Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01

இலங்கை குறைமுதலாளித்துவ வரலாற்றைக் கொண்ட தேசங்களில் முதலாளித்துவ நிறுவன அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சோல்பரி, டொணமூர் ஆணைக்குழு போன்றவற்றை அமைத்து அரசியல் சட்டங்களை சிபாரி செய்தும் உருவாக்கியும் கொண்டது. முதலாளித்துவ அரச நிறுவனத்தில் ஆணைக்குழு ஒரு முறைமை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்கள் என்பது தேசங்கள் தொடங்கி சர்வதேச மட்டத்தில் வெவ்வேறு அலகுகளில் உருவாக்கப்பட்டும் நீதியை நிலை நாட்டப்படுவதாகவும், நடுநிலையாக செயற்படுவதாகவும் காட்டப்படுகின்றது.

இன்று முள்ளிவாக்காலின் பின்னரான காலத்தில் கற்றுக் கொண்ட பாடமும் நல்லிணக்க ஆணைக்குழுவென அமைத்தும், பின்னர் அதற்குள் இராணுவம் தன்னைத்தானே ஆணைக்குழுவை நியமித்துக் கொண்டு தன்னை குற்றமற்ற இராணுவஅமைப்பாக பிரகடனப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் ஆணைக்குழுக்கள், சர்வதேச நீதிமன்றம், மேற்கு தேசங்களின் நீதிமன்றங்கள் என்பன என்ன தொழிற்பாட்டை செய்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியங்கள் காலனியாக்கத்தை மேற்கொள்வதற்காக சுதந்திர நாடுகளை நிர்ப்பந்திக்கின்றன. நிர்ப்பந்தங்கள் புலணுக்கு புலப்படக் கூடியதாகவும், புலணுக்கு புலப்படக் முடியாததாகவும் இருக்கின்றன. புலணுக்கு புலப்பட முடியாதவற்றை பொதுவுடமைக் கண்ணாடி கொண்டு பார்க்கின்ற போது தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கண்ணாடி சுரண்டும் சித்தாந்தத்தையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்த இலகுவாக இருக்கும். இன்றைய உலகத்தில் நல்லது கெட்டது என இரண்டு சித்தாந்தப் போக்கு இருப்பதாக கூறிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. உலகம் அப்படியல்ல சுரண்டும் வர்க்க நலன் மறைக்கப்பட்டு சந்தையை விஸ்தரித்துக் கொண்டு செல்கின்றன. இதற்கு பல ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு உலக வர்த்தக ஒன்றியம், சர்வதேச நிதி நிறுவனத்தின் நிபந்தனைகள், உலக வங்கியின் நிபந்தனை போன்றவற்றிற்கு நாடுகள் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். இத்துடன் தேவையான போது கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து ஐ.நாவின் பெயரில் பொருளாதார தடைகளை மேற்கொள்கின்றனர். இவைகள் வெற்றி பெறாத பட்சத்தில் இராணுவ நடவடிக்கைகள் இறுதியாக இருக்கின்றன. இதன் மூலம் வறிய நாடுகளுக்கும் எதிராக தமது இராணுவ வலிமையைக் காட்டி விடுகின்றன.

உலகின் பல பாகங்களில் நீதியை நிலைநாட்டவும், நடந்தவற்றை ஆராய்ந்து காரண கர்த்தாக்களுக்கு தண்டணை வழங்கவும் பல்வேறு வகையான நீதி விசாரணை மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உள்நாடு, பிராந்திய வேறுபாடுகளுடன் கூடியதாக இருக்கின்றது. உள்நாட்டு அரசாங்கங்கள் தாமே நீதி விசாரணை குழுக்களை உருவாக்கிக் கொள்கின்றன. இன்று குறிப்பாக தென் ஆபீரிக்கா, கௌத்தமாலா, ரொவன்டா, இலங்கை, பழைய யூக்கோஸ்லாவியா, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் நீதி விசாரணை நடத்தப்பட்டன. நீதியை நிலைநாட்டும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் எந்த மனிதர்களுக்கும் துணையாகச் செயற்படாமல் எல்லோரையும் சமமாக நடத்துவதாக காட்டி நிற்கின்றன.

உள்நாட்டில் நீதியை நிலைநாட்ட எடுக்கப்படும் முறைகளில் பல வகைகள் உண்டு. அவைகள் நாட்டுக்கு நாடும், தேவைகளுக்கு ஏற்றவாறாகவும் மாற்றம் கொள்ளப்படுகின்றது. இவைகள் எல்லாம் இந்தச் சமூகத்தில் நீதியை வழங்க தயாராக இருப்பது போல் காட்டி நிற்கின்றன. நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பாவிக்கப்படும் சட்டங்கள் காலனித்துவ காலத்தில் வெள்ளையர்களிடம் இருந்து அப்படியே பெற்றுக் கொண்டதாகும்.

நீதிமன்றம் என்கின்ற போது பல படி அமைப்புக்களைக் கொண்டதாகும். இவற்றை எடுத்துக் கொண்டால் ஒரு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காவிடின் மற்றைய மேல் நிலையில் இருக்கின்ற நீதி மன்றத்திற்கு வழக்கை மேல்முறையீடு செய்யப்படும். உச்ச நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காவிடின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகள் விசாரிக்கப்படுகின்றனர். குற்றங்கள் பல வகையாக இருக்கின்றன.

ஆட்சியாளர்கள் தாம் நியாகமாக நடப்பதாக நிலைநிறுத்தும் பொருட்டு ஆணைக்குழுக்களை நிறுவுகின்றனர். இந்த ஆணைக்குழுக்கள் விசாரணை செய்கின்றன. இவர்கள் விசாரணையின் முடிவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றனர். சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தவுடன் பிரேமதாசா காலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் புதைகுழிகள் தோண்டப்பட்டன. சந்திரிக்கா உற்சாகமான செய்த விசாரணைகளை பலர் வரவேற்றிருந்ததுடன் அவர் மீது நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

ஆணைக்குழுக்கள் பல வகை இருக்கின்றன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களினால் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் இலங்கையில் இருக்கும் இனங்களுக்கு தேவையானவை எவை எது என்பதை அறிந்து கொள்ள ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. டொனமூர், சோல்பரி ஆணைக்குழு ஆகியவை இலங்கை மக்களுக்கு தேவையான உரிமைகள், கடமைகளை வரையறுத்துக் கொண்டது. இந்த ஆணைக்குழுக்கள் இனங்களிடையே இருந்த வேற்றுமையைப் பயன்படுத்தி அவர்களை தொடர்ந்தும் நீண்ட காலத்திற்கு பிரித்து வைப்பதற்கு அடிகோலினர்.

இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் தன்னார்வ மனித உரிமை அமைப்புக்களையும் உருவாக்கிக் கொள்கின்றது. இது வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய மனிதவுரிமை அளவுகோளை பயன்படுத்திக் கொள்கின்ற போதிலும் இவர்களினால் ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலினால் பாதிக்கப்படும் மக்கள் சார்பான ஒரு சரியான நிலைப்பாடு எடுக்க முடியாது. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்களின ஆக்கியமிப்பு ஒரு நாட்டின் சுயபொருளாதார அமைப்பையும், வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கின்றது. பறித்தெடுக்கும் நிறுவனங்கள் மீதான எதிர்ப்பு நிலைப்பாட்டை தன்னார்வ மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொள்வதில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்;.

இங்கு சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்திக் கொள்ளும் இறைமையைவிட மனித உரிமை முக்கியமானது என்ற என்ற கருத்து ஆதிக்கமும் இருக்கின்றது. இது பற்றிய பார்வையும் அவசியாகின்றது. இறைமை முக்கியமல்ல எனக்கூறிக் கொண்டு மனிதவுரிமையை வலியுறுத்துவது சுதந்திர தேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு. ஆனால் இந்த ஆக்கிரமிப்பை உள்நாட்டு அரசாங்கங்கள் தன் நலனுக்காக மற்றவர்களிடம் தமது இறைமையை விட்டுவிடுவதையும் நாம் கண்டு கொள்ள முடியது.

மனித உரிமையைப் பாதுகாக்க புறப்பட்ட நவீன மனித உரிமைப்பாதுகாவலர்கள் மேற்கொள்ளும், மேற்கொண்ட நடவடிக்கைகள் எவ்வித பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை மூடி மறைப்பதற்கு இலகுவாக இருக்கின்ற சமூக அமைப்பும், தொடர்புச் சாதனங்களும், ஆதிக்கச் சக்திகளின் நடவடிக்கைகள் இலகுவாக அமைந்து விடுகின்றன. இவற்றில் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம், ஆசிய மனிதவுரிமைச் சங்கம் அல்லது மனிதவுரிமை கண்காணிப்பகம் அல்லது யாழ்மனிதவுரிமைக் காண ஆசிரியர் சங்கம் என்பனவும் இவற்றினுள் அடக்கும். கடந்த கால உதாரணங்களைக் காட்டி பாதகச் செயல்களுக்கு ஆதரவாக கருத்தினை உருவாக்கிக் கொள்ளும் நிலை நீடிக்கின்றது. இவை பற்றியும் ஆதிக்க விஸ்தரிப்பினை ஆதரித்துக் கொள்ளும் எந்தச் சக்திகளையும் அடையாளம் கண்டு கொள்தல் அவசியமாகும்.

ஜனநாயகத்தை நிலைநாட்டத் துடித்துக் கொண்டிருக்கும் மேற்கு நாடுகள் தமது பாணியிலான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஜனநாயகம் எனக் கருதும் போது மேற்கு (Western Architype) மாதிரியான தேர்தல், பொருளாதார அமைப்பு, மற்றும் சமூக உறவுகள் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றே வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்கள் ஜனநாயகம் எனக் கொள்ளும் போது முதலாளித்துவத்தை தான் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவர், ஆனால் தொலைத் தொடர்புச் சாதனங்களை அழித்ததின் மூலம் தமது செய்தியை மாத்திரம் தான் கேட்க வேண்டும், உண்மையானது என்பது போல் யூக்கோ மீதான ஆக்கிரமிப்பில் காட்டிக் கொண்டார்கள். அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சக மாணவர்களை, ஆசிரியர்களை சுட்டுக் கொண்ட போது பிள்ளைகளுக்கு பேசித் தீர்த்துக் கொள்ள பெற்றோர்கள் பழக்கிக் கொள்ள வேண்டும் என கிளின்ரன் கேட்டுக் கொண்டார். அத்துடன் ரஸ்யாவின் செச்செனியா மீதான தாக்குதலின் போது அரசியல் ரீதியாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என மேற்குலம் கேட்டுக் கொள்கின்றது. இவர்கள் நீதியை பாதுகாக்க நினைப்பது வறிய மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்ல என்பதை வரலாற்று ஓட்டத்தின் அவதானித்துக் கொள்ள முடியும்.

”சர்வதேசியம் சர்வதேசியம் என அயராது உரைக்கும் ”சிவப்பு” சர்வதேச விசாரணை” என்றவுடன் ”காவியுடன்” கைகோர்த்து விடுகிறது.”

-தொடரும்