Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"கிளிநொச்சியில் கோயில் நிலம் அபகரிக்கப்படுகிறது"

இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் பல முறைகேடான வகையில் அபகரிக்கப்படுவாகவும், அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடைய இடங்களில் வெளியாரைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அரசியல் கட்சிகள் உட்பட பலதரப்பினரும் கோரியுள்ளனர்.

மாகாண சபை முதல்வர்களின் முடிவுகளின்றி காணிகள் வழங்கப்படக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாக கிழக்கு மாகாண சபைத் தலைவர் ஏ.மஜீத் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஆணைக்குழுவொன்றை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜேவிபி கட்சியினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கிளீநொச்சி உதிரவேங்கை கோயில்

கிளீநொச்சி உதிரவேங்கை கோயில்

கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள உதிரவேங்கை ஞான வைரவர் கோவிலுக்குச் சொந்தமான காணி வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்பட்டு, அங்கு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பௌத்த விகாரரைக்கு அருகில் உள்ள தனியார் ஒருவருடைய காணியொன்று விகாரையின் தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து ஆலயத்திற்குச் சொந்தமான காணியொன்று தனியாரினால் அபகரிக்க அனுமதிக்கப்பட்டிருப்பது அநீதியான செயல் என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறுகின்றார்.

இந்த காணி விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் உட்பட உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், நடவடிக்கைகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை எனக் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன கூறினார்.

இது தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அரசாங்கத் தரப்பினருடைய கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.