Sat08172019

Last updateSat, 29 Jun 2019 5am

அரசபடைகள் மக்கள் சேவகர்கள் அல்ல… அரசின் காவல் நாய்கள்!

அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலில் இருந்து பிறக்கின்றது!

வெலிவேரியாவில் தனது குடும்ப அரசின் அண்ணன்மார்களால் செய்யப்பட்ட படுகொலைகளுக்கு, தம்பி பசில் ராஜபக்ஸ கவலை தெரிவித்துள்ளார். இதுவும் காலம் கடந்த முதலைக் கண்ணீர்ப் புலம்பல்தான்.

குடிதண்ணீர் கேட்டு ஜனநாயகத்தின் பாற்பட்டு நியாயம் கேட்ட மக்கள் மீது, பாசிஸ சர்வாதிகாரத்தின் வெறிகொண்டு நடாத்திய வெறித்தனங்கள் எதன்பாற்பட்டவை.?

மக்களின் நியாயமான போராட்டங்கள், சட்டத்தை மீறும்போது, முதலில் அவ்விடத்திற்கு செல்ல வேண்டியவர்கள் பொலீசார்தான். ராணுவத்தை அங்கு அனுப்பியது யார்?

அரசின் இராணுவப்படை தங்கள் வேண்டுகோளை அடுத்தே, அதற்கு பொறுப்பானவர்களால் அனுப்பட்டதென கொதுபலசேனாவின் தலைமைப்பிக்கு சொல்கின்றார். இது உண்மையானால் இன்று நாட்டை அரச பரிபாலனம் செய்பவர்கள் யார்?

சென்ற படைப்பிரிவு முள்ளிவாய்க்காலில் படுகொலைகளை நடாத்திய 57-வது படைப்பிரிவின் ஒரு பகுதியாகும். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற இந்த படைப்பிரிவு, மக்களை கலைந்து செல்வதற்கான முதல் நடவடிக்ககைள் எதையும் (கண்ணீர்ப்புகைப் பிரயோகம் - தடியடி போன்றவைகள்) செய்யவில்லை. கொலை வெறி கொண்டு, துப்பாக்கிப் பிரயோகத்தையே செய்தது. இதை வெல்வெரியா மக்களும், பல மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகத்தின்பால் சிதறி ஓடிய மக்களில் பெரும்பாலானோர், வீதியால் சென்றவர்களும், பார்வையாளர்களும் ஆவர். கொல்லப்பட்ட மாணவர்களும் இதன்பாற்பட்டவர்களே. ராணுவ அட்டுழியத்தால் தேவாலயம் ஓன்றினுள் ஓடி ஒழித்த மக்களைக்கூட மகிந்த-கோத்தபாய ராணுவம் உட்புகுந்து தாக்கியுள்ளது. இதைத் தடுத்து நியாயம் கேட்ட கன்னியாஸ்த்திரிகளுக்கு கூட கொலை மிரட்டல்களை விடுத்துள்ளது.

இது இலங்கையில் (2009-ன் பின்னாக) நடைபெற்ற முதல் ராணுவ நடவடிக்கை அல்ல.

"வலிகாமம் வடக்கு மக்கள் தமது நிலங்கள் எடுக்கப்படுவதற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் இடைமறிக்கப்பட்டமை, எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்து சிலாபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, வெலிக்கடை சிறைக் கலவரத்தில் 40 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை, "கிறீஸ் பூதம்' தொடர்பில் கண்டனம் வெளியிட்ட மக்கள் தாக்கப்பட்டமை என்பன போர் முடிந்த பின்னர் இராணுவத்தால் செய்யப்பட்ட ஜனநாயக மக்கள் விரோதத் தாக்குதல்கள் ஆகும். இதை தேசிய சமாதானப் பேரவையும் சுட்டிக்காட்டி, தன் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

எமது நாடு அந்நிய (நவதாராள பொருளியல்) மூலதனங்களின் வேட்டைக் காடாகியுள்ளது. அதன் சகலதின் சீரழிந்த அரசியல் பொருளாதார கலை-கலாசார-பண்பாட்டு விழுமியங்களின் சகதிக்குள் அமுங்கியுள்ளது. அதன் பலாபலன்களையே எம்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தொழிறபாட்டின் செயற்பாட்டையே வெல்வெரியாவின் ராணுவப் படுகொலைகளுக்கு ஊடாக காண்கின்றோம்.

ஆகவே அரச படைகள் எனப்படுவோர், மக்களின் சேவகர்கள் அல்லர். அப்படைகள் அந்நிய மூலதனத்தையும், அவர்களின் சொத்துக்களையும், அதைப்பாதுகாக்கும் மகிந்த அரசையும; காப்பாற்றும் நிரந்தர அரச இயந்திர காவல் நாய்கள் தான்.

அரசுகள் மாறலாம். ஆனால் அரச படைகள் மாறமாட்டா? இது அரசு பற்றிய சமூக விஞ்ஞானக் கணிப்பின் எதார்த்தமாகும். இதனால்தான் இவ்வரசுகளை பாதுகாப்போரின் அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலில் இருந்து பிறக்கின்றது என்கின்றார் மாவோ..