Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

‘அழிந்துவரும் புலிகளைக் காப்பாற்ற’ என்ற பெயரில் பழங்குடி மற்றும் மலைவாழ்மக்களை காட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு காடுகளைத் தனியார்மயமாக்கும் திட்டம்!

மேற்குத் தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம்

தொடர்புக்கு: மனுவேல், அமைப்பாளர்,

14, தேவாங்கபுரம், கோட்டுவீராம்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்

பேச: 94433 49800, 93645 11199, 91501 92047

----------------------------------------------------------------------------------------------------------

பத்திரிகை செய்தி

சத்தியமங்கலம் வனப்பகுதியை இந்திய அரசு, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘அழிந்துவரும் புலிகளைக் காப்பாற்ற’ என்ற பெயரில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. ஆனால், உண்மையில் இது பழங்குடி மற்றும் மலைவாழ்மக்களை காட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு ஒருசில பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் நலன்களுக்காகவே செயல்படுத்தப்படுகிறது.

புலிகள் காப்பகமானது, மையப்பகுதி (Core Area), சுற்றுவட்டாரப் பகுதி (Buffer Area) என்று இரண்டு பிரிவாக அமல்படுத்தப்படுகிறது. புலிகள் காப்பகத் திட்டத்தின்படி மையப்பகுதியாக அறிவிக்கப்படும் பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திட்டத்திற்குட்பட்ட மையப்பகுதிக்குள் காலங்காலமாக பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள், அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுவட்டாரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் இனிமேல் எவ்வித அரசின் வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அப்பகுதியில் வாழும் மக்களுக்கு வனத்திற்குள் சென்று சிறுவனப்பொருட்கள் சேகரிக்கும் உரிமை மறுக்கப்படும். மாடுமேய்க்க, விறகு சேகரிக்கக்கூட அனுமதி மறுக்கப்படும். ஒட்டுமொத்தத்தில் அம்மக்களுடைய அனைத்து வாழ்வாதாரங்களும் பறிக்கப்படும். இவ்வாறு அம்மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, அவர்களின் சட்டப்பூர்வ உரிமையான வன உரிமைகளைப் பறிப்பது என்பது, அவர்கள் தாங்களாகவே அப்பகுதியை விட்டு வெளியேறும் வண்ணம் மறைமுகமாக வெளியேற்றுவதே ஆகும்.

புலிகளுக்கும், வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் பழங்குடி மக்களால் பாதிப்பு ஏற்படுகிறது என்று அரசாங்கமும், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் செய்துவரும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது. பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்துவரும் அம்மக்கள் காட்டினுடைய சுற்றுச்சூழல் சமநிலையில் ஒரு அங்கமாக உள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது காட்டை அழிக்கும் மற்றுமொரு நடவடிக்கையே ஆகும்.

ஆகவே, இவ்வாறு பழங்குடி மக்களைப் பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்துவரும் மத்திய அரசையும் மத்திய அமைச்சரையும் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், புலிகள் காப்பகத் திட்டம் என்பது சர்வதேச அளவில் நடைபெற்று வரும் கார்பன் வணிகத்திற்காக செயல்படுத்தப்படும் காடுகளைத் தனியார்மயமாக்கும் திட்டமே ஒழிய, அரசு சொல்லிக்கொள்வதைப் போல புலிகளையோ, வனத்தையோ பாதுகாக்கும் திட்டம் அல்ல என்று எமது இயக்கம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வாழும் அனைத்து பழங்குடிகளும், மலைவாழ் மக்களும் இந்தப் புலிகள் காப்பகத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை அரசுக்கு பலமுறை தெரியப்படுத்தியுள்ளனர். மேலும் அரசு இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் முறையாக கருத்துக்கேட்புக் கூட்டங்கள்கூட நடத்தவில்லை.

ஆகவே, மக்கள் விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எமது இயக்கம் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும் இந்திய அரசும் சேர்ந்துதான் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திட்டத்தை உருவாக்கினர். கெயில் நிறுவனம் விவசாயிகளுடைய நிலங்களை அழித்து எரிவாயுக் குழாய்களை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியபோது, ‘‘திட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்பதில் எமது அரசு உறுதியாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

எனவே, கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தைப் போலவே விவசாயிகளை பாதிக்கும் இப்புலிகள் காப்பகத் திட்டத்தையும் தமிழக அரசு எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றவேண்டும் என்று எமது இயக்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறது.

மேலும், கெயில் திட்டத்திற்காக சென்னையில் தமிழக அரசால் மிகப்பெரிய கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதைப் போல, சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகத் திட்டம் குறித்து மக்களுடைய கருத்தை அறியும் கூட்டம் நடத்தப்படவேண்டும்.

இந்திய அரசு, சுற்றுச்சூழல் ஆணையம் அமைப்பதை மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படும் பகுதி முழுமையாக இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது.

ஆக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் திட்டமாக உள்ள புலிகள் காப்பகத்திட்டங்கள் அனைத்தையும், அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு-முண்டத்துறை புலிகள் காப்பகத் திட்டங்களையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சத்தி புலிகள் காப்பகத் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளையும், கருத்துக்களையும் வலியுறுத்தி எமது இயக்கம் சார்பாக தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இப்போது இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிரச்சாரம் இன்னும் விரிவாக நடத்தப்படும் என்றும், திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு எமது இயக்கம் துணைநிற்கும் எனவும் அறிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

இங்ஙனம்,

மனுவேல், அமைப்பாளர்,

மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம்