Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இருண்ட நிலவு - (சிறுகதை)

அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும்.

குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது.

புதிதாக புனரமைக்கப்பட்ட நெடுவீதிகளும் ஆங்காங்கே எழுந்து நிற்கும் புத்தம்புதிய கட்டிடங்களும் புதிபுதிதாய் முளைத்திருக்கும் கடைகளும் அதன் அலங்காரங்களும் பீறேமாவை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது.

என்ன தான் இருந்தாலும் கிளிநொச்சி முன்பிருந்த செழிப்பையும் அதன் அழகையும்இ இழந்து செயற்கைத்தனமாய் காட்சியளித்தது.

அங்கும் இங்குமாய் ஓடித்திரியும் ஒரு மனிதர் முகத்திலும் கூட உயிர்ப்பும் அதன் களைப்பும் எங்கேயோ தொலைந்து போயிருந்தது.

இவர்களும் கூட என்னைப் போல் இழப்பதகென்று எதுவுமற்ற ஏதிலிகளா….

எங்கே போவது யாரிடம் கேட்பது… இதை யாரிடம் விற்பது… குழம்பிக் கொண்டிருந்தாள். பிறேமா…

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சல்களும் ஓட்டோக்காரர்களின் கோணடிச்சத்தங்களும் பிறேமாவை மேலும் சினப்படுத்தியது.

எப்படியாவது வேளைக்குப் போய் சமைச்சு என்ரை பிள்ளைளுக்கு இண்டைக்கு வயிரார ஊட்டி விட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

அங்கும் இங்குமாய் திரும்பிப் பார்த்து வழி கடக்க முனைந்த போது யாரோ ஒருவர் அவளின் தோழில் தட்டினார்கள்.

நீ…. பிறேமா… தானே..?

ஓமோம்…. நீங்கள்….? யாரெண்டு தெரியேல்லேயே….?

என்ன… பிறேமா.. என்னைத் தெரியல்லையா… நான் தான் உன்ரை வகுப்புத்தோழி சாந்தினி… என்ன என்னை ஞாபகம் இல்லையா…

என்ன சாந்தினியா…? என வியந்து முகம் மலர்ந்த போது, இருவரும் ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொண்டனர்.

என்ன சாந்தினி…. இப்படி எல்லாம் மாறிப் போனாய். ஒரு யுத்தம் நடந்த இடத்திலேயா நீயும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்… அல்லது வெளிநாட்டிலிருந்து தான் வந்திருக்கிறாயா…? என கேட்கத் தோன்றியது.

அவளுடைய மேக்கப் சோடனைகளும், தலைமயிரின் அலங்காரமும் இறுக்கமாய் கவற்சியாய் போட்டிருந்த உடுப்பும் அவளை ஒரு அழகு தேவதையாகவே காட்டிக் கொண்டது.

என்ன பிறேமா… எப்படியிருக்கிறாய்…….. என்ன இந்தப்பக்கம்… என விசாரிக்கத் தொடங்கவே சாந்தினியின் கைகள் இரண்டையும் பற்றியவளாய் விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.

என்னண்டு சொல்ல…. எதைச் சொல்ல...

சாந்தினி… அந்தக் கடைசிக் கணங்களை என்னால் மறக்க முடியாமல் இருக்கின்றது. நானும் பிள்ளைகள் இரண்டும் பங்கருக்கள் இருந்த போது வீட்டுக்குள் ஏதோ எடுக்கப் போன என்ரை அம்மாவும் அப்பாவும் பீகீர் விமானம் வந்து போட்ட குண்டினாலே அதிலேயே இறந்து போனார்கள். பிள்ளைகளக்கு ஏதாவது எங்கேயாவது வாங்கிக் கொண்டு வரலாம் எனப்போன என்ரையவரும்….. தொடர முடியாமல் தொண்டை தள தளத்தது.

அவர் இன்று வரையும் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ எண்டு கூடத் தெரியாது. தொடர்ந்து விக்கி விக்கி அழுதாள்

பதினேழு வயதிருக்கும் போது ஆமிக்காரரோ, தப்பினா இயக்கக்காரரோ வந்து பிடிச்சுக் கொண்டு போடுவினம் எண்ட பயத்துக்காக இந்தக் கண்டறியாத கலியாணத்தை அந்தச் சின்ன வயதிலே கட்டிச் துலைச்சவை இப்ப ரண்டு பிள்ளைகளுக்குத் தாய். அதுகளும் நானும் தான் இப்ப தனிய… அந்த ரண்டும் சாப்பாட்டைக் கண்டு எத்தனை நாளாச்சு அது தான் இந்த தோட்டையும் விற்றாவது….

தொடர்ந்து கதைக்க முடியாமல் தலையில் கைவைத்தபடியே கீழே இருக்கப் போனவளை பிடித்துத் தாங்கிய படி பக்கத்திலிருந்த தேத்தண்ணிக் கடையொன்றுக்குள் அழைத்துச் சென்றாள் சாந்தினி.

குடிச்ச சூடானா தேத்தண்ணி பிறேமாவை கொஞ்சம் உசார்படுத்தியது. அது சரி சாந்தினி இப்ப நீ என்ன செய்யிறாய். இப்படி ஆளே மாறிட்டாய் அடையாளமே தெரியாமல்….. உன்னைப் பார்க்க…. நம்ப முடியாமலிருக்குது.

ஒன்றுமே பேசாது மௌனமாய் இருந்தாள்.

வெளியில் போய்க்கொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சலும் கடையில் பாடிக் கொண்டிருந்த வானொலியும் இரைந்து கொண்டிருந்தது.

என்ன சாந்தினி பேசாமை இருக்கிறாய்…

பிறேமா… நீ கேட்டது போல் நான் ஒன்றும் மாறவில்லை. இந்தச் சமூகமே என்னை மாற்றியிருக்கிறது. மாற வேண்டிய நிர்ப்பந்தத்தினாலும் இந்தச் சமூகம் தந்த கொடுமைகளினாலும், உன்னைப் போல் இந்தப் போர் தந்த ஆறாத வடுக்களினாலும் என்னை நானே மாற்றியிருக்கிறேன்.

உன்னைப் போல் தான் நானும் பிறேமா…. கடைசி நேரத்தில் எல்லோரைப் போலவும் நாங்களும் ஓடிக்கொண்டிருந்த வேளையில் எங்கேயோ இருந்து வந்து வீழ்ந்த குண்டினால் என்ரை மனுசன் உட்பட என்ரை சகோதாரியின் முழுக்குடும்பமுமே என் கண்முன்னாலேயே சிதறுண்டு போனது.

ஏதோ நல்ல காலம் கொஞ்சம் பின்னுக்கு வந்ததால் வயது போன அப்பாவும் உயிர் மட்டும் தப்பி இரண்டு கால்களை மட்டும் இழந்த போன ஒரு சகோதரியும், தம்பியோடும் எனது குடும்பமும் தப்பித்துக் கொண்டது. இன்னொரு தம்பி… இதுவரையும் அவன் எங்கே என்றே தெரியாது…

இப்ப இவர்களது எல்லாப் பொறுப்பும் குருவியின் தலையில் பனங்காய் போலாகிவிட்டது.

போர் எப்போ முடிந்துவிட்டது. ஆனால் அதன் விளைவுகளும் கொடுமைகளும் எமது சமூகத்தில் நுழைந்து ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு மனிதனையும் குறிப்பாக பெண்களை சிதைத்துக்கொண்டே இருக்கிறது.

வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த பிறேமா ஒன்றும் விளங்காதவளாய்…ஏய் நான் ஏதோ கேட்க நீ என்ன சொல்லுறாய்…

ம்..ம்ம்… எனச் சிரித்தபடி என்ன செய்யிறாய் எண்டு தானே கேட்டாய்… என்ற படி தொடர்ந்து சிரித்தாள் . அவள் உதடு மட்டுமே சிரித்தது. உள்ளம் சிரிக்கவில்லை என்பதை இலகுவாகவே பிறேமாவினால் புரிந்து கொள்ள முடிந்தது.

பிறேமா… இப்ப நான் இந்தப் படைச்சிப்பாய்களையும், எங்கள் நாட்டு இளைஞர்களையும் மகிழ்விக்கும் ஒரு இன்பராணி. என்னையே விற்று பிழைக்கும் ஒரு விலைமாது.

வருமானத்துக்காக அவமானத்தை விற்கிறேன்.

பேயறைதது போல் விறைத்துப் போனவளாய் ஒன்றுமே பேசாது அவளது கையை இறுகப்பற்றிக் கொண்டாள்.

இங்கே இருக்கின்ற ஆமிக்காரர்கள் தொடக்கம் ஓட்டோக்காரனிலிருந்து சாதாரண முகம் தெரியாத எத்தனையோ முகங்கள் எனக்க இண்டைக்கு வாடிக்கையாளர்கள்.

கைநிறையவே இப்ப சம்பாதிக்கிறேன். சந்தோசமாய் இருக்கிறேன். என்ன பிறேமா யோசிக்கிறாய்…..?

காலம் காலமாக கட்டுப்பாடும் கலாச்சாரம் எண்டும் ஒருமித்து கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட நான் கடைசியிலே ஒண்டுமே ஏலாமல் விரக்தியின் விழிம்பு நிலைக்கு வந்ததாலே கடைசியிலே என தன்மானத்தையும் இழந்து என்னை நானே இழக்கத் தொடங்கினேன்.

வேலை வேலை எண்டு வீதி வீதியெல்லாம் ஓடினேன் வேண்டாதவர்களையெல்லாம் காலிலும் கூட வீழந்து மன்றாடினேன். கருணை கொண்ட ஒருவன் கூட என்னை ஏறெடுத்துப் பார்க்கலே….

கண்டவன் நிண்டவன் வந்தவன் போனவன் எல்லாம் வெறும் காமம் கொண்டே பார்த்தார்கள், என்னைக் கலைத்தார்கள். கடைசியில் அதுவே என்ரை வாழ்க்கையாகிவிட்டது.

இந்தச் சமூகத்தில் நானும் என்ரை குடும்பமும் நிமிர்ந்து வாழ வேண்டும் எனது பிள்ளையையும் தப்பியிருக்கும் தம்பியையும் படிப்பிக்க வேண்டும் எண்டு நினைத்து வெடித்து வெம்பிய போது எனக்கு கிடைத்த இலகுவான ஆயதம் இது தான்.

கலாச்சாரம் என்றும் கட்டுப்பாடுகள் என்றும் கட்டிக்காத்த இந்தப் பாரம்பரியம் எல்லாம், என்னை ஒரு முறையல்ல பலமுறை சிந்திக்க வைத்தது தான், ஆனால் என்னுடைய வறுமையும் விரக்தியும் போர் தங்த கொடுமைகளும் அது தந்த வடுக்களையும் எண்ணும் போது இவையெல்லாம் துக்குநூறாய் காற்றில் பறந்து விட்டது.

இந்த அதிகாரத் தரப்பினால் திணிக்கப்பட்டிருக்கும் அனைத்து விதமான வன்முறைகளையும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளுகின்றோம். இந்த நெருக்கடியியினால் எங்களைப் போன்ற பல பெண்கள் தாங்கள் கட்டிக்காத்த அனைத்துமே துடைத்தெறிந்து விட்டார்கள்….. பிறேமா….

எல்லாவற்றையும் துச்சமென மதித்து நாடெண்டும் மண்ணென்றும் ஆயுதம் ஏந்தி களமாடிய எங்கள் பெண்போராளிச் சகோதரிகளையே தூக்கியெறிந்த இந்தத் தமிழச் சமூகம், என்னைப் போன்றவர்களை எந்தக் கணக்கில் எடுக்கும்.

எங்களைப் போன்ற பல சிங்களத் தோழியர்களும் கூட இன்று இந்த வறுமையின் காரணத்தினால் இந்தத் தொழிலிலே வந்திறங்கியிருக்கின்றார்கள். பிறேமா…

நானோ அல்லது என்னைப் போன்ற பல பெண்களோ இதை விரும்பிச் செய்யவில்லை…. பல நிர்பந்தங்களால்…..

அவளால் அழமுடியவில்லை தொண்டை வரண்டு நா தளதளக்க தலையை நிமிர்த்தி மேலே பார்க்கிறாள் கண்ணீர் கன்னங்களிலிருந்து வழிந்தோடியது.

பிறேமா…. நீ ஒண்டுக்கும் கவலைப்படாதே… உனக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன். நீ எப்போதும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு விசிற்றிங் காட்டையும் எடுத்துக் கொடுத்து விட்டு பாக்கிலிந்த பல ஆயிரம் நோட்டுக்களை அவள் கையில் திணித்தாள்.

இது பாவச்சம்பளம் என நினைத்து என்னைப் புறந்தள்ளி விடாதே… உன்னுடைய நண்பியாய்… நல்ல தோழியாய்.. உடன்பிறவாச் சகோதரியின் உதவியாய் ஏற்றுக் கொள்.

என்னைப் போன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு நீயும் வந்துவிடக் கூடாது. இதே போல் ஒரு சிறு உதவியோ அல்லது ஒரு ஆறுதல் வார்த்தையாவது எனக்கு அன்று கிடைத்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் பிறேமா…

இண்டைக்கு நீ போ, மிக விரைவில் உன்னிடம் வருவேன். நிரந்தரமாய் வருமானம் வரும்மாதிரியான ஒரு தொழிலை உனக்கு ஏற்படுத்தித் தருவேன்.

இந்த அதிகாரவர்க்கம் எங்கள் வாழ்க்கையைப் பறித்தது. இந்தப் போர் என்றை உறவுகளை காவு கொண்டது. இந்தச் சமூகம் என்னையே பறித்துக் கொண்டது.

ஆனால் ….

என் மனவலிமையும் எனது உறுதியையும் யாராலும் பறிக்கமுடியாது. நாம் எழுந்து நிமிர்ந்து வாழ்வோம் என்ற சாந்தினியின் வார்த்தைகள் பிறேமாவின் காதுகளிலும் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டது.

முற்றும்.