Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

எகிப்திய "புரட்சி" மட்டுமல்ல, முதலாளித்துவ "ஜனநாயகம்" கூட மக்களுக்கானதல்ல

ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது, "ஜனநாயகம்" முழு நிர்வாணமாக அம்பலமாகும். இன்று எகிப்தில் நடப்பது, சுரண்டல் வர்க்கத்தின் அடிப்படையிலான அதன் வன்முறையின் சாரம்தான். முதலாளித்துவ "ஜனநாயகம்" எங்கெல்லாம் நிலவுகின்றதோ, அதனுள் காணப்படும் வர்க்க சர்வாதிகாரத்தின் பண்புரீதியான வெளிப்பாடுதான் எகிப்திய சம்பவங்கள்.

எகிப்தில் வாக்களித்த மக்கள், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவால் வீதிவீதியாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தேர்தல் "ஜனநாயகம்" மூலம் ஆட்சியேறியவரை சட்டவிரோதமான முறையில் கவிழ்த்து, சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். "ஜனநாயக"த்;தின் காவலனாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா, எகித்திய இராணுவம் போல் மறு தேர்தல் பற்றி பேசுகின்றது.

அமெரிக்கா மற்றும் மேற்கு ஏகாதிபத்திய சதிகளுடன் அடிக்கடி அரங்கேறுபவை தான் இது போன்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள். சிலியிலும், அல்ஜிரியாவிலும், பாக்கிஸ்தானிலும் கூட இதைக் காணமுடியும்;. இது தான் எகிப்திலும் நடந்தது. தேர்தல் மூலம் வென்றவர்களுக்கு எதிரான திட்டமிட்ட ஆட்சிக் கவிழ்ப்புகள், "ஜனநாயகம்" என்பது ஏகாதிபத்தியம் நடத்தும் பொம்மை ஆட்சி தான் என்பதை அம்பலமாக்குகின்றது. பொலிவியா கூட ஒரு உதாரணம். முதல் ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து தப்பிப் பிழைத்த பொலிவியா தொடர்ந்து பல்வேறு ஏகாதிபத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதார இராணுவ நலனுக்கு பிடிக்காதவர்கள், தேர்தல் "ஜனநாயகம்" மூலம் ஆட்சிக்கு வர முடியாது. இது தான் இன்றைய ஏகாதிபத்திய நியதி.

இந்த வகையில் அமெரிக்க நிதி ஆதாரத்தில் இயங்கும் எகிப்திய இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பையும் ஜனநாயக ரீதியாக போராடும் எகிப்திய மக்கள் மேல் பாரிய படுகொலையையும் நடத்தியிருக்கின்றது. எகிப்திய வானவில் புரட்சி பற்றியும், அதைத் தொடர்ந்த "ஜனநாயக" ஆட்சி பற்றியுமான அனைத்து விதமான நம்பிக்கைகளையும் பிரமைகளையும் தகர்த்து இருக்கின்றது.

அரசியல், பொருளாதாரம், அதிகாரம்... தொடர்பான மார்க்சிய வர்க்க போராட்ட அடிப்படைகளையும் சமூகக் கண்ணோட்டங்களையும் நிராகரித்து, தூக்கி நிறுத்திய "அரபு புரட்சி" பற்றிய அனைத்துவிதமான கோட்பாடுகளையும், மாயைகளையும் எகிப்திய மக்கள் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் அதன் பொய்மையைத் தோலுரிக்கின்றனர்.

தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள், அமைப்பு சாராத சிறு கோட்பாடுகள் மூலமான வானவில் புரட்சி பற்றி பீற்றிக் கொண்ட அனைத்துவிதமான போலியான நம்பிக்கைகளும் பிரமைகளும் தகர்ந்து போய் இருக்கின்றது. எந்தப் புரட்சியும் அமைப்பாக்கப்பட்ட மக்கள் திரள் மற்றும் மக்கள் இராணுவம் இன்றி வெற்றிபெறுவதில்லை என்ற உண்மையை, எகிப்தில் நடந்தேறும் மக்களின் போராட்டங்களும் தியாகங்களும் எடுத்துக் காட்டுகின்றது.

முதலில் சிரியப் படுகொலைகளும், ஏகாதிபத்திய கைக்கூலித்தனமும் போராட்டமாக்கிய பின்புலத்தை தொடர்ந்து எகிப்து அரங்குக்கு வந்திருக்கின்றது. அரபு வசந்தம் பற்றியும், இணையப் புரட்சி பற்றியும், அமைப்பு ரீதியாக அணிதிரளாத தன்னியல்பான மக்கள் திரள் புரட்சி பற்றிய கற்பனைகள் அனைத்தையும் போராட்ட வரலாறுகள் தகர்த்து இருக்கின்றது. உலகெங்கும் ஜனநாயகத்தின் பெயரில் நடப்பது வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சி என்பதையும், அது அரச பயங்கரவாதம் என்பதையும், சந்தர்ப்பம் வரும் போது தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நிற்கும் என்பதையும் எகிப்திய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றது.

"ஜனநாயக" அமெரிக்காவின் ஆதரவுடன் 30 வருடமாக ஆட்சியில் இருந்த முபாரக்கின் இராணுவ பாசிச சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுடன் இரண்டு வருடத்துக்கு முன் முடிவுக்கு வந்தது. "புரட்சி" "தேர்தல்" "ஜனநாயகம்" என்ற முதலாளித்துவ மாயை மூலம், இஸ்லாமியக் கட்சி ஒன்று ஆட்சிக்கு வந்தது. ஆனால் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவம், அதைக் கவிழ்த்து மீண்டும் அமெரிக்க ஆதரவு பெற்ற பொம்மை ஆட்சியை நிறுவி இருக்கின்றது.

இந்த அரசியல் பின்புலத்தில்

1.ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்ட பிளவு

2.இதனடிப்படையில் இராணுவத்துக்கும் பாராளுமன்ற அதிகாரத்துக்கும் இடையில் ஏற்பட்ட அதிகார மோதல்

3.பழைய சர்வாதிகாரத்தை தூக்கி எறிய போராடிய சக்திகளில் இருந்து பிரிந்த இஸ்லாமிய சக்திக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான மோதல்

4.எகிப்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் வகிக்கும் இராணுவத்துக்கும், இராணுவமல்லாத ஆளும் வர்க்கத்திற்கு இடையிலான மோதல்.

5.தங்கு தடையற்ற கடந்தகால ஏகாதிபத்திய நலன்கள், முரண்பட்ட ஏகாதிபத்திய நலன்களுக்குள் பகிரப்படுவதற்கு எதிரான முரண்பாடுகள்.

பல முனையில் ஏற்பட்ட ஆளும் வர்க்க முரண்பாடுகள் ஏகாதிபத்திய முரண்பாடுகளுடன் இணைந்து எகித்திய மக்களை கொன்று போடுகின்றது. அமெரிக்காவின் நிதியாதரத்தில் இயங்கும் இராணுவத்தைக் கொண்டு "ஜனநாயகத்தை" கவிழ்த்துப் போட்டு இருக்கின்றது அமெரிக்கா.

மக்களை இந்த முரண்பாடுகளுக்குள் சிக்க வைத்து, இராணுவம் - முஸ்லிம் என்ற இரு பாசிச வடிங்களுக்குள் மக்களை அணிதிரள வைத்து எதிர்நிலைப் போராட்டங்களாக மாற்றி இருக்கின்றது. எதிர் நிலையான தத்தம் பாசிச அதிகாரத்துக்கான போராட்டமாக மாற்றி இருக்கின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் உலகளாவிய ஏகாதிபத்திய அமைப்பை, வர்க்கப் போராட்டங்களில் இருந்து பாதுகாக்க பீற்றிக் கொள்ளும் தங்கள் ஜனநாயகத்தைக் கூட மதிக்காமல் தூக்கி எறிந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவு பெற்று ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய எகிப்திய இராணுவம் கூறுவது போல், அமெரிக்காவும் கூட மறுதேர்தல் பற்றிப் பேசுகின்றது. கடைந்தெடுத்த தங்கள் ஜனநாயக மோசடிகளையே மீளவும் அரங்கேற்றத் துடிக்கின்றனர்.

மீண்டும் "ஜனநாயகம்", "தேர்தல்" என்று ஆட்சியைக் கவிழ்த்த எகிப்திய இராணுவம் மட்டும் கூறவில்லை, அமெரிக்காவும் சேர்ந்து அதை போதிப்பதன் மூலம் தங்களை ஜனநாயகத்தின் காவலனாக காட்டிக் கொள்ளவே முற்படுகின்றது. ஏகாதிபத்திய பொம்மைகளை உருவாக்கும் தேர்தல் "ஜனநாயகமாக" ஜனநாயகமும் உலகமும் சுருங்கிவிட்டது.

பி.இரயாகரன்

17.08.2013