Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

காலையில் பக்தர்கள், மாலையில் காடையர்கள்!

யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க காலையில் பக்தர்கள் தலைவன், மாலையில் காடையர்கள் தலைவன் ஆகிவிடுவார்.

இவரின் மர்மக் குண்டர்களே இன்று நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுழிபுரம் தொல்புரத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் 80 ற்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதபாணிகள் வீட்டைச் சுற்றி வளைத்ததும் வேட்பாளர் அனந்தி சசிதரன் அங்கிருந்து தப்பி ஓடியதால் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அதேவேளை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் கையில் காயமடைந்த பவ்ரல் கண்காணிப்பாளர், சட்டத்தரணி சுபாஸ் தகவல் வெளியிடுகையில் தமது வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர் அனந்தியிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து தாம் அங்கு சென்றதாகவும், தாம் அனந்தி வீட்டுக்குச் சென்ற போது அங்கு சுமார் 20 வரையிலான சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் இருவர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியம் வேண்டுமா? என்று கேட்டுக் கேட்டு அவர்கள் தாக்குதல் நடத்தியதில் சிலருக்கு மண்டை உடைந்துள்ளதாகவும் சட்டவாளர் சுபாஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தச் சம்பவத்தை கேள்வியுற்று சுழிபுரத்துக்கு செல்ல முயன்ற கண்காணிப்புக் குழுவினரும் ஆங்காங்கே சிறிலங்கா படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

நிலைமைகள் இப்படியிருக்க, இச்சம்பவங்களுக்கும் தமக்கும் சமபந்தமில்லையென "காடையர் தலைவனாம்" கட்டளைத் தளபதி சத்தியப் பிரசங்கம் செய்துள்ளார்.

உலகில் தேர்தலில் ராணுவத்தளபதி ஒருவர் ராணுத்தின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தும் "ஜனநாயகக் கைங்கரியம்" கொண்ட நடவடிக்கை எம்நாட்டில்தான் நடைபெறுகின்றது.

நாட்டின் ஏணைய பகுதிகளில் ராணுவம் ராணுவக் கட்டமைப்பிற்கான கடமைகளில்தான் உள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களிலான அரச நடவடிக்கைகள்-சிவில் நிர்வாக யாவும் இராணுவ கட்டளைத் தளபதிகளின் மயத்தில் உள்ளது. இவர்கள் இன்றிய மக்கள்-நல நடவடிக்கைகள் எதுவுமில்லை.

தமிழ் மக்கள் அரசியல் அரங்கில் வாயில்லாப் பிராணிகள், நாம் தருவதை பெற்று இட்டுண்டு வாழுங்கள் எனும் நிலைதானென இவர்கள் நினைத்தால், அது வராலாற்றிற்கும் மக்களுக்கும் விடும் சவால் அல்ல. தங்கள் அரசியல் அழிவிற்கு தோண்டும் சவக்குழிகள்தான்.

-அகிலன்