Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நினைவுப் பறவைகள்..... (சிறுகதை)

ஓடி ஓடி கடைசியிலே கிடைத்தது ஒரு மூண்டரை மணித்தியால வேலை தான். அதுவும் விடிய மூண்டரைக்குத் தொடங்க வேண்டும். என்ன வீட்டிலே தான் ஒண்டும் கிளீன் பண்ணுறதில்லை, வெளியேயாவது போய் பண்ணுவோம் என்று நினைத்து அன்போடு அதை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சம்பளம் பொடியனுக்கு சப்பாத்து வாங்கவும் மிஞ்சிற காசுக்கு கொஞ்ச வாழைப்பழமும் வாங்கததான் காணும்.

சந்தர்ப்பம் வர மிகுதி நேர வேலை தருவேன் என உறுதியளித்தாள் மொனிக்கா.

கொஞ்ச நாட்களின் பின்னர்

ஓரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் போது மொனிக்கா வந்தாள். குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையம் ஒன்றில் ஒரு ஐந்து மணித்தியால வேலையொண்டிருக்கு, அது ஒரு மூண்டு மாதத்துக்குத் தான், அதுவும் பின்னேர வேலை. விரும்பினால் திங்கட் கிழமையே தொடங்கலாம், புதன்கிழமைகளில் மாத்திரம் அங்கே வளர்ந்த பிள்ளைகளுக்கான விசேட குளுப் இருப்பதால் இரவு எட்டு மணிக்குப்பின்னர் தான் தொடங்க வேண்டும் எண்டும் சொல்ல அதையும் மறுப்பில்லாமல் அன்போடு ஏற்றுக் கொண்டேன்.

இப்ப இந்த ஐரோப்பிய பொருளாதார மந்த நிலைக்கும், நானிருக்கும் சிக்கல் நிலைக்கும் எப்படியும் எதையும் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை போய் இறங்கினேன். அது ஒரு உள்ளரங்கு விளையாட்டு மைதானத்துடன் சேர்ந்த கட்டிடம். தலைவாசலிருந்து வலது பக்கம் திரும்பினால் விளையாட்டு மண்டபம், இடப்பக்கம் திரும்பினால் பராமரிப்பு நிலையம்.

சில பேர் காய் என்ற படியும், சில பேர் சும்மா தலையாட்டிய படியும் வேலை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஓரு சில பேர் விளையாடுவதற்காக உள்ளேயும் வந்து கொண்டிருந்தார்கள்.

ஓரு சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு காக்காய் குருவி கூட இல்லை. எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.

பக்கத்தே விளையாடுபவர்களின் கூக்குரல்களும் பந்துகள் அடிக்கின்ற சத்தமும் காற்றலையில் இடைக்கிடை வந்து போனது.

நான் உள்ளே நின்று கூவர் பிடிக்கும் போதோ, அல்லது வேறு ஏதாவது செய்து கொண்டிருக்கும் போதோ வெளியிலே யாரும் போய்வருவது எனக்குத் தெளிவாகத் தெரியும்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அங்கே வேலை செய்பவர்களில் சில பேர் என்னோடு கொஞ்சம் கொஞ்சமாகவும் பழகத் தொடங்கினார்கள்.

ஒரு நாள் புதன்கிழமை இரவு நான் வேலைசெய்து கொண்டிருக்கும் போது ஒரு இளம் பெண் ஐன்னலுக்கு வெளியில் நின்று என்னைப் பார்த்து கையசைத்தபடியே சிரித்தாள். நானும் பதிலுக்கு கையைக்காட்டிச் சிரிக்க அவள் இருட்டோடு இருட்டாய் மறைந்து விட்டாள்.

ஆனால் இந்தப்பெண்ணின் அந்தப் புன்னகையும் அந்தக்களங்கமில்லா முகமும், எங்கேயோ பார்த்த மாதிரியும், நன்றாகப் பழகியது போலவும் இருந்தது. நிறையத் தடவைகள் யோசித்தும் அவள் யாரென்று பிடிபடவேயில்லை.

யாரோ பற்மின்ரனோ அல்லது வேறு ஏதாவது விiயாட வந்த பிள்ளையாய் இருக்கலாம் என நினைத்து விட்டு எனது காரியங்களில் இறங்கி விட்டேன்.

பிறகு அடுத்த கிழமையும், கிட்டத்தட்ட அதே நேரமளவில் அவள் நின்று கை காட்டினாள். நானும் பதிலுக்குச் சிரித்துவிட்டுக் கையசைக்க அவள் மீண்டும் மறைந்து விட்டாள்.

அவள் எங்கேயோ முன்பு வேறு இடங்களில் வேலை செய்தவளோ அல்லது எங்கேயாவது என்னோடு படிச்சவளோ புரிய முடியாமல் மனது குளம்பியது. ஆனாலும் அதை நான் பெரிது படுத்தவில்லை.

நான் வேலை முடிந்து வீடு வந்தாலும் அந்த முகம் என் மனதில் அடிக்கடி வந்து போனது.

சில நேரங்களில என் மனது யார் அந்தப் பிள்ளை எங்கே கண்டேன் எப்படி பழகினேன் என்று என்னை நானே பல முறை கேட்டேன்.

ஆனால் யார் என்ற அந்த நினைவு வரவேயில்லை.

பிறகு ஒரு நாள் ஒரு வியாழக்கிழமை வேலைக்குப் போக கடைசியாக வேலை முடித்துப் போகின்ற ஸ்ரெலா என்ற மனிசி இஞ்சை வா இண்டைக்கு எங்கடை பிள்ளையள் சின்ன வட்டப் பாணும் கேக்கும் செய்தவர்கள், நீ அதைச்சாப்பிட்டுப் பார் என்று ஒரு அறைக்கு கூட்டிக் கொண்டு போனா..

நானும் போய் அதை வாங்கி விரும்பிச் சாப்பிட்ட படியே அங்கே சுவரிலே தொங்கவிட்டிருந்த சில குறூப் படங்கள் தெரிய எழுந்து போய் கிட்டப் பார்த்தேன். என்ன யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்க அங்கே ஒரு படத்தில் நான் ஏற்கனவே கண்ட அந்தப் பெண் நிற்க அவளைத் தொட்டுக் காட்டினே;.

அவளைத் தெரியுமா என்று ஆச்சரியத்தில் வினவ…

பழக்கமில்லை ஆனால் கண்டிருக்கின்றேன் என்றேன்.

உனக்குத் தெரியுமா… ஒரு பல வருடங்களுக்கு முன்னர் இந்தப் பெண்ணும் பராமரிப்புக்காக இங்கே தான் வந்து போனவள். மிகவும் நல்ல பிள்ளையவள், சரியான கெட்டிக்காரியும் கூட. விளையாட்டுத் துறையயிலும் சரி, இசைத்துறையிலும் சரி, வேறு பல போட.டிகளிலும் சரி பல பரிசில்களைத் தட்டி எங்கள் நகரத்துக்கும் எங்கள் பராமரிப்பு நிலையத்துக்கும் அவளது பாடசாலைக்கும் பல பெருமைகளைச் சேர்த்தவள். அவள் எனக்கு மகள் மாதிரி என்ற படி மிகுதிக் கோப்பியை எடுத்து குடித்தபடி தான் வெளிக்கிடுவதற்கான ஆயத்தப்பட நானும் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.

விசுவநாதன் ராமமூரத்தி காலத்திலிருந்து இன்டைய இளையராஜா யுவன்சங்கரின் காலம் வரை எனக்குத் தெரிந்த அனைத்துப் பாடல்களையும் பாடியபடி வேலையை முடிச்சு விட்டு, வீட்டை வந்து சேர்ந்தேன்.

ஏதோ தெரியவில்லை அந்தப் பிள்ளையின் முகமே என் முன்னால் வந்து வந்து போனது. அந்த முகம் வரும்போதெல்லாம் ஏதோ இனம் தெரியாத ஒரு சோகம் என்னை வாட்டிவதைப்பது போல் உணர்ந்து கொண்டேன.; ஏன் எனக்கம் இந்தப்பிள்ளைக்கும் எனக்கும் என்ன தொடர்பு… இவளை நான் எங்கே சந்தித்தேன்…

இருந்த விஸ்க்கயை கொஞ்சம் அடிச்சுபோட்டு படுக்க வேண்டும் போலிருந்தது. ஒரு கிளாசில் ஒண்டும் கலக்காமல் பச்சையாய் அப்படியே ஒரு தரம் அடிச்சேன். பிறகு இரண்டாம் தடவையும் விட ரெலிபோன் அடித்தது.

மறுமுனையில் என்ரை பெரியம்மா…. அழுதமாதிரி ஒரு தொனிப்பு. தம்பி எத்தனை தரம் இண்டைக்கு எடுத்தனான் ஒருத்தரும் எடுக்கவில்லை… அது தான் இப்ப எடுத்தனான். ஏதும் நடந்ததோ… என்ன ஏதாவது விசேசமே…. எனவும் பெரியம்மா விக்கி விக்கி அழுத் தொடங்கினார்.

என்ன எல்லாரும் மறந்து போனயளே…? நாளைக்கு பிள்ளை தாரணியின் நினைவு நாளல்லே… பதினைந்து வருசமாச்சு… உந்தக் குறுக்காலே போவார் அண்டைக்கு என்னமாதிரி படிச்சுக் கொண்டிருந்த என்ரை பிள்iளையை கொண்டு போய் நாசமாய் துலைச்சுப் போட்டாங்கள் .

தாரணி தாரணி தாரணி

திடிரென என் மனதில்….. நான் இவ்வளவு நாளும் கண்டது வேறு யாருமல்ல…. என்னைப்பார்த்துச் சிரிச்சது, கையசைத்தது வேறு யாருமல்ல அதே முகம் அதே சிரிப்பு. அதே தாரணி தான். நான் தூக்கித்திருந்த எனது சின்னமாவின் அந்தக்குழந்தை… நம்ப முடியாமல் இருந்தது.

தம்பி அவள் இண்டைக்கு இருந்திருந்தா…. மற்றதுகளைப் போல் அவளும் படிச்சு முடிச்சு குடும்பம் குடித்தனம் என்று வாழ்ந்து கொண்டிருப்பாள். இங்சை வெளிநாட்டுக்காவது மற்றதுகளைப் போல் வந்திருப்பாள். ஒரு கண்டறியாத பேராட்டம் எண்டு ஒண்டைத் தொடங்கி எங்கடை பிள்ளையளைப் போல் எத்தனை பிள்ளையளைக் கொண்டு போய் ஒரு விதப்பிரியேபசனமும் இல்லாமல், இந்தக் குமர்பிள்ளைகளையெல்லாம் பலி கொடுத்திருப்பாங்கள்;.

பத்தாக் குறைக்கு இப்ப மிஞ்சியிருக்கும் பிள்ளையளையும் பலிகொடுப்தாற்காக இங்கே வெளிநாடுகளிலே இருந்து கொண்டு கொடி பிடிச்வுக் கொண்டு திரியுறாங்கள்.

பெரியம்மா ஏதேதோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தா…. எனக்கு அது ஒன்றும் ஏறவேயில்லை

எங்கேயாவது எங்கள் தாரணியின் முகம் தெரிகின்றதா என்று….என் கண்கள் என் வீட்டு ஐன்னல்களை தேடியது.

முற்றும்.