Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நாம் பேச வேண்டும்! எழுத வேண்டும்! நாம் வாழ வேண்டும்!

உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில்  போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது   நியதி.  எம் வாழ்விற்கும் இருத்தலிற்கும் அச்சுறுத்தல்   ஏற்படும் போதெல்லாம் போராடினால் தான் நிலைக்க முடியும். அப்படி தான் உயிர் வாழ்வதற்கும் உரிமைக்கும் அச்சுறுத்தல், உத்தரவாதமற்ற நிலை தோன்றிய போது தமிழினம் போராடியது. இன்றும் போராடினால் தான் பிழைக்க முடியும் என்ற சூழலில் வாழ்கின்றோம். மக்கள் விரோத சக்திகளுக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிராக போராட வேண்டியதொரு சூழலில் எம் தேசியம் நிற்கும் நிலைமையில், மாணவர்களாகிய எமக்கும் அதில் முக்கியமானதொரு பாகம் இருக்கின்றது.

விடுதலை போராட்ட அமைப்புக்கள், இயக்கங்கள், விடுதலை வேண்டிய கட்சிகள் எல்லாம் ஒன்றில் மௌனமாகி வெற்றிடத்தை உருவாக்கிவிட்ட நிலையில், அல்லது விலை போய் விடுதலையை அடமானம் வைத்து கோவணம் இழந்துள்ள நிலையில், எம் தேசியத்தின் ஒட்டுமொத்த விடுதலை வேட்கையையும் தோள்களில் சுமக்க வேண்டிய பொறுப்பு என்றும் போல் மாணவர்களாகிய எம்முன் இருக்கும் நிலையில் அந்த சுமையை எம் தோள்களில் சுமக்க வேண்டியவர்களாகின்றோம். அந்த சுமையின் கணதியை சுமக்கும் வலு மாணவர்களாகிய எமக்கிருக்கின்றது. அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.

எம் தேசியத்தின் இடர் நீக்க நாம் குரல் கொடுக்க வேண்டும், எழுத வேண்டும் அதன் வழி இயங்க வேண்டும். அதற்கோர் தடம் தேவை. அந்த தடமாக உறுதியுடன் உணர்வுடன் தைரியமாய் தன்னம்பிக்கையுடன் மாணவர் குரலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.

                                  ' பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் 

                         விண்டுஉமி போனால் முளையாதாம் – கொண்ட 

                                                பேர்ஆற்றல் உடையார்க்கும்

                                           ஆகாது அளவின்றி ஏற்ற கருமம் செயல்'

என்பது ஒளவையார் அருளிய வாக்காகும். அது எமக்கும் பொருந்தும். உமி நீங்குவதற்கு முன்னர் முளைப்பது என்னவோ அரிசி தான் ஆனால் உமி நீங்கிப்போனால் அவ்வரிசி முளைக்காது. அதுபோல, எத்தகைய பெரிய வல்லமை உடையவர்க்கும் காவல் வலிமையின்றி, எடுத்துக்கொண்ட செயலைச் செய்து முடித்தல் இயலாது.  மனிதன் மண்ணின் மைந்தன். ஆனதால், அவனுடைய முதல் காவல் வலிமை அவனது தேசமாகும். விடுதலை வேட்கையை அடைய தேசத்தினை காத்திட வேண்டும். தேசம் என்பது வெறும் மண்ணும் மரமும் செடியும் கொடியுமல்ல.

ஒர் தேசத்தினை ஆக்குவது அவ் தேச மக்களின் பண்பாடும், மொழியும், பொருளாதாரமும் அவை இயங்கும் நிலமும் இணைந்தாகும்.  தேசிய விடுதலை என்பது விரோதிகளிடமிருந்து மண்ணை மீட்பது மட்டுமல்ல. எம் தேசத்தினை ஆக்கும் அத்தனை கூறுகளையும் காத்திடவேண்டும். நிலம் இன்று ஒடுக்குமுறையாளர்களினால் அபகரிக்கப்பட்டு கொண்டிருக்க, அவர்களுக்கு அதிக வேலையும் சிரமமும்  கொடுக்காமல் மொழியையும் பண்பாட்டினையும் நாமே அழித்து கொண்டிருக்கின்றோம். தொடர் நிலபரப்பில் பண்பாடும் மொழியும் இணைந்து மக்களிடையே ஒத்த மனபாங்கினையும் ஒத்த வாழ்க்கை போக்கினையும் தோற்றுவிக்காது விடின் தேசிய பொருளாதாரம் உருவாகாது, தேசம் எழாது.

எனவே எம் தேசத்தினை காத்திட வேண்டுமென்றால் எம் மொழியையும் பண்பாட்டையும் காத்திட வேண்டும் வளர்த்திட வேண்டும் நவீனங்களை உள்வாங்கி முன்னேற்றிட வேண்டும். அதற்கு எம்முள் ஒர் அசைவியக்கம் தேவை. அப்படியானதொரு அசைவியக்கமே எம் தேசியத்தினை எழுச்சியடைய செய்யும். எம் தேச எழுச்சிக்காக குரல் எழுப்புவோம்,  எழுதிடுவோம், இயங்கிடுவோம். ஆம் அதற்கு தான் குரல்  எம் தேசத்தினை எழுப்பிடும் குரலாய்  மாணவர்குரல். எம் தேசம்  எழுச்சியடைய                                 .                   

         நாம் பேசிடுவோம் ! நாம் எழுதிடுவோம் ! நாம் வாழ்ந்திடுவோம் !

 -ஆசிரியர் தலையங்கம் - ஆடவை(ஆனி) மாத இதழ்