Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

'இலங்கை சட்டத்தரணிகள் போராட்டம் தொடரும்'

இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கை ஜனாதிபதியால் நீக்கப்பட்டதாக் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவருக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டத்தை இலங்கை சட்டத்தரணிகள் தொடருவார்கள் என்று அவர்களுக்கான அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி K.S. ரட்ணவேல் கூறியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமை கடந்த 10 வருடங்களாக இலங்கையில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுவதால், அதற்கு மாற்றாக, அதற்கு அழுத்தங்களைக் கொடுக்க ''ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம்'' என்ற ஒன்று அமைக்கப்பட்டு, செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ள ரட்ணவேல் அவர்கள், அதன் அழுத்தம் காரணமாக சட்டத்தரணிகள் புதிதாக நியமிக்கப்படக் கூடிய பிரதம நீதியரசருக்கு சம்பிரதாய பூர்வமான வரவேற்பை வழங்குவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும், அதன் அர்த்தம் அவருக்கு சட்டத்தரணிகள் தமது ஆதரவை வழங்கமாட்டார்கள் என்பதாகும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

அதேவேளை, அனைத்து சட்டத்தரணிகளுக்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள ஒரு கோரிக்கையில், மேன்முறையீட்டு மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை புதிய தலைமை நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவருக்கு உதவக் கூடாது என்று கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்க சட்டத்தரணிகள் சங்கம் விரைவில் கூடும் என்று கூறும் அவர், எப்படியிருந்த போதிலும் ஷிராணி பண்டாரநாயக்கா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான தமது நடவடிக்கை தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

ஷிராணியைப் பதவி நீக்கினார் ஜனாதிபதி

இலங்கையின் தலைமை நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்து நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஷிராணி எதிராக அரசாங்கம் கொண்டுவந்திருந்த கண்டன பதவிநீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது.

ஷிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும் உத்தரவில் ஞாயிறு காலை ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்தது.

இந்த உத்தரவு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கிடைத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு குறித்து உடனடியாக கருத்து வெளியிடுவதற்கு ஷிராணி மறுத்துவிட்டார்.

கண்டன பதவிநீக்க நடைமுறையில் முறைகேடுகள் இருக்கின்றன என்றும், இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் நாட்டின் உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பொறுப்பிலிருந்து அகல ஷிராணி மறுக்கவும் வாய்ப்புள்ளது.

ஜனாதிபதி கருத்து

"நீதித்துறை சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்"

மாற்று மீடியா வடிவில் இயக்க