Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளியவளையில் வீடுகள் தீவைப்பு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ்க்குடும்பங்களின் நான்கு குடிசைகள் சனிக்கிழமை நள்ளிரவு தீயிடப்பட்டிருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இரவு ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ எற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

முள்ளியவளை மத்தி என்ற கிராமப்பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்தில் முல்லைத்தீவுக்கான பிரதான வீதியோரத்தில், ராணுவத்தினர் தமக்கு முகாம் அமைப்பதற்காக காணி தேவையெனக் கூறி அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு கோரியிருந்ததாகவும், அதற்கு அந்த மக்கள் உடன்பட மறுத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்த இடத்தையும் இதனையொட்டி காடாக இருக்கின்ற காணிகளையும் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது, அதனையும் அந்த மக்கள் எதிர்த்து போராடியிருந்தனர்.

இதனையடுத்து, இந்த மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்ற எல்லைக்கு அருகில் உள்ள 4 குடிசைகளே சனியிரவு அடையாளம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்டிருக்கின்றன.

இரவு ஒரு மணிபோல நெருப்பு எரிந்த வெளிச்சத்தைக் கண்டு வெளியில் வந்து பார்த்தபோது, நான்கு குடிசைகள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாக நேரில் கண்ட அயல் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.