Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கோமாளிகளின் கூடாரமாகவுள்ள வடமாகாணசபைத் தேர்தல்….

வடக்கின் மாகாணசபைத் தேர்தல் "வரும் ஆனால் வராது" எனும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இத்தேர்தல் அரசின் சிற்சில எடுபிடிகளால் கோமாளித்தனத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

"பிரிவினைவாதத்துடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இதற்காக பத்து லட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது"

இதுபோக புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரர் வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராம்…

இதுதான் போதாதென்றால்… போதாக்குறைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராம்.

இவ் அம்மணி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சகல ஏற்பாடுகளும் தடல்புடலாக நடைபெறுகிறது. புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்காக நீதிமன்றத்தினால் சாட்டப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் மேற்கொண்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவெனில்…. இத்தேர்தலுக்காக அரச எடுபிடிகள் எல்லாம், அரசினால் பற்பல கோணங்களில் இருந்து கோமாளிகளாக வருகின்றார்கள். தயாமாஸ்ரர் ஒரு கோணம். இவர் முன்னாள் போராளிகளை (ஆண்) பாதுகாக்கப் போகின்றாராம்… அதன்படி பார்த்தால் தமிழினி பெண்களுக்குத்தானே?... இது ஒரு கோணம்.

அடுத்து பிரிவினைவாதத்துடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றுடன் "செங்கோண முக்கோணமாக" புறப்படப் போகின்றதாம். விமல் வீரவங்ச எனும் இன்னொரு கோமாளி! இக் கோமாளிக்கு அவரின் அரச சக அமைச்சர் ஒருவர் வகுப்பெடுக்கின்றார். அதுகூட அதன் காதுகளுக்கு எட்டவில்லைப் போலும்.

"நாடுகள் பிளவுப்படாதிருப்பதற்கு தீர்வு அதிகார பரவலாக்கம் எனவும் அதிகாரங்களை பகிர்வதன் மூலம் நாடுகள் பிளவுப்படும்" எனக் கூறுவது கேலிக்குரியது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்சவுக்கு பிரிவினைவாதம் என்ன என்பது தெரியாது எனவும் உலக நிலைமைகளை அறியாத கிணற்று தவளைகளின் பேச்சுக்களை கவனத்தில் எடுத்து கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இவர்கள் எல்லாம் கிணற்றுத் தவளைகளா?

இல்லவேயில்லை. மகிந்தாவின் பேரினவாத குடும்ப அரசியலை தொடர, அவரால் பற்பல கோணங்களில் இருந்து களம் இறக்கப்படுகின்றார்கள்..

ஆனால் தமிழ் மக்கள் இப்பேரினவாதக் கோணங்களை எல்லாம் சரியாகக் கணணக்கிட்டு, தேர்தலில் தங்கள் முடிவை சரியாகவே நிறுவுவார்கள். இதில சந்தேகமே இல்லை.