Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் அமெரிக்கா விட்ட புஸ்வாணம்!

'சர்வதேச விசாரணை இன்றில்லாவிட்டாலும் , நாளை வரும்'

"இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இலங்கை அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்."

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தயாரித்த தீர்மான நகலின் தமிழாக்கத்தை கீழே பாருங்கள்.

1) ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தலைவர் அளித்திருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.

2) (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சி.யின் உருப்படியான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம், இன ஒற்றுமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்ட இத் தீர்மானம் மறுபடியும் வலியுறுத்துகிறது.

3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேச்சுரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, சட்டவிரோதமான தன்னிச்சையான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள்கடத்தல் ஆகியவை தொடர்பான ஐ. நா குழுக்களின் சிறப்பு அலுவலர்கள் இலங்கைக்குத் தடையின்றி சென்று ஆய்வுகளை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

4) மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசோடு கலந்து ஆலோசனை செய்து, அதன் ஒப்புதல் பெற்று, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் மற்றும், அவருக்கு இருப்பது போன்ற அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர் இலங்கை அரசுக்கு உதவிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

5) ஐ.நா மனித உரிமைகள் குழுவின் தலைவர் மற்றும் அவருக்கு இருப்பது போன்ற அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர், இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாகவும், இன ஒற்றுமை, பொறுப்பு ஏற்றுக் கொள்ளல் குறித்து இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் 25-வது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

NO Fire Zoneக்கு வரவழைத்து இனப்படுகொலை செய்து முடித்த தந்திரம் போன்றது தான் அமெரிக்கா முன்வைக்க இருக்கிற தீர்மானம். தமிழர்களின் மீது அமெரிக்காவுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை கோருகிற தீர்மானத்தை நேரடியாக ஐ.நா பாதுகாப்பு சபையிலேயே கொண்டுவர முடியும். அமெரிக்காவுக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை.

சென்ற தடவை நிறைவேற்றிய அதே தீர்மானங்களையே மீண்டும் சமர்ப்பிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அத்துடன் இலவச இணைப்பாக இலங்கை அரசுடன் ஒத்துழைக்கத் தயார் என்ற செய்தியையும் சொல்லியுள்ளது. கூடவே இந்தியாவும் பொருளாதார உதவிகளை குவிக்கவுள்ளதாக கூறுகின்றது.

என்ன எல்லாம் புஸ்வாணம் ஆயிடிச்சா?

மேற்குலகம் போர்க்குற்றவாளியான இலங்கை அரசு மீது நடவடிக்ககை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்னமும் கனவு காண்கிறீர்களா?

இப்படியே கனவு கண்டு கொண்டிருப்போமாயின் அடுத்த வருட மனித உரிமைக் கூட்டத்திற்கும் புதுக்கதையோடு வருவார்கள். எம்மீது ஏறி இலங்கை அரசுடன் தமது நலன்களிற்காக பேரம் பேசுவார்கள். நாங்கள் எம்மை வைத்து பிழைப்பு நடத்தும் எமது அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுவதே தொடராக தொடரும்.

என் கையே எனக்குதவி. என்னைப்போல அடக்கி ஒடுக்கப்படுகிறவனே என் நண்பன். எனக்கு பசித்தால் நான்தான் சாப்பிடணும். இனிமேலாவது புரிந்து கொண்டு செயலாற்ற முனைவோம்.