்னெடுக்கவுள்ளதன் மூலம், தமிழ் மக்களைத் தோற்கடித்து இருக்கின்றனர். தமிழனின் பெயரில் தமிழ் மக்களின் தேசிய நலனை மறுத்து, அதை தாராளமயமாதல் மூலம் மறுக்கின்ற அதன் பொருளாதாரக் கொள்கை மூலம் மக்களைத் தோற்கடிக்கவும் இந்த வெற்றி உதவுகின்றது.

இந்த தேர்தல் முடிவின் அரசியல் சமூக பொருளாதார விளைவு இதுதான். இப்படி உண்மை இருக்க, இந்த தேர்தல் முடிவை மக்களின் வெற்றியாக காட்ட, தமிழன் "உணர்வு" "மனச்சாட்சி" என்று இதை தமிழ் இனவாதிகள் இட்டுக்கட்டிக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் இனவாதமும், பேரினவாதமும் இந்தக் கருத்து அடிப்படையில் தான், தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றது. மக்களின் சமூக வாழ்க்கையை மறுக்கின்ற அரசியல் அடிப்படை இதுதான். உணர்வு முதன்மையானது பொருளல்ல என்ற கருத்து முதல்வாத கோட்பாட்டை முன்னிறுத்தியே, இனவாதம் இதை மூடிமறைக்க முனைகின்றது. மக்களின் எதார்த்த வாழ்வு, இந்த மாயையான போலியான வெற்றியை மறுத்து நிற்கின்றது. தங்கள் வெற்றி மூலம் கூட்டமைப்பும், தங்கள் தோல்வி மூலம் அரசும், மக்களின் அரசியல் எதார்த்தத்தை மூடிமறைக்க முனைந்தாலும், மக்கள் தோற்றுப்போனது உண்மை என்பது சமூக வாழ்க்கையாக வெளிப்பட்ட நிற்கின்றது.

பி.இரயாகரன்

03.10.2013