Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

வலிவடக்கிலும் சம்பூரிலும் நிலப்பறிப்பு திரைமறைவில் இந்தியா?

தமிழரின் அரசியல் சக்திகள் என்று தம்மை கூறிக் கொள்ளும்  இந்தியாவின் அடிமை விசுவாசிகள்

வடக்கு – கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலும் மக்கள் இருப்பிட மற்ற அனாதைகள் ஆக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்ட நிலையில் உள்ளனர். இந்த வகையில் இயற்கை வளங்கள் தொட்டு வளமான மீன்பிடி கரையோரங்கள் வருவாய்தரும் விவசாய நிலங்களை இழந்து வடக்கு கிழக்குப் பகுதிகளில் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் வடக்கில் வலிகாம மண் இன்னும் மக்களிடம் மீள ஒப்படைக்கப்படாமல் இந்திய பெருவல்லரசும் இலங்கை இராணுவமும் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன இவ்விடயத்தில் இலங்கை பேரினவாத நிகழ்சி நிரலின் பின்னால் இந்திய முதலாளித்துவ வல்லரசின் பொருளாதார இராணுவ நலன்களே முன்னிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வலிவடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1990 களில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக வலிவடக்கில் மீள் குடியமர்த்தப்படவில்லை. யுத்தம் முடிவுற்று நான்கு வருடங்களாகியும் இம் மக்கள் இன்னும் தமது சொந்த மண்ணில் மீள் குடியமர்த்தப்படவில்லை. அதன் பின்னால் உள்ள விடயங்களை மக்கள் நன்கு ஆராய்தல் வேண்டும்.

அந்த அடிப்படையில் வலிவடக்கில் புதிதாகக் காணிகளை சுவீகரிக்க வேண்டிய தேவை இல்லை. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையப் புணரமைப்பு வவுனியா - காங்கேசன்துறை புகையிரதப் பாதை அமைத்தல் ஆகிய யாவும் இந்திய வல்லரசின் பொருளாதார இராணுவ நலன்களுக்காகவே செய்யப்படுகின்றன. வடக்கு கிழக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இந்தியாவின் பிடிக்குள் தான் இருக்கின்றன. இவற்றைத் தட்டிக் கேட்க முயலும் சக்திகளை மிரட்டும் தொனியில் இந்தியா கதைத்து வருகின்றது. இந்திய மீன்பிடி அத்துமீறல் பற்றிக் கதைத்தால் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க உரிமையுண்டென இந்திய முதலாளித்துவ அதிகார சக்திகள் சண்டித்தனம் செய்கின்றனர். இந்திய துணைத் தூதுவரே நமது நாட்டு நீதித்துறையில் தலையிட்டு கைது செய்யப்பட்ட மீனவரை விடுவிக்கின்றார். இங்கே மீன் பிடிக்க வரும் தொழிலாளிகள் அப்பாவிகள். ஆனால் தொழிலாளர் வேறு அதிகாரத் தொனியுடைய அமைச்சர் வேறு என்பது இங்கு வேறுபடுத்திப் பார்க்கப்படல் வேண்டும். இது போன்று கிழக்கிலும் நிலஅபகரிப்பு இந்திய நலனுக்காக அபகரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையின் சம்பூர் நிலப்பகுதியில் அம்மக்களை விரட்டியடித்து விட்டு இந்தியா அனல் மின் நிலையமொன்றை அமைத்து வருகின்றது. அவ் வலயத்தை இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயமாக்கி யாரும் அங்கு செல்ல முடியாத படி காவல் காத்து நிற்கின்றது. இச்சம்பூர் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் 14 குளங்கள் 273 ஏக்கர் வயல் காணிகள் 146 ஏக்கர் குடியிருப்பு காணிகள் 120 ஏக்கர் தோட்டக் காணி 21, மீன்பிடித் தளங்கள் 08 செங்கற்சூளைலைகள் 01 வைத்தியசாலை 01 கோவில் 01 பாலர் பாடசாலை என்பன அடங்கி நிற்கின்றது. இந்த இடத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து வெளியேறிய ரவீந்திரன் (வயது 46) சம்பூரின் ஐந்தாம் வட்டாரத்தைச் சார்ந்தவர். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு சம்பூரில் 12 ஏக்கர் குடியிருப்புக் காணி இருப்பதுடன், வயல் நிலங்களும், பசு மாடுகளும் இருந்தன. இன்று கட்டைப்பறிச்சான் முகாமில் சாப்பாடு சமைத்து அவற்றை கிராமங்களில் ஊர் ஊராகச் சென்று விற்றுத் தான் வாழ்க்கை நடாத்துகின்றார். சுயமாக வாழ்ந்த குடும்பம் எப்படி சீர்கெட்டுப் போகின்றது.

இந்த இடத்தில் தான் தமிழரின் அரசியல் சக்தி பற்றி கவனமெடுக்க வேண்டியுள்ளது. இன்னும் இந்தியாவின் அடிமை விசுவாசிகளாகவே தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொப்புக்கொடி உறவு பேசிப் பேசியே எம்மை ஏமாற்றுவதில் முன் நிற்கின்றனர். இந்திய எஜமான் எதைச் செய்தாலும் கும்புடுறேன் ஐயா, சாமி போட்டு தொடர்ந்து தமிழ்த் தேசிய இனத்தை காட்டிக் கொடுக்கின்றனர். அத்துடன் இன்று வரை இந்திய மீனவரின் அத்துமீறிய மீன்பிடிப்புச் சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்தது கிடையாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த தமிழ்ச் சமூகத்திற்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கேள்வி கேட்காதவரை மக்கள் முட்டாள் ஆக்கப்படுவார்கள். வெகுஜன போராட்ட மாற்று அரசியல் சக்தியை மக்கள் கட்டியெழுப்பி தீர்வைப் பெற்றுக் கொள்ள முன்வருதல் வேண்டும்.

-புதிய நீதி (யூன் 2013)