Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புக்கு விசாரணை தேவைதானா?

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த மாபெரும் இன அழிப்பு குறித்து அழிப்பு நடாத்திய ராணுவமே நீதி விசாரணை நடத்தி எழுதிய தீர்ப்பு குறித்து உலக மக்கள் அதிசயத்தில் மலைத்துப்போயுள்ளனர். அந்த மலைப்பு தணிவதற்குள் இதோ மற்றுமொரு இராணுவ விசாரணை. கம்பகாவில் குடிக்க சுத்தமான நீர் கேட்டு அமைதி வழியினில் போராடிய மக்கள் மீது மகிந்த பாசிச கூலிப்படை, இலங்கையின் மனித மற்றும் கனிப்பொருள் வளங்களை கொள்ளையிட திறந்து விடப்பட்டுள்ள பன்னாட்டு கம்பனிகளில் ஒன்றான இந்திய கம்பனிக்கு எதிராக போராடிய மக்களை அடித்து துவசம் செய்து படுகொலையும் புரிந்து விட்டு அது குறித்து அவர்களே நீதி விசராணையும் செய்து தீர்ப்பு வழங்க இருக்கிறார்களாம்.

ஆனால் உண்மை எதுவென்றால் தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. பி.பி.சி இற்கு பேட்டி அளித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய “அப்பாவி மக்களை இலங்கை இராணுவம் தாக்கவில்லை” என வெலிவேரிய சம்பவத்தில் இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

ஆனால் மக்கள் போராட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவமே விசாரணை நடத்துவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் இலங்கையில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்; இன, மத ரீதியாக மக்கள் பிரித்து ஆட்சி  செய்து மக்களை ஏமாற்ற முடியாது. இன்றைய இலங்கையின் ஆட்சியானது நவகாலத்துவ ஆட்சியாகும். அது மக்களின் அனைத்து நலன்களையும் குழி தோண்டி புதைத்து விட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களையே உயர்த்திப் பிடிக்கும். உலக வல்லரசுகளிற்கு மக்களின் நல்வாழ்வு பற்றிய அக்கறையோ அன்றி மனித உரிமைகள் பற்றிய கருசணையோ கிடையாது. அவர்களின் ஒரே நோக்கம் உலகை கொள்ளை இடுவது தான். இதனை எமது சொந்த அனுபவமே எமக்கு நன்றாக தெளிவுபடுத்தியுள்ளது.

இன, மதம் கடந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமைப்பட்ட ஒன்றிணைந்த போராட்டமே மக்களின் அனைத்து துயரங்களிற்கும் தீர்வுக்கான ஒரே வழியாகும். மக்களின் நலன் கொண்டு இயங்கும் அனைவரும் இதனை கருத்தில் கொண்டு செயலாற்றல் வேண்டும்.