Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாசிஸ ஆட்சியின் இருப்பை உறுதி செய்து வலுச்சேர்க்கவே மாகாண சபைத் தேர்தல்!

இன்று நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து உச்சநிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினைக்குத் தொடர்ந்தும் தீர்வு மறுக்கப்பட்டு வருகின்றது. இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தி விரக்தி வெறுப்புக் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஏமாற்றவே ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியானது அதிகாரம், பணம், பேரினவாதம் என்பவற்றை முன்வைத்து தேர்தல்களை அவ்வப்போது நடாத்தி வருகின்றது. அதன் மூலம் தமது தரகு முதலாளித்துவ, பேரினவாத, சர்வாதிகார, ஃபாசிஸ ஆட்சியின் இருப்பை உறுதி செய்து வருகின்றது. அதற்கு வலுச்சேர்க்கவே மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஆட்சியாளர்கள் நடாத்துகின்றனர்.

குறிப்பாக வடக்கில் ஜனநாயகமும், இயல்பு நிலையும், சிவில் நிர்வாகமும் இன்றி சகலவற்றையும் ராணுவ நிர்வாகமே தீர்மானித்து வருகின்றது. அதேவேளை மலையகத்தில் மாகாண சபையால் தோட்டங்களில் வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் சென்றடைவதில்லை. குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைக் கூட மாகாண சபைகள் நிறைவேற்றுவதில்லை. இந்நிலையில் அரசாங்கக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தமிழ் முஸ்லிம் மலையகத் தரப்புக் கட்சிகளும் தமக்கும் தம்மவர்களுக்கும் மாகாண சபைகளில் பதவிகள் பெற்றுக் கொடுத்து பயன்களும் சுகங்களும் பெறவே இத்தேர்தல்களில் மும்மரம் காட்டி நிற்கின்றனர். இத்தகைய மக்கள் விரோதச் சூழலில் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எதிலும் பங்குகொள்ளவதில்லை எனத் தீர்மானித்துள்ளது.

மேற்படி கட்சியின் தீர்மானத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 35வது ஆண்டு விழாக் கூட்டத்தில் சிறப்புரையாற்றும் போது பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டார். கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்ஆண்டு விழாக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரம் அழிவுகரமான பாதையிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்தேசிய-பெருவணிக நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களும், நிலங்களும் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. உற்பத்திப் பொருளாதாரம் குற்றுயிராக்கப்பட்டு இறக்குமதி நுகர்வுப் பொருளாதாரமே முன்நிலையில் இருந்து வருகிறது. இவை தரகு முதலாளித்துவத்தின் கீழான தாராளமயம், தனியார்மயம், உலகமயமாதலின் விளைவுகளேயாகும். இவற்றால் அனைத்து அன்றாட உணவுப் பொருட்களும் ஏனைய பாவனைப் பொருட்களும் நாளாந்தம் விலை உயர்வுகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தாங்க முடியாத பொருளாதார சுமைகளால் மோசமாகப் பாதிப்படைந்து வருகின்றனர்.

அதேவேளை தேசிய இனப் பிரச்சிளைக்கு தீர்வு எதுவும் காணப்படாத நிலையில் பேரினவாத நிகழ்ச்சி நிரலே முன்னெடுக்கப்படுகின்றது. அதனை வைத்தே ஆட்சி அதிகார நிலைப்பு நீடிக்கப்படுகிறது. பதினெட்டாவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிய ராஜபக்ஷ சகோதர ஆட்சியினர் இப்போது அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை இல்லாதொழிக்க முற்பட்டுள்ளனர். இது முற்றிலும் ஜனநாயக விரோத, ஃபாசிச, சர்வாதிகாரப் போக்கின் தொடர்ச்சியேயாகும். நாட்டு மக்களை இன, மத, மொழி, பிரதேச அடிப்படைகளில் பிரித்து மோதல்களை உருவாக்கி உழைக்கும் மக்களின் முதுகுகளில் சவாரி செய்வதன் ஊடாக தரகு முதலாளித்துவ, பேரினவாத ஆளும் வர்கத்தினர் தமது ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.

1977ல் ஜே. ஆர் தொடக்கி வைத்த இப்பயணத்தை எவ்வித மாற்றமும் இன்றி இன்று மகிந்த ராஜபக்ஷவும் சகோதரர்களும் தமது குடும்ப சர்வாதிகாரத்தின் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை மறுத்து வர்க்க ரீதியில் ஒடுக்கி வரும் அதேவேளை தமிழ், முஸ்லிம், மலையக தமிழ்த் தேசிய இனங்கள் மீதான இன ஒடுக்குமுறையினை கொடூரமாக முன்னெடுத்து வருவது இன்றைய ஆட்சியின் பிரதானப் போக்காகும். ஆனால் அதனை எதிர்கொள்ளக் கூடிய கொள்கையும், வேலைத்திட்டமும் தமிழ் தரப்பு கட்சிகளிடமோ முஸ்லிம் மலையக தமிழ்த் தலைமைகள் என்போரிடமோ இல்லாத நிலையே தொடர்கின்றது. பேரினவாதத்தையும் அதன் ஆட்சியினரையும் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தரப்பு கட்சிகள், குறுந்தேசியவாதத்தில் தங்கி நின்று ஆதிக்க அரசியலை முன்னெடுப்பதில் அக்கறையுடன் இருந்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள் என்பவற்றில் போட்டியிட்டு பதவிகள் பெற்றால் போதுமானதாகும். அதற்கு அப்பால் சென்று கடந்த காலத்தின் தோல்விகண்ட அனுபவங்கள், பட்டறிவுகள் மூலம் புதிய கொள்கைத்திட்டங்களையோ வேலைத்திட்டங்களையோ முன்வைத்து மக்களை அணிதிரட்ட முடியாதவர்களாகவே இருந்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது பழைமைவாத கருத்தியல் சிந்தனையும், மேட்டுக்குடி உயர் வர்க்க நிலைப்பாடுமேயாகும்.

இவற்றுக்கு அப்பால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் உழைக்கும் மக்களை முதன்மைப்படுத்தி நிற்கும் கொள்கைகளும் வேலைத்திட்டங்களுமே முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்தகைய மாற்று அரசியல் அரங்கிற்கு தமிழ் மக்களை அணிதிரட்டி தங்களது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கக் கூடிய புதிய அரசியல் சூழல் உருவாக்கப்படல் வேண்டும். அதன் ஊடாகவே ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லிம் மலையகத் தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கையில் சுயாட்சி உரிமைகளை வென்றெடுக்க முடியும். இத்தகைய போராட்ட முன்னெடுப்பில் அரசினால் ஒடுக்கப்படும் உழைக்கும் சிங்கள மக்களை நட்பு சக்திகளாக இணைத்துக்கொண்டு முன்செல்வது அவசியமானதாகும்.

இதனை தேர்தல் அரசியலுக்கு அப்பால் வெகுஜனப் போராட்ட அரசியல் தளத்தில் மக்களை அணிதிரட்டுவதன் ஊடாகவே அடைய முடியும் என்ற கொள்கை நிலைப்பாட்டையே எமது கட்சி முன்வைத்து வருகின்றது என்றும் கூறினார்.

வெ. மகேந்திரன்

தேசிய அமைப்பாளர்,

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி.

29/07/2013