Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மொழி புறக்கணிப்பினை எதிர்த்து சிங்கள இளைஞனால் வழக்கு தாக்கல்!

altதமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மொழிநிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலைசெய்தல் அல்லது அங்கு போய்வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடுத்துள்ளது. என்றும் மனுதாரரான ஏ.பி.தனஞ்சய குருகே தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சலீம் மர்சூப், பிரியசத் டெப் ஆகியோர் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிங்கள இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல அடையாள அட்டைகளிலும் உள்ள விபரங்கள் தனிச்சிங்களத்தில் மட்டுமே உள்ளன. இவை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உத்தியோக,தேசிய மற்றும் நிர்வாக மொழிகள் இல்லை.

அரசியலமைப்பின் 18ஆவது,19ஆவது உறுப்புரைகளின் பிரகாரம் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். உறுப்புரை 22வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, தேசிய அடையாள அட்டையில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையானது தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை எதிர்வரும் யூன் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.