Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களும், தமிழ்தேசியமும், பெண்கள் மீதான வன்முறையும்

இரு இணையச் செய்திகள்

"பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள்!

பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100பெண்களில் 21பெண்களுக்கு என்ன நடந்தது? 30 பெண்களை கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய்!

அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்னநடந்தது? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை... அதிர்வு இணையத்துக்கு வழங்கிய இரகசியத்தகவல்"

16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில்: மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?"

கோரமான மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இனப்படுகொலையில் இராணுவத்தினர் வவுனியா இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரம் வரையான இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வன்முறை கலந்த மனநோயின் காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட பெண்கள் இராணுவ மனநோய் வைத்தியசாலையில் இராணுவ மனநோயாளர்களோடுபணியாற்ற கட்டளையிடப்பட்டதாகவும்.அவர்களின் வன்முறை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ------ இனியொருவிற்கு தெரிவிக்கப்பட்ட தகவல் குறிப்பிடுகிறது."


மேற்கண்ட செய்தி நறுக்குகள் புலம்பெயர் இணையத்தளங்களில் கடந்த இருநாட்களில் (11-12.12.2012) வெளிவந்தவை. இவற்றில் முதலில் உள்ள செய்தி, புலம்பெயர் இணையத்தளங்களிலேயே மிகவும் கீழ்தரமாக, இனவாதம், மதவாதம், பெண்ணொடுக்கு முறையை பிரசாரம் செய்யும் புலம்பெயர் புலிகள்சார் இணயதளம் ஒன்றில் வெளிவந்தது.

"16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில்: மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" என்ற இந்தத் தலைப்புடன் வெளிவந்த செய்தி, ஐரோப்பாவில் இடதுசாரி இணையமெனத் தன்னை சந்தைப்படுத்தும் இணையமொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தச் செய்திகள் வெளிவந்த இணையங்களில், ஸ்ரீலங்கா ராணுவத்தில் கடந்த வாரத்தில் பலவந்தமாகவும், தவறான தகவல்களின் அடிபடையிலும் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களைப் பற்றிய முழுச்செய்திகளையும் வாசித்தால், அந்த இரு இணையங்களும், இரு விடயங்களை நேரடியாக, எந்தவித ஒளிவு மறைவுமின்றி கூறுகின்றன.

அவையாவன :

1. தனது ராணுவவீரர்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழ் பெண்களை, 17.11.2012 அன்று ஸ்ரீலங்கா அரச ராணுவம் தனது படையில் இணைத்துக் கொண்டது .

2. இராணுவ மகளிர் பிரிவின் 6ஆவது படையணியினால், சில நாட்களுக்கு முன், (11.12.2012) அன்று, 16 பேர் 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தமிழ் யுவதிகள் அனைவரும் ராணுவத்தால் பாலியல்வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி தமிழ் பெண்கள் மீதான பாலியல்வதைகளை, ஆயிரத்திற்கு மேற்பட்ட வன்முறை கலந்த மனநோயின் காரணமாக, வவுனியா ராணுவ வைத்தியசாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள, இராணுவத்தினர் சிலரால் அல்லது பலரால் நடாத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்களைத் தாம், பாதிக்கப்பட்ட பெண்களின் நெருங்கிய உறவுகளான தாய், தந்தை, சகோதரர்களிடம் பெற்றுக்கொண்டதாக இந்த செய்திகளை வெளியிட்ட புலம்பெயர் இணையங்கள் கூறுகின்றன.

இந்த குறிப்பை தொடர்ந்து எழுத முன் ஒரு முக்கிய விடயம் ஒன்றைக் கூறிவிட்டு தொடர்வது நன்று. "கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 109 தமிழ் பெண்கள், 17.11.2012 ஆம் திகதியன்று பொய்த் தகவல்கள், மற்றும் பொய் உறுதிமொழிகளின் அடிபடையில், ஏமாற்றி இராணுவ மகளிர்பிரிவின் 6ஆவது படையணியின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுளார். இது தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிக்கும் அரசின் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஒன்று!" இதைக் கூறுவதனால் இந்த குறிப்பை எழுதுபவரை இலங்கை அரசின் கைக்கூலி என முத்திரை குத்துவதை ஓரளவுக்கேனும் தடுப்பதன் மூலம், இந்த குறிப்பில் உள்ளடக்கியிருக்கும் நியாயங்கள் அடிபட்டு போகாமல் தடுக்க முடியும்.

இனி விடயத்துக்கு வருவோம்.

ராணுவத்தால் இணைக்கப்பட்ட அனைவரும், அவர்களின் பிரதேசமக்களால் அறியப்பட்டவர்கள். அது மட்டுமல்ல யாழ்பாணத்தில் இயங்கும் சில "தமிழ் தேசிய" உடகங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்ட அனைத்துப் பெண்பிள்ளைகள் பற்றிய முழு விபரங்களையும் தமது கையில் வைத்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இந்தத் தகவல்களைத் திரட்டி ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், அவரின் சுற்றுவட்டாரங்களுமே, BBC இலிருந்து இடதுசாரித்துவம் கதைக்கும் இணையங்கள் வரை மேற்படி பெண்பிள்ளைகள் பற்றிய விடயங்களை "கசிய" விட்டவர்கள் .

ஆனால் இதைக் "கசிய" விட்டவர்களின் யாழ் - ஊடகங்கள், புலம்பெயர் நாடுகளில் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் போல எதையும் பிரசுரிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு தெரியும் மேற்படி செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி. அதை விட, இப்படி கீழ்த்தரமாக, எந்தவித உண்மைத் தகவல்களுமின்றி, சரியான நியாயங்களுக்கும், ஊடக தர்மங்களுக்கும் அப்பால் பாலியல்வன்முறை பற்றி செய்தி வெளியிடுவது அப்பெண்களின் குடும்பங்களில், கிராமங்களில், பிரதேசங்களில் எவ்வாறான கொடும்வடுக்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துமென யாழ். உடகங்களுக்கு பல அனுபவ அடிபடையில் நன்றாகவே தெரியும்! யாழ். தமிழ் தேசிய ஊடகங்கள் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், இப்பிரச்சனையின் இந்த நிமிடம் வரை ஊடகதர்மத்தை காத்துள்ளனர் என கூறலாம்.

இதற்கு மிக முக்கிய காரணம் கீழ்வரும் சம்பவம் சொல்லப்படுகிறது :

தமிழ் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் வகையில், பிள்ளையானும், டக்ளசும், கருணாவும் ராணுவத்துக்கு உதவி செய்தனர் என்ற செய்தியை 2010- 2011 இக்கு இடைப்பட்ட காலத்தில், விக்கிலீக்ஸ் 12 வரிகளில் வெளியிட்டது. அவ் விக்கிலீக்ஸ் செய்தி சார்ந்து, பல்லாயிரம் கற்பனை சார்ந்த கட்டுரைகள் புலம்பெயர்ந்த தேசங்களில் இயங்கும் இணையங்களால் வெளியிடப்பட்டது. அதேபோன்று இலங்கைத் "தமிழ்தேசிய" ஊடகங்களும், காரசாரமாக செய்திகளும், கண்டனங்களும் வெளியிட்டன. இதனால் பிள்ளையானும், கருணாவும், டக்ளசும் பாதிக்கப்படவுமில்லை, அவர்கள் எந்தவித சர்வதேச நீதிமன்றத்திலும் நிறுத்தப்படவுமில்லை.

ஆனால், குறிப்பாக டக்லஸ்சின் கட்சி ஆதிக்கம் செலுத்தும், யாழ்பாணத்திலுள்ள சில சமூதாய பெண்கள், இன்றும் டக்லஸ் மீதான குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட வண்ணமுள்ளனர். இன்றுகூட, அப்பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும் போது, 1995 இக்கு பின் இலங்கையில் எங்கு அப்பெண் சீவித்தார் என மறைமுகமாக விசாரிக்கப்படுகிறது. அதனால் எல்லோரும், சந்திரிக்கா ஆட்சிக்காலத்திலிருந்து மே18 வரை, யாழ்-குடாநாட்டில் சீவிக்கவில்லை என கூறுகின்றனர். சிலர் அதை ஆதாரப்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இச்சம்பவமானது மேற்கூறியபடி தமிழ் தேசிய ஊடகங்கள் சமூகப்பொறுப்புடன் செய்தி வெளியிடவேண்டிய நிலைமையை ஓரளவேனும் ஏற்படுத்தியுள்ளது .

புலம்பெயர் உடகங்களும் பெண்கள் மீதான வன்முறையும் :

அதேவேளை இந்தக் குறிப்பின் ஆரம்பத்தில் பதியப்பட்டுள்ளதுபோல, புலம்பெயர் தமிழர்களை "பிரதிநிதித்துவப்” படுத்துவதாக கூறும் வலதுசாரிய மற்றும் இடதுசாரிய உடகங்கள், இணயங்கள் எந்தவித மனிதம் சார்ந்த கரிசனமும் இல்லாமல் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள், மேற்கூறியபடி பொய்கூறி ராணுவத்தில் இணைக்கப்பட்டவர்கள் தான் . இலங்கை ராணுவத் தலைமை, மற்றும் அரசின் செயல்கள் தமிழ் மக்களை ஒடுக்கும் நோக்கில் செய்யப்படுபவை தான் . இதன் அடிபடையில், இலங்கை அரசின் இவ்வாறான ஒடுக்குமுறைகள், கண்டிக்கப்பட வேண்டியதும் ,சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தப்பட வேண்டியதுமாகும். அத்துடன் பலவழிகளில் இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையும் மிக முக்கியமானது.

ஆனாலும் இலங்கை அரசுக்கு எதிராக அம்பலப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கிறோம் என்ற போர்வையில், இந்தக் குறிப்பை எழுதும் நிமிடம் வரை, எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லாமல், மேலெழுந்தவாரியாக, சந்தற்பவாதமாக 16 தமிழ் பெண் பிள்ளைகளை,

* "மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்" என கூறுவது அந்த பிள்ளைகளின் தனிபட்ட வாழ்கையை எதிர்காலத்தில் பாதிக்காதா ?

* ஒரு அநீதியை எதிர்பதற்காக, எந்த விதமான மனித தர்மத்துக்கும் அப்பாற்பட்ட, இன்னுமொரு அநீதியை நிகழ்த்துவது எந்த விதத்தில் நியாயம் ?!

* இலங்கை அரசின் செயலை எதிர்த்துப் போராட வேண்டுமானால், தமிழ் சமுகத்துக்கு கொடுமைகளை சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்காக ஏற்கனவே யுத்தத்தாலும், வறுமையாலும், போரினால் ஏற்பட்ட உளவியல் வடுக்களாலும் பாதிக்கப்பட்டு, இன்று இலங்கை அரசால்ஏமாற்றப்பட்ட தமிழ் பெண்பிள்ளைகளை, பாலியல் கொடுமைக்கு உட்படுதப் பட்டவர்கள், என எந்த வித ஆதாரமும் இல்லாலாமல், கூறுவது எந்த வகை யில் நியாயம்? !!!

இது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்றதை விட கொடுமையானது. இலங்கை அரசு செய்யும் கொடுமைக்கு ஈடானதாகவே, புலம்பெயர் ஊடகங்களின் நடைமுறையும் தமிழ் பெண்கள் மீதான வன்முறையாகப் பார்க்கப்படவேண்டும்!

உலகிலுள்ள, சமூக ரீதியாக பெண்ணுரிமை சார்ந்த விடயங்களில் அபிவிருத்தியடையாத இனங்களில், இலங்கைத் தமிழ் சமூகமும் ஒன்று . அதன் ஒரு பகுதி ஒப்பீட்டு அளவில் பெண்ணுரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னும், தனது பிற்போக்குத்தனமான பெண்கள் பற்றிய கருத்தியலையே இன்றும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த வகையில் இலங்கைத் தமிழ் சமூகத்தில் நடைபெறும் பாலியல் சம்பந்தமான ஒடுக்குமுறை பற்றிய செய்திகள், புலத்தில் (அதாவது இலங்கையில்) மட்டுமல்ல, இலகுவாக தமிழின உணர்வுகளை புலம்பெயர் சமூகத்திலும் தட்டி எழுப்பக் கூடியவை. இதன் அடிப்படையில் மேற்படி புலம்பெயர் இணையங்கள், மித்திரன் பத்திரிகைக்கு இணையாக, மஞ்சள் பத்திரிகைத் தரத்தில் செய்திகளை வெளியிடுவது, தமிழ் சமூகத்தில் ஆழ்மனதில் உள்ள வக்கிர உணர்வுகளுக்கும், பொய்த்தனமான தமிழின உணர்வுக்கும் தீனி போடுவதற்கேயொழிய, மக்களை ஒடுக்கு முறைக்கு எதிராக அணிதிரட்டவல்ல .

முடிவாக :

புலம்பெயர் தேசங்களில் பெண்ணியம் பேசுபவர்களும், மனிதவிடுதலை பற்றிக் கதைப்போரும், மக்கள்சார் இலக்கியம் படைப்பதாக கூறுவோரும், ஏன் முற்றுமுழுதான புலம்பெயர் சமூகமும், பாதிக்கப்ட்ட பெண்பிள்ளைகளுக்கு எதிராக, அவர்களின் உரிமைகளுக்கு முரணாக செயற்படும், இலங்கை அரசு உட்பட்ட தமிழ்தேசிய மஞ்சள் ஊடகங்களை எதிர்க்க முன்வர வேண்டும். சரியான முறையில், எமது தேசத்தின் மக்கள் ஒவ்வொருவரின் நலனையும் முன்னிறுத்தி, அவர்களின் குறைந்தபட்ச மனித உரிமைகளையாவது முன்னிறுத்தி, குறிப்பாக, எமது சமுகத்தில் பலதளங்களில் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் பெண்கள், குழந்தைகளின் மனித உரிமையை முன்னிறுத்தி எல்லா வழிகளிலும் போராட அனைவரும் முன்வர வேண்டும்.

ஜனநாயகம் (இலங்கை ) 13.12.2012