Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணிகள் மீண்டும் எப்போது?

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக, பல்கலைகக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் இடையில் வெள்ளியன்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்திருப்பதுடன், பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறையிருடனும் நிர்வாகத்தினர் கலந்துரையாடி மேல் நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

எனினும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி வகுப்புக்களைப் புறக்கணித்துள்ள மாணவர்கள் இதற்கு உடன்படுவார்களா என்பது தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை பல்கலைக்கழக மாணவர்கள் அனுட்டிப்பதைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்குள் படையினர் உட்புகுந்ததைத் தொடர்ந்து, இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து, அங்கு கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள சக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.