Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நாம் யார்க்கும் குடியல்லோம், எவனுக்கும் அஞ்சோம்!

யாழ், வன்னி, மட்டகளப்பு தாண்டி சிங்கள பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையினங்கள் சார்ந்து ஓரு போராட்டம் நடப்பது என்பது குறிப்பாக இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமான ஒரு வரலாற்றின் திருப்புமுனையாகும்!.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அசாத்திய சாகசங்களில் மட்டும்தான் சிங்கள மக்கள் திழைத்திருப்பார்கள், இதனை மீறி இந்த தசாப்தத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணப்போக்கிற்கு அல்லது இந்த அபிப்பிராய சிகரத்தின் அத்திவாரத்தின் முதலாவது கல் அகற்றப்பட்டுவிட்டது.

இலங்கையில் இனவாதம், தேசியவாதம், மதவாதம் என்பன தாண்டி “மானிடம்” என்னும் பெருவிருட்சத்தின் முளை ஒன்று முகிழ்ந்திருக்கிறது.

சிங்கள பெரும்பான்மையுடன் ஏனைய சிறுபான்மையினர் எப்படி இணைவது என்பது பற்றி ஆயிரம் கருத்து மோதல்கள், ஆய்வுக்களங்கள் நடத்தப்பட்டாலும் இதனை சாத்தியமாக்குவது நடைமுறை போராட்டம்தான் என்பதற்கு இன்று நடக்கும் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தான் உதாரணம்.

“இந்த இனங்களிடையான ஒன்றுபட்டதான உணர்வியல் போராட்டம்” என்பதை புலிகளினதும், புலம்பெயர் புண்ணாக்கு பிழைப்புகாரர்களின் “மாவீரம்” என்ற கற்பனாவாதத்துடன் துளியளவிலும் ஒப்பிடக்கூடாது.

மறுபக்கத்தில் அரசசார்பு சிங்கள, தமிழ் ஊடகம்கள் சொல்லும் வாதமானது “இத்தகைய மாணவர் போராட்டம் புலிகளின் மறுபிறப்பு” என்பதாகும்.

இந்த இரண்டு குறுந்தேசிய, பெரும் தேசிய தீவிரப்போக்குகளானது தத்தமது அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டதே!

இன்று உருவாகியுள்ள இந்த நேர்மையான அரசியல் போக்கானது கூட்டமைப்பு மற்றும் அரச சார்பு என்ற நிலைப்பாடுகளை தவிர்த்து சரியான சாணக்கியத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதே இலங்கையில் உருவாகும் புதிய சந்ததியினரின் எதிர்காலத் தேவையாகும்.

நாமறிந்த இலங்கை வரலாற்றில் சிங்களப் பகுதிகளில் ஜே.வீ.பி யினரின் கலவர காலங்களில் நடந்த படுகொலைகள் பற்றி தமிழ்த் தேசியத் தலமைகள் ஒருசொல்லில் கூட கண்டனக்குரல் கொடுக்கவில்லை.

இலங்கையில் நடந்த இனரீதியான போரட்டத்தில் உயிரிழந்த மற்றைய இயக்க போராளிகளின் உயிர்களையும், உயிரிழந்த மக்களையும் விடுதலைப்புலிகள் “தமக்கான” புலித்தேசியமாக்கியது எவ்வளவு கொடுமையானதோ? அதற்கு சமமானது தான் இந்த "ஒன்றுபட்ட பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை” புலிகளின் மாவீரத்தினத்துடன் ஒப்பிட்டு அதன் தொடர்ச்சிதான் என்று கழங்கப்படுத்துவது.

இந்த “நினைவு கூருதல்” என்ற பதத்திலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் யாழ் மையவாத கோட்பாட்டை வழி நடத்தியவர்களான தமிழ் தேசிய தலமைகளும், இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கிய சுயநலமிகளுமே. புலிகளின் கீழ்மட்டப் போராளிகள் பாவம்கள் மடடுமல்ல உணர்ச்சிமயப்பட்ட அரசியலில் மாட்டுப்பட்டவர்கள்.

சுருக்கமாக சொன்னால் “எய்தவனிருக்க அம்பை ஏன் நோகிறாய்” என்ற வாசகமே!

புலிகளாக்கப்பட்டவர்கள் எல்லோருமே ரத்தமும், தசையும், சிந்தனையும், மானிடத்தின் அபிலாசைகளும் கொண்டவர்களே!

வரலாற்று ரீதியில் பார்போமாகில் இனவாதத்தின் அடிப்படை கருவானது என்ன? இலங்கை அரசியல் வரலாற்றில் சீனசார்பு நிலைப்பாடு என்பது இந்தியாவின் பிராந்திய அதிகாரத்துவ நலனுக்கு எப்பொழுதுமே கேள்விக்குறிதான். இதன்பொருட்டு இந்தியா “இலங்கை தமிழ்த் தேசியம்” என்னும் துருப்புச்சீட்டினை உபயோகித்து வந்தது. காலனித்துவ காலத்திலிருந்து இன்றைய பிரபாகரன் வரைக்குமான தமிழ் தேசியத்தலமைகள் எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. எல்லோருமே இந்தியாவின் தூண்டிலில் மாட்டிய மீன்கள் தான்.

“இந்திய விரிவாதிக்கம்” என்ற இக்கோட்பாட்டினை சிங்கள இனவாதிகள் தமக்கான அரசியல் பரப்புரையின் கருப்பொருளாக்கினர். உலகத்திலேயே சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரேநாடு இலங்கை தான் என்ற உண்மையுடன் மேற்படி பரப்புரையும் இணைந்து சிங்கள மக்களிடம் ஏற்பட்ட பயக்கெடுதியானது தமிழ் மக்கள் மேல் இனவாதமாக உருமாறியது. இப்படியே தமிம்பேசும் மக்களான மலயக, முஸ்லிம் மக்களின் மேலும் ஏற்பட்டது.

எது எப்படி இருந்தாலும், சிங்கள பெரும்தேசியவாதமும், தமிழ் குறுந்தேசியவாதமும், தமிழ் மட்டுமல்ல சிறுபான்மையினத்தவரின் எவ்வகையான குறுந்தேசியவாதமும் நிராகரிக்கபட வேண்டியவையே.

இவற்றை எல்லாம் தாண்டி சரியான அரசியலை நிர்ணயிக்க எமக்கு முன்னால் உள்ள தடைகள் எவை என்பவற்றை நீக்க தத்துவார்தத்தையும் நடைமுறைமையையும் எப்படி இணைக்கப் போகிறோம் என்பதே எம்முன் உள்ள பாரிய கேள்வி.

-4/12/2012