Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

'கிழக்கில் போராளிகள் புனர்வாழ்வும் வடக்கில் காணி சுவீகரிப்பும் தொடரும்'

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிவில் குடும்ப வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் குடும்பஸ்தர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள குடும்பஸ்தர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் அண்மைக் காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளின் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் இதுவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதிருந்தால் அவர்கள் முறையான புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என்று அடையாளம் காணப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பிரிகேடியர் ருவான் வணிகசூரிய விளக்கமளித்தார்.

கிராமங்களில் மக்களுக்கு தொந்தரவாக இருப்பவர்கள் என்று கிடைக்கின்ற முறைப்பாடுகளின் படியே சிலர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

ஆனால், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களும் அவர்களின் போராளிகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், ஆனால் சாதாரண குடும்ப வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளவர்களை மட்டும் அரசு புனர்வாழ்வுக்கு உட்படுத்த நினைப்பது பற்றி கேள்வி எழுப்பியபோது, குறித்த முன்னாள் தலைவர்களும் அவர்களின் போராளிகளும் இயல்பாகவே புனர்வாழ்வு அடைந்துவிட்டதாகவும் அவர்களால் சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் இராணுவப் பேச்சாளர் பதிலளித்தார்.

'வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும்'

இராணுவ முகாம்கள் நாட்டுக்கு அவசியம் என்பதால் முகாம்கள் அமைந்துள்ள காணிகள் கையகப்படுத்தப்படும் என்கிறது இலங்கை இராணுவம்

இராணுவ முகாம்கள் நாட்டுக்கு அவசியம் என்பதால் முகாம்கள் அமைந்துள்ள காணிகள் கையகப்படுத்தப்படும் என்கிறது இலங்கை இராணுவம்

இதேவேளை, வடக்கில் பலாலி இராணுவத் தளமும் ஏனைய இராணுவ முகாம்களும் அமைந்திருக்கும் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேபோல பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் போன்ற மையங்களை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் தேவைகளுக்காகவும் அரசாங்கம் குறித்த காணிகளை கையேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய கூறினார்.

அபிவிருத்திப் பணிகளுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்க வேண்டியது அவசியம் என்றும் காணிகளை இழக்கும் மக்களுக்கு இழப்பீடும் மாற்றிடங்களும் வழங்கப்படும் என்றும் பிரிகேடியர் வணிகசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, 2009-ம் ஆண்டில் வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருந்த சுமார் 4500 ஹெக்டேர் பரப்புக் காணி இப்போது 2000 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் 15 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் தமிழோசையிடம் தெரிவித்தது.