Sat05302020

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களை திவாலாக்கும் முதலாளித்துவம்... (பகுதி 1)

இலங்கையிலிருந்து சௌவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காரியாகத் தொழில் பெற்றுச் சென்ற றிசானா நபீக் எனும் மூதூரைச் சேர்ந்த இளம் பெண் மீது கொலைக்குற்றம் சுமத்தி அப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை உலகறிந்த விடயம். இந்த இளம் பெண்ணின் மரண தண்டனை குறித்து இன, மத பேதமற்ற மனிதாபிமான எதிர்க் குரல்கள் பரவலாக எங்கும் எழுப்பப்படுகின்றது. அவளது குடும்பத்திற்கான நிவர்த்தித் திட்டங்கள் பல பக்கத்தாலும் அறிவிக்கப்படுகின்றது.

இவை ஒரு பக்கம் இருக்க, இலங்கை என்ற நாடு சிங்கப்பூராக மாறிவிடும் என இலங்கை மக்களைக் கனவு காண வைத்துக் கொண்டே ஏழைத் தொழிலாளர்களை அடிமைக் கூலிகளாக ஏற்றுமதி செய்து கொண்டு, தனது மக்களின் உழைப்புத் திறனை விற்று வரும் இலங்கை அரசால், தனது நாட்டுக்குள்ளேயே அம்மக்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்படிச் சொந்த நாட்டில் உள்ள மக்களின் பொருளாதாரத்தையும் அவர்களின் திறனையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத பிற்போக்குப் பொருளாதார அரச அமைப்பினையே இலங்கையின் ஆட்சி அமைப்பு கொண்டிருக்கின்றது.

அதீத சமச்சீர் அற்ற பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சுய பொருளாதாரத்தில் தங்கியிருந்தவர்கள் தமது உழைப்பை விற்பதற்குரிய தொழிலாளர்களாக இலங்கைச் சமூகக் கட்டுமானத்தால் உருவாக்கப்படுகின்றார்கள். இப்படி தொழிலற்றவர்களாக இருப்பவர்களை குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பை விற்பதற்கான மக்களாக்கி அவர்களை அன்னிய நாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு நாடுகடந்து செல்லும் ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் தாய்மார்களை சொந்த நாட்டை விட்டுச் செல்லும் துர்ப்பாக்கிய நிலையை இலங்கை அரசு ஊக்குவிக்கின்றது. இவ்வாறு தமது உறவுகளையும் தாய்மண்ணையும் விட்டு அம்போவென அன்னிய தேசங்களுக்குச் செல்லும் இப்படியான தொழிலாளர்கள், பல லட்சம் டொலர்களை அன்னியச் செலாவணியாக மறுதளத்தில் இலங்கைக்குப் பெற்றுத் தருகின்றனர்.

வேலையிழப்பு :

வேலையில்லாது இலட்சக் கணக்கானோர் இலங்கையில் இருக்கின்றார்கள். இவர்களைப்போல் ஒவ்வொரு குடிமக்களின் வளற்சிக்கும், பாதுகாப்புக்கும் முழுப் பொறுப்பும் அதற்கான உத்தரவாதமும் கொடுக்க வேண்டியது அரசின் கட்டாய கடமையாகும். ஆனால் இலங்கைத் தேசத்தின் இப்படியான ஆட்சியில், ஆதார சமூகக் கொடுப்பனவுகளோ அல்லது சமூகப் பாதுகாப்புகளோ அற்ற நிலையாகத்தான் இருக்கின்றது.

அத்துடன் மக்களின் வளற்சியிலும், முன்னேற்றத்திலும் அரசிற்கு முழுப் பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையும் இங்கு இருக்கின்றது. ஒரு நாட்டின் குடிமக்கள் தனியே தேர்தலில் வாக்குப் போடுவதுடன் மாத்திரம், அவர்களின் கடமை முடிந்து விடுவதில்லை.

அத்துடன் வாக்குப் போட்ட மக்களின் பொருளாதார வளற்சியையும், பண்பாட்டு வளற்சியிலும் முக்கியத்துவம் காட்ட வேண்டிய அரசின் கடமையை அரசியல்வாதிகள் புறந்தள்ளுவதுடன், அதனைத் தட்டிக் கேட்கும் பலத்தினை மக்கள் இழந்து போயுள்ளனர்.

மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறை இலங்கை போன்ற நாடுகளின் பரிமாண வளர்ச்சி ஊடான பொருளாதார உற்பத்தி முறை என்பது மாற்றம் பெறவில்லை. இது கொலனித்துவ தேவை கருதிய உற்பத்தி முறைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்று நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்த விவசாயிகள், மக்கள் இவர்களின் கூலிகளாக மாறினர். முன்னர் மற்றவர்கள் தயவில் தங்கி நிற்கக் கூடாது என்ற உலகக் கண்ணோட்டத்தை கொண்ட மக்கள், தமது சுயசார்பு உற்பத்தி முறையினை கைவிட்டனர். கூலி உழைப்பாளிகள் தேவைப்பட்ட போது தமது உழைப்பை விற்று வாழ்பவர்களாக மாறினர்.

அத்துடன் பொருளாதாரத்தில் நிரந்தர வருமானம் என்பது தொழிற்துறை மாற்றத்தின் காரணமாகவும், காலநிலை, இயற்கைச் சீற்றம் காரணமாகவும் தடைப்படுகின்றது. இதனாலும் பெரும்பான்மையான மக்கள் தமது வாழ்நாளில் வறுமையிலேயே வாழவேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறு பொருளாதாரத்தில் நலிந்து வாழ்ந்தவர்கள், நலிந்தே அவர்களின் பரம்பரையும் வாழவேண்டிய நிர்ப்பந்தமிருக்கின்றது.

மற்றும் மாற்றுத் தொழில் தேடி நகர்ப்புறத்தை நோக்கி நகர்கின்ற மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது அறவே கிடையாது. முன்பு எந்த நிலத்தையும் ஆக்கிரமித்து அதில் சிறு குடிசையைப் போட்டு வாழ்க்கையை நடாத்தக் கூடியதாக இருந்தது. பின்பு நிலங்கள் தனியார் மயமாகிய காலத்தில் அந்நிலங்கள் தனிமனிதர்களின் சொத்தாகியது. அதனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த பலர் தமது சிறு குடிசைகளைக் கூட இழக்க வேண்டியேற்பட்டது. சிலர் தமது வாழ்வை நடத்துவதற்காக சிறு துண்டு காணி நிலங்களைக் கூட விற்கின்ற நிலையாகினர்.

இவ்வாறாகவும் நகர்ப்புறமாதல் இடம் பெறுகிறது. உழைப்பை வாங்கும் உதிரி வேலைகளை நம்பி தமது உழைப்பை விற்கத் தயாரானவர்களாக இவர்கள் உருவாகின்றனர். இதில் முதலாளித்துவத்தின் உருவாக்கமானது குழந்தை உழைப்பை சந்தைக்கு வரவழைத்தது. இரவு வேலையைப் பழகும் தொழிலாளர்களையும் அறிமுகம் செய்தது.

இவ்வாறு நகரங்களை நோக்கி வருகின்ற குடும்ப உறுப்பினர்கள் ஆண் தொழிலாளியை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. ஆணின் உழைப்பு என்பது முழுக் குடும்பத்தையும் சமாளிக்க முடியாத போது, ஏனைய குடும்ப உறுப்பினர்களும் தமக்கு கிடைக்கின்ற பிழைப்புக்களில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் வறுமையையும், சுரண்டலாளர்களையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. காரணம் ஏனெனில் இவர்களே எல்லாவற்றையும் இழந்த சுதந்திர ஆண் தொழிலாளர்களாக முதலில் மாற்றப்பட்டவர்கள் ஆவர் என்பதாகும்.

இவர்கள் தமது வாழ்வியலை மேற்கொள்ளும் பொருட்டு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறையில் அல்லாமல் சில்லறை வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்களே கூலிவேலை செய்பவர்களாக இருக்கின்றனர். மூட்டை தூக்குவது, பொதி சுமப்பது, துப்பரவு வேலை செய்வது உட்பட தொழிற்சாலையில் உடல் உழைப்பிலான வேலை பார்ப்பதும் இவர்களே.

இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் வெகு குறைவாகும். இவர்கள் எப்பொழுதும் அடுத்த நேரச் சோற்றுக்குத் தவிக்க வேண்டியதுதான். இவர்கள் குடியிருக்கும் பகுதிகள் வெகுவாகப் பின் தங்கிய நிலையில் இருப்பதை அவதானிக்க முடியும். இவர்களின் வருமானம் நிரந்தரம் அற்றதாக இருப்பதினால், இவர்களில் சிலர் சிறுசிறு களவு ஏமாற்று வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்களே உதிரிப் பாட்டாளிகளும் ஆவர்.

நிரந்தரவருவாய் இல்லாமை:

அடைமழை, வெள்ளப்பெருக்கு, சூறாவளி போன்ற இயற்கை சீற்றத்தினால் பிழைப்பு நடத்துவதற்கு துணை புரியும் உற்பத்தி சாதனங்கள் பாதிக்கப்படுகின்றது, விழைச்சல் பாதிக்கப்படுகின்றது. நிலத்தின் வளம் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு மண்ணின் தன்மை மாற்றத்திற்கு உள்ளாகின்றது. விழைச்சலின் தன்மையையும் பாதிக்கப்படுகின்றது.

இவ்வாறான வேளையில் இழப்பீட்டுத் தொகை முழு இழப்பீட்டிற்கான தொகையாக அமைந்து விடுவதில்லை. இயற்கையாக ஏற்படும் இழப்புக்களின் வடுவை தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

கடல் தொழில் செல்பவர்கள் கடல் கொந்தளிப்புக் காரணமாக கடலுக்கு செல்ல முடியாது இருக்கின்றது. கடலுக்குச் செல்கின்ற போது ஆழ்கடலில் மூழ்கி மனிதரையும், உபகரணங்களையும் இழக்கும் நிலை ஏற்படுகின்றது. பருவகால தொழில் என்ற காரணத்தினால் நிரந்தர வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியவதில்லை. அவ்வாறு வருமானம் கிடைக்கின்ற போது அதனை சேமித்து வைப்பதற்கு பழக்கப்படாதவர்களாக இருக்கின்றார்கள். பருவகால தொழில் என்பதால் நிரந்தர வருமானத்தினை உறுதி செய்யும் முறை எமது நாடுகளில் இல்லை. இதனால் கடன்தொல்லைக்கும், வறுமைக்கும் ஆளாகின்றனர்.

தனியார் நிறுவனங்களிலும், திறந்த வர்த்தக வலையம் என்ற போர்வையில் உழைப்பைச் சுரண்டும் நிறுவனங்களும், கைத்தறி, புகையிலை- சிகரட் உற்பத்தி போன்றவற்றில் குடிசைக் கைத்தொழில் ஊடாக வருவாயைப் பெறுபவர்கள். நிரந்தர வருவாயைப் பெறுவதில்லை. நிதி நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாக சிறுசிறு நிறுவனங்கள் நலிவடைந்தும், பெரு நிறுவனங்களால் விழுங்கப்படுகின்ற வேலையில் வேலையில்லாமையும் அதிகரிக்கின்றது.

குடிசைக் கைத்தொழில் ஊடாகவும், வீட்டு தோட்டங்களை செய்வதன் ஊடாக குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை பெண்கள், சிறுமியர் சுமந்து கொள்கின்றார்கள். தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் ஆண் தொழிலாளியின் தேவைகளை பூர்த்தி செய்பவளாக வீட்டுப் பெண்களும், சிறுமியர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் நாட்டின் மொத்த உழைப்புச் சக்திக்கு துணையாக சேவகம் செய்வது நாட்டின் மொத்த மனிதவலு என்பது மூலதனமாகவும், மூலவலுவாகவும் இருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுப் பெறுமானத்தை மொத்த நாட்டிற்கும் கொடுக்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப் பெறுமானத்தின் உருவாக்கம் நாட்டின் மொத்த மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

“ஒவ்வொரு சரக்கின் பயன்-மதிப்பிலும். பயனுள்ள உழைப்பு, அதாவது ஒரு திட்டமான வகையைச் சேர்ந்ததும் திட்டமான ஒரு நோக்கத்துடன் பிரயோகிக்கப்படுவதுமான உற்பத்தி நடவடிக்கை அடங்கியுள்ளது. பயன்-மதிப்புகள். அவற்றில் உருக்கொண்டுள்ள பயனுள்ள உழைப்பு அவை ஒவ்வொன்றிலும் பண்பு வழியில் வேறுபட்டதாக இல்லையேல். சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்ள முடியாது.

உபயோகம் அல்லது நுகர்வின் மூலமே பயன்-மதிப்புகள் மெய்ம்மையாகின்றன. அவை செல்வம் அனைத்தின் சாரமாகவும் அமைகின்றன-அந்தச் செல்வத்தின் சமுதாய வடிவம் எதுவானாலும் சரி. நாம் பரிசீலிக்கப் போகும் சமுதாய வடிவத்தில் அவை பரிவர்த்தனை-மதிப்பின் (exchange-value) பொருளாயத சேமிப்பங்களாகவும் உள்ளன"

நாட்டின் மொத்த மூலதனத்தின் விருத்திக்கு வீட்டுப் பெண்கள், சிறுமியர் பங்களிப்பதைப் போன்று குடும்பத்தின் தேவையையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டுப் பெறுமானத்தின் பங்களிப்பின் முக்கியத்தை உணர்ந்த காரணத்தினால் வெனிசுவேலா நாட்டில் வீட்டுப் பெண்களுக்கு சம்பளம் கொடுக்கும் திட்டத்தினை உருவாக்கியுள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் பயன்பாட்டுப் பெருமானத்தை உருவாக்கிக் கொள்கின்ற காரணத்தினால் நாட்டின் மூலதனத்தை உருவாக்குகின்றதை அங்கீகரித்தலும், அவர்களுக்கு அரசு கொடுக்கும் சன்மானமாக இன்று வெனிசுவேலா ஊழியம் வழக்குதலை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு வீட்டுப் பெண்களுக்கு ஊதியம் வழங்குவதை முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் ஊதியம் கொடுக்க வேண்டுமென்றால் வரியினை அறவிட வேண்டும். இதற்கு உயர் மத்திய வர்க்கமும் கூட எதிரியாக இருக்கும். பெரும் எதிர்ப்புக்கும் மத்தியில் இவ்வாறான சமூக வளர்ச்சிக்கு உதவக் கூடிய திட்டத்தினை வெனிசுவேலா அரசு உருவாக்கியிருக்கின்றது.

இவ்வாறு கொடுப்பனவு கொடுப்பதன் ஊடாக குடும்பத்தின் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற சுமையை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த நிதியின் ஊடாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்க முடியும். இதன் ஊடாக சிறுவயது முதல் எழுத்தறிவு உள்ள சமூகமாக உருவாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு பிள்ளைகளைப் படிப்பிக்க வைப்பதன் ஊடாக சிறுவர் உழைப்பை இல்லாதாக்க முடியும்.

பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் குறுக்குப் பாதையை தெரிவு செய்வதை நிறுத்தி விட்டு நிரந்தர தீர்வை கண்டடைய வேண்டும். இலங்கை நாட்டில் வீட்டுப் பெண்களுக்கு கொடுக்கும் படியான தீர்வுத் திட்டத்தினை முன்வைத்துப் போராட வேண்டும்.

-தொடரும்..