Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

பொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டம்!

களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா பிக்குமார் பொலிசாருடன் தான் வந்திருந்தார்கள். பொலிசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

அந்த சம்பவத்துக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் இன்று காலை முதல் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்தப் பிரதேசத்தில் நிலவிய பெரும் பதற்றம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

சந்திரவட்டக்கல்லை அகற்றியவர்கள் தேவாலய நிர்வாகத்திடம் மன்னிப்புகோரிய பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இனவாதம் மதவாதம் கொண்டு மக்களை பிரித்தாளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் புதிய ரவுடிக் கும்பலே இந்த பொதுபல சேன. இதற்கு நிதி, அதிஉயர் பாதுகாப்பபு பகுதியில் தலைமை அலுவலகம் மற்றும் நேரடி பொலிஸ் பாதுகாப்பு என உள்ள அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு இலங்கையில் பௌத்தம் மதம் சாராத ஏனைய மதத்தினர் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட மகிந்த நவதாராளமயவாத அரசு பின்புலமாக இருக்கின்றது.

தென்னிலங்கை மக்களின் பொருளாதார கஸ்டங்களிற்கு புலிகளின் பிரிவினைவாதப் போராட்டத்தினை காரணம் காட்டியே கடந்த கால ஆட்சியாளர்களான யூஎன்பியும் சுதந்திரக்கட்சியும் ஏமாற்றி திரிந்தனர். 2009 இன் பின்னர் இனியும் இந்த ஏமாற்று செல்லுபடியாகாத நிலையில் புதிய ஒன்றைக் கண்டுபிடித்து நாட்டில் குழப்பத்தினை உண்டு பண்ணி மக்களை அரசுக்கு எதிராக திரளாது திசை திருப்பஉருவாக்கப்பட்டதே இந்த பொது பல சேனா.

பொதுபல சேனாவிற்கு எதிரான போராட்டங்கள், மக்கள் இந்த அரசின் பிரித்தாளும் தந்திரங்களிற்கு பலியாகாது தமது சுபீட்சமான வாழ்வுக்காகவும் அடக்கு முறைகளிற்கு எதிராகவும் போராட என்றும் தயங்கப் போவதில்லை என்பதனை நவதாராளவாத அரசின் முகத்தில் அறைந்து அறிவிக்கின்றன.