Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கில் அரச காடைகளின் அராஜகக் கலாச்சாரம்!

யாழ்-தேர்தல் களம் அரச காடைகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றது. தேர்தல் விதிகள் மீறப்பட்டும், அரசுக்கு எதிரானவர்கள் தாக்கப்பட்டும், வடக்கின் வசந்த "ஜனநாயகத் தேர்தல்" குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையாகியுள்ளது.

அரச-தரப்பு ராணுவத்திடம் சேர்ந்து தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்படும் சமப்வங்கள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கினறன.

கடந்தவாரம் நாவாந்துறைப் பகுதியில் அரச தரப்பு வேட்பாளர் ஓருவர் ராணுத்திடம் சேர்ந்து களியாட்ட விழா ஒன்றை நடாத்தி, அதில் பங்கு பற்றிய மக்களுக்கு தேர்கால சலுகைகளைச் வழங்கியபோது, திடீரென அங்கு தேர்தல் அதிகாரிகள் சென்றடைந்தனர். அதிகாரிகளைக் கண்ட அரச வேட்பாளர் ஓடிய ஓட்டம் களியாட்ட விழாவின் சிறப்பு மரதன் (ராணுவ-வேட்பாளர்) ஓட்டப் போட்டியாக அமைந்ததாம்.

அரசதரப்பு வேட்பாளர் தங்கள் அனுசரணையுடன்தான் இச்செயலில் ஈடுபட்டார் என ராணுவத் தரப்பிடம் தேர்தல் அதிகாரிகள் வினவியபொழுதுஇ அப்படி அல்ல என காடைத்தனத்துடன் கூடிய அராஜகத்தனம் கொண்டு தேர்தல் அதிகாரிகளை இராணுவம் விரட்டி அனுப்பியுள்ளது.

தவிரவும் கடந்தவாரம் நெடுந்தீவிலும், நேற்றையதினம் யாழ் நகரிலும் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களைச் செய்த அரச காடையர் கூட்டம், மேலும் பலரை அழைத்து வந்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளது.

வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற பெயரில் அரச தரப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப் பேரணி எனும் பெயர்தாங்கி நடாத்தியுள்ளது. பல எழுத்துப் பிழைகளுடன் கூடிய வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் "அமைதியாக தாங்கிச் சென்றனர்"

அச்சமயம் செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள் தெளிவாகப் படம் எடுக்க முடியாதவாறு சம்பவ இடத்தில் புகை எழும்பச் செய்யப்பட்டது. அத்துடன் தங்களைப் படம் எடுக்கக் கூடாது என்று செய்தியாளர்களைத் தடுத்த அரச சார்பானவர்கள் தாங்கள் வீடியோ மற்றும் சாதாரண கமராக்களைக் கொண்டு செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை படம் எடுத்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. எனினும் செய்தியாளர்கள் அரச தரப்பினருடன் குறுக்கிட்டு பேச முடியாதவாறு தடுப்பதில் பொலிசார் கண்ணாக இருந்தனர்.

மகிந்த அரசிற்கு பல முகங்கள் உண்டு. நடைபெறப்போகும் தேர்தல்களில் அது தன் பன்முக அவதாரங்களை பன்முக முகமூடிகளுக்கு ஊடாகக் காட்டும். இதில் இப்போ வடக்கில் காலை-மாலை வித்தியாசமான ஒவ்வொரு முகமூடிகள். கடந்தகாலங்களில் எத்தனையோ தலையாட்டிகளையும்-முகமூடிகளையும் இனம் கண்டறிந்து இல்லாதாக்கிய எம்மக்களுக்கு இம்முகமூடிகள் எம்மாத்திரம்.

தேர்தலுக்காக தேர்தல் திருவிழா களத்தில் இறங்கியுள்ள கட்சிகள் தமது வெற்றிக்காக எதையும் செய்வார்கள். மாயமான் மற்றும் வெளவ்வால் கதைகள் கூறி  மக்களை ஏமாற்றுவார்கள் என்பதே உண்மை.